Sunday 17 April 2016

ஸ்ரீராம நவமி!


நாடிய பொருள் கை கூடும்; ஞானமும் புகழுமுண்டாம்;
வீடியல் வழியதாக்கும்; வேரியங் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை 
சூடிய சிலைராமன் தோள்வலி கூறுவார்க்கே!


மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.


அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.



ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.



ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.



ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

"ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்"

ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.



ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் '' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது.


சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.

""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது "ஸ்ரீராம்" என்னும் தெய்வீக நாமம் ஆகும்.



"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்"



என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்கு கிறது.



ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.



ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.


'குலம் தரும், செல்வம் தந்திடும்.
அருளோடு பெரும் நிலம் அளிக்கும்
.
பெற்ற தாயினும் ஆயினச் செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
.
நாராயணா என்னும் நாமம்
'

என்று திருமங்கை ஆழ்வார் நாராயணநாம மகிமை பற்றி குறிப்பிடுவார்.


விரதமுறை
ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.


ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.



சுந்தரகாண்டத்தில் அனுமன்கடலைதாண்டுவதற்கு முன் சொன்னவரிகள் ஸ்ரீ ஜெயபஞ்சகம் எனப்படும்.

இதைப்பாடி அனுமனை வழிபட வீட்டில் செல்வம் பெருகும் ....

ஜயத்யதிபலோ ராமோ லசஷ்மணஸ்ச மஹாபலஹ்
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேண அபி பாலிதஹ
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கா்மனஹ
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்தர மாருதாத்மஜஹ
றராவண ஹஸஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரதஹ் பாத வைச்ச ஸஹஸ்ரஸஹ


அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்
நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப் படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.


விசிறித்தானம்
ஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர்.

ஸ்ரீ ராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர் களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.





No comments:

Post a Comment