Tuesday 15 March 2016

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!

அகிலம் யாவும் அகம் மகிழ
ஆனந்தத் தில் மனம்  குளிர
பரவசத் தில்இரு விழி கசிய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

'ஓம் ஓம் ஓம்' என்று உரைத்திடவே
உலகெங்கும் உன்பெயர் ஒலித்திடவே
உள்ளத்தை உன்னொளி நிறைத்திடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

ஜரிகைப் பட்டாடைகள் அலங்கரிக்க
முத்துமணி ஆரங்கள் ஜொலிஜோலிக்க
நறுமண மாலைகள் இசைந்தசைய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

மூவரும் தேவரும் பணிந்திடவே
மூவுலகும் உனை ஏற்றிடவே
முத்தமிழால் தினம் போற்றிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!



ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!

 கண்டங் கறுத்த சிவனுடனே
கண்ணாய் மணியாய் இருப்பவளே
கண்ணாரமுதே உமையவளே
கனிவாய் ஊஞ்சல் ஆடுகவே!

கஜமுகப் பிள்ளை உடனிருக்க
கந்தப் பிள்ளை துணையிருக்க
கண்ணுதலான் உன் அருகிருக்க
கனியமுதே நீ ஆடுகவே!

 வானவ ரெல்லாம் வணங்கி நிற்க
தானவ ரெல்லாம் தெண்டனிட
மானிட ரெல்லாம் பணிந்திருக்க
மகிழ்ந்தே ஊஞ்சல் ஆடுகவே!

 நான்முக னுடனே நாமகளும்
அரிதுயில் அரியுடன் பூமகளும்
அரனுடன் அகிலமும் போற்றிடவே
அம்மா நீயும் ஆடுகவே!

ஐந்தொழில் புரியும் தேவியளே
அன்பே உருவாம் அன்னையளே
கொஞ்சம் நீயும் ஓய்வெடுக்க
ஊஞ்சல் அமைத்தோம் ஆடுகவே!     

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!
 

No comments:

Post a Comment