Friday 18 March 2016

நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி சமேத திருநரையூர்நம்பி!


    
தவம் பல செய்து ஞான நிலையை அடைந்தவர் மேதாவி மகரிஷி. அவர் தான் வழிபடும் மகாவிஷ்ணுவே, தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்டார். திருமணம் செய்துகொண்டு ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியபின் இப்படி ஆசைப்பட்டால் தவறில்லை. அப்படி எதுவுமின்றி மகாவிஷ்ணு மருமகனாக வரவேண்டும் என்று ஒருவர் நினைப்பது எப்படி கைகூடும்.

மரத்தடியில் குழந்தை :

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அனு தினமும் தான் வழிபடும் திருநாறையூர் தலத்திற்கு சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நிராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். முனிவரின் வேண்டுகோளை ஏற்ற பரந்தாமன், இதுபற்றி லட்சுமி தேவியிடம் கூறினார். தேவி தன் பதியை பிரிந்து, முனிவர் தவம் செய்த மகிழ மரத்தடியில், பங்குனி மாதம் உத் திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். வீறிட்டழுத குழந்தையின் குரலால் தவம் களைத்த முனிவர், குழந்தையைக் கண்டு திகைத்தார்.

குழந்தையை யாரோ விட்டுச் சென்றதாகக் கருதி அதன் தாயை தேடினார். நேரம் போனதே தவிர, குழந்தைக்கு தாய் என எவரையும் கண்டறிய முடியவில்லை. இதற்குள் குழந்தையின் அழுகுரல் அதிகரிக்க, குழந்தையின் பசிபோக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அவரே தாயுமானவராய் மாறினார். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் கொண்டு முனிவரது குடிலில் வளர்ந்த அந்தப் பெண் குழந்தை பருவம் எய்தியது. முனிவரோடு இணைந்து திருமாலை வழிபடுவதே அந்தப் பெண்ணின் கடமையாகிப்போனது.

இருப்பிடத்தை அறிந்த கருடன் :

தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு, சில ஆண்டுகளுக்குப்பின் தேவி இருக்குமிடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். தேவியைத் தேடி புறப்பட்ட கருடன், பல ஊர்களைச் சுற்றிய நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் திருத்தலத்திற்கு வந்தார். அங்கு முனிவரின் குடிலில் அவரின் மகளாக தேவி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

பிறகு மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தைக் கூறினார். முனிவரிடமும் தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய திருமால், மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கிருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு வேண்டினார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார். அப்போது குடிலின் உள்ளிருந்து வந்த முனிவர், இந்தக் காட்சியைக் கண்டு வெகுண்டெழுந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே தான் யார் என்பதை, சங்கு, சக்கரத்தைக் காட்டி முனிவருக்கு உணர்த்தினார் திருமால்.

இதையடுத்து தன்னிடம் வளர்ந்த பெண், லட்சுமி தேவி என்பதையும், வந்திருப்பவர் திருமால் என்பதையும் உணர்ந்தார். இருவரும் இறையம்சம் பொருந்தியவர் என்று அறிந்தும், பெண்ணை திருமணம் செய்து கொடுக்க சில நிபந்தனைகளை விதித்தார் மேதாவி முனிவர். அதன்படி, ‘வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்க வேண்டும், தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்க வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை. அதனை திருமால் ஏற்றுக்கொண்டார்.

தேவிக்கே முன்னுரிமை :

முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப்பெண்களை நாச்சியார் என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதனடிப்படையில் இக்கோவில் நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படுகின்றது.

ஆலய வாசலிலும் கருவறைக்கு அருகிலும் நின்று பார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகின்றார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால், வாழ்த்த வந்த ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்(சங்கர்ன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சியளிக்கின்றனர்.

ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் உள்ள அனைவரது சிலாரூபமும் நுண்ணிய கலை வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இது 14–வது திவ்யதேசமாகும். எழுபது சிவாலயங்களைக்கட்டி புகழ்பெற்ற கோச்செங்கண் சோழன், தன் இறப்புக்குப்பின் வைகுண்டம் போகவிரும்பினார். இதையடுத்து சைவக்கோவில் அமைப்பில் யாளி சிற்பங்களுடன் கட்டிய முதல் வைணவக்கோவில் இதுவாகும்.
 

ஆழ்வார்களால் பெருமாளும் நாச்சியாரும் கல்யாணகோலத்தில் கிழக்குநோக்கி
திருநரையூர்நம்பி–வஞ்சுளவள்ளி என்னும் திருநாமத்தில் அருள்பாலிக்கின்றனர்.
உற்சவர் ‘இடர்காத்தவரதன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இவர்களுக்கு முன்னால் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி கல்கருடன் வீற்றிருக்கிறார்.


இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. பிரகாரச்சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலது சுற்றில் சேனை முதலியவர் களும், ஸ்ரீலட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர்.

திருவிழா :


கோவிலின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றைக் கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்கள் மிகவும் பிரபலமானதாகும்.
இதுசமயம் நடைபெறும் வீதியுலாவின்போது தாயார் அம்சவாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருடவாகனத்தில் பின்னே செல்கிறார். கர்ப்பக்கிரகத்தில் இருந்து 4 பேர், பின்னர் 8 பேர், அடுத்து 16 பேர், 32 பேர், கடைசியாக 64 பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி, கல்கருடனை தேரடி வரை சுமந்து வந்து அவர் மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்துச்செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல்கருடனின் மேனி வியர்ப்பது இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் விஷயமாகும்.
மன்னனுக்கு அருளிய மாயவன் :

திருமங்கை தேசத்தை ஆண்ட நீலன் என்னும் குறுநில மன்னன், தன்னிடம் இருந்த பொருட்கள் யாவற்றையும் பெருமாள் சேவைக்காக செலவு செய்தார். பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போன நிலையில், வழிப்பறி செய்து திருப்பணியைத் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் தன்னை வைணவனாக ஏற்கும்படி, அவர் வைணவ சமூகத்தினரிடம் வேண்டினார். அவர்களோ, அவர் செய்யும் வழிப்பறி தொழிலை காரணம் காட்டி, வைணவராக ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் மனம் வருந்திய நீலன், இத்தலம் வந்து பெருமாளிடம் தன் மனக்குறையை கூறி தொழுதார்.

அவரது வேண்டுதலுக்கு செவி சாய்த்த இறைவன், அவர் முன்பு தோன்றி, அவரது இருதோள்களிலும் சங்கு, சக்கர முத்திரை பதித்து பரிபூரண வைணவனாக ஏற்று அருள்பாலித்தார். இறைவனின் செயலை எண்ணி மனம் பூரித்துப்போன நீலன், பெருமாளைப் புகழ்ந்து நூறு பாசுரங்களைப் பாடினார். இவரே பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ‘திருமங்கை ஆழ்வார்’ என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

No comments:

Post a Comment