Tuesday 15 March 2016

மங்கள வாழ்வருளும் காரடையான் நோன்பு!


காரடையான் நோன்பை தென்னாட்டில்  ‘காமாக்ஷி விரதம் என்றும், சாவித்திரி நோன்பு ' என்றும் அழைப்பர். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம்  என்பதால் மாங்கல்ய பல விரதம் என்றும் சொல்லப்படுகிறது.

 கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லை குத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு, காராமணி கலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

 இந்த நோன்பில் திருமணமான பெண்கள் தங்களின் கணவர் ஆயுள் கூடவும், நோய் நொடியின்றி வாழவும், திருமணமாகாத கன்னியர்கள் விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல கணவர்மார்களை அடையவும் மஞ்சள் சரடு அணிந்து கொள்வது வழக்கம்.

பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜிக்க வேண்டும். இந்த பூஜையை மேற்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நாளும் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும் என்கின்றனர் முன்னோர்கள்.

 பூஜை செய்யும் முறை:

இதர பண்டிகைகளுக்கு செய்வதுபோல், வீட்டின் வாயில் நிலையிலும், ஸ்வாமி அறை நிலையிலும் மாவிலைத்தோரணம் கட்ட வேண்டும்.பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் வகையறாக்களை வழக்கம் போல் ஒரு தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும்.

பலா இலை அல்லது வாழை இலையில் பிரசாதம் வைக்க வேண்டும்நோன்பு அடைமுக்கியம். “நோன்பு அடைஅல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு நிவேதனம்  செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 

சொல்ல வேண்டிய வாக்கியம்

   
உருக்காத வெண்ணையும்ஒரடையும் நான் தருவேன்,
ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய்!

 என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள்.


சரடு கட்டிக் கொள்ள மந்திரம்

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா.

ஸ்லோகத்தின் அர்த்தம்:

ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்

 
நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். கன்னிபெண்கள் விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் சரடு அணிந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

மறுநாள் இரண்டு அடையை பசுமாட்டிற்க்குக்கொடுக்க வேண்டும்.

 நோன்பு பற்றிய கதைகள் :

1. காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணலில் பிடித்த சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே காரடையான் நோன்பு விரதம் இருந்ததாகவும், சிவபெருமான் பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை சொல்லப்படுகிறது.

 2. மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி சத்தியவானின் ஆயுள் ஒரு ஆண்டுதான் என்று அறிந்தும் அவனையே விரும்பி திருமணம் முடித்தாள். திருமணத்திற்குப்பின் மாமனார், மாமியார், கணவன் ஆகியோருடன் காட்டு வாழ்க்கை மேற்கொண்டு அவரவர்களுக்கு பணிவிடைகள் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்தாள். மாங்கல்ய பலம் வேண்டி விரதங்கள், நோன்புகள் அனைத்தையும் முறைப்படி அனுஷ்டித்தாள். சத்யவானின் ஆயுள்காலம் முடியும் நேரம் வந்தபோது  யமனை, சாவித்ரி பின் தொடர்ந்து சென்று, "சத்யவானின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்!'' ன்ற யமனிடம்என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். என் கற்புநிலை பழுதுபடாமல் எனக்கு நூறுபுத்திரர்கள் வேண்டும் கொடு'' என்று வரங்களை  கேட்டுப்பெற்றாள். சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றிருந்த யமதர்ம ராஜனும் வரம் கொடுக்க,  சாவித்திரி கணவன் உயிரை மீட்டு வந்ததாகக் கதை சொல்லப்படுகிறது.

 ராமாயணத்தைப் படித்தால், அது படிக்கப்படும் இடத்திற்குஆஞ்சநேயர் வந்து விடுவார் என்பதுபோல், சாவித்திரியின் சரித்திரத்தை கேட்டாலோ,  படித்தாலோ அந்த இடத்தில் சாவித்திரிதேவியே முன் வந்து தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசி வழங்குவாள்.

 பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள்.

 தேவையான பொருட்கள்:

 வறுத்த பச்சரிசி மாவு 1 கப்காராமணி 1/4 கப்தேங்காய் சிறிய பற்களாக கீரியது - அரை கப்வெல்லம் (பொடித்தது) 1 கப் ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்தண்ணீர் 2 கப்

 அடை செய்முறை:

 காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறு கையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். காரடையான் நோன்பு அடை ரெடி.



 
 
 

No comments:

Post a Comment