Thursday 24 March 2016

ஹோலி - வண்ணங்களின் பண்டிகை!


 
இந்திய நாட்டின் வண்ணமயமான பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ஹோலி பண்டிகை. ஹோலி அல்லது ரங்க பஞ்சமி என்பது இந்துக்களின் வசந்தகால பண்டிகையாகும். துல்ஹேதி, துலாந்தி, துலேந்தி என்ற பெயர்களால் ஹோலி அழைக்கப்படுகிறது.
 

பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
 
ஹோலா என்ற வார்த்தைக்கு "நல்ல அறுவடைக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிப்பது" என்று அர்த்தம். அறுவடையைக் கொண்டாடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

 
இந்தியா, நேபாளம், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து மொரீஷியஸ் உள்பட இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில், ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
 

வட மாநிலங்களில் இப்பண்டிகை வெகு விமர்சியாகக் கொண்டாடப் படும். இந்த மகிழ்ச்சி பொங்கும் ஹோலி பண்டிகையில் கலர் பொடிகளையும், கலர் சாயங்களையும் ஒருவொருக்கு ஒருவர் பூசுவது வழக்கம்.

கிருஷ்ண பகவான் வளர்ந்த இடமான பிருந்தாவன் மற்றும் மதுராவில் (உத்தர பிரதேசம்) இந்த பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
 



கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, `பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
 



ஹோலி பண்டிகையின் புராணம்

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
 

 உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். இங்கு ஹோலி பண்டிகை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் இதை ஹோலா மொஹல்லா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

உத்தரபிரதேசம் பர்சானாவில் ஹோலியின் போது பெண்கள், ஆண்களை தடியால் அடித்து விரட்டுவது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும்.

சுல்தான்பூரில் வேடிக்கை விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மணிப்பூர்வாசிகள் ஹோலி பண்டிகையை 6 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.

குஜராத், ஒடிசா, காஷ்மீரில் மக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஹோலியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது.

நம் வாழ்வு வண்ண மயமாகட்டும்..

வசந்தம் வீசட்டும் என்ற நம்பிக்கையுடன் நாமும் வண்ணமயமாக ஹோலியை கொண்டாடுவோம்.



 

No comments:

Post a Comment