Thursday 21 April 2016

சைத்ர சுக்ல லக்ஷ்மி பஞ்சமி - ஶ்ரீபஞ்சமி!


ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரேரணையால் தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது. 


சைத்ரமாத சுக்லபக்ஷ பஞ்சமியான இன்று ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை பூஜை செய்து மல்லிகைப்பூவால் லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லக்ஷ்மீ ஸ்தோத்ரம் சொல்லிப் ப்ரார்த்தித்தால் லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்படும். ஏழ்மை விலகும்.
  

 

ஹய (குதிரை) பூஜை.

ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமீ. அதாவது தேவாஸுரர்கள் மந்தரமலையை மத்தாக்கி வாஸுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது கடலிலிருந்து ”உச்சைஸ்ரவஸ்” என்னும் [பறக்கும் சக்தியுடைய] தேவக்குதிரை தோன்றிய நாள் தான் சைத்ர சுக்ல பஞ்சமி. 

 

இன்று குதிரையை (சில கந்தர்வர்களுடன் சேர்த்து) பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தான்யத்தை சாப்பிடத்தர வேண்டும். இதனால் நீதிமன்ற வ்யவஹாரங்களில் (சத்ருக்களிடமிருந்து) வெற்றி கிட்டும். வியாபார லாபமும் ஏற்படும். 

 

சித்திரை மாதம் பெருமை

* சித்திரை மாதம் திருதியை அன்றுதான் பகவான் மஹாவிஷ்ணு, மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டலோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

* சித்திரை மாத சுக்ல பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதி களில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

* வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அபிஷேகம் நடைபெறுகிறது.

* எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில்தான். அதே மாத சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோர் சித்ரகுப்தனை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

* அன்னை மீனாட்சி-சொக்கநாதர் திருமணம் நடைபெறுவதும், மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவமும், வருடம் தப்பாமல் சிறப்பாகக் கொண்டாடப்படுவது சித்திரை பௌர்ணமி தினத்தன்றே.

* சித்ராபௌர்ணமி நாளில் கடைப்பிடிக்கப்படும் சித்ரகுப்த விரதம், ஆயுளைக் கூட்டுவதோடு, அநேக புண்ணிய பலன்களை அளிக்கிறது. விரதமிருப்பவர்கள் உப்பில்லா உணவை ஒருவேளை மட்டும் அன்று உண்பார்கள்; பால், தயிர், நெய் இவற்றைக் கண்டிப்பாக விலக்குவார்கள்.

* சித்திரைமாத மூல நட்சத்திர நாளில் விரதமிருந்து பூஜைகள் மேற்கொண்டு தானம் செய்ய, நினைத்த காரியங்கள் அனைத்தும் இறையருளால் கிட்டுவதோடு நிறைவாக வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று லட்சுமியையும், நாராயணனையும் இணைத்து பூஜைகள் செய்யப்படுவதால் அது நட்சத்திர புருஷ விரதம் என்று வழங்கப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச திரிதியை திதியில் உமா மகேஸ்வரரைத் துதித்து பூஜை செய்தல் மிக நல்லது. அன்று தானங்கள் வழங்கினால் இம்மையில் வளமான வாழ்வும், மறுமையில் கைலாச பதவியும் கிட்டும். இந்த விரதம் சௌபாக்கிய சயன விரதம் என அழைக்கப்படுகிறது.

* சித்திரை மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையில் பார்வதி தேவியைத் துதித்து மேற்கொள்ளப்படும் பார்வதி விரதத்தில் அம்பிகைக்கு சர்க்கரையை நிவேதனம் செய்து வழிபட்டால் நல்வளங்கள் பெருகி இன்பமான வாழ்வு அமையும்.

* சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவ மூர்த்திக்கு பூஜை செய்து தயிர் சாதம் படைத்து விரதமிருந்தால், தீங்கிழைக்கும் எதிரிகள் மிகவும் பாதிப்படைவர். வாழ்வின் முன்னேற்றத் தடைகளும் தூள் தூளாகும். இதனை பரணி விரதமென்று அழைப்பர்.
 
 

 

No comments:

Post a Comment