Thursday 22 December 2016

விருப்பம் நிறைவேற்றும் ஏலவார் குழலி!



"நகரேஷு காஞ்சி" என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட திருத்தலம் காஞ்சீபுரம். வரலாற்றுப் பெருமையும், இலக்கியங்களில் இடம் பெற்ற பெருமையும் உடையது காஞ்சீபுரம். கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடைய காஞ்சீபுரம் முக்தி தரும் தலங்களாக கருதப்படும் 7 நகரங்களில் ஒன்றாகும்.
 

பஞ்சபூத தலங்களில் பூமித்தலமாக விளங்குவது காஞ்சீபுரம். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.
 

இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து பிரகாரங்களை உடைய இந்த ஆலயத்தின் இராஜகோபுரம் சுமார் 190 அடி உயரமும் 9 நிலைகளை உடையதாகவும் அமைந்துள்ளது. நான்காம் பிரகாரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம் பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது.

ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் ஈசான மூலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது.

தல வரலாறு: ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார்.



அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார்.



வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.  இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர்.



சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். இம்மாமரத்தை வலம் வரலாம்.

மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலதுபுறம் படிகளேறிச் சென்றால் ஏலவார் குழலி என்றழைக்கப்படும் அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது.
 

இதனருகில் "மாவடிவைகும் செவ்வேள்" சந்நிதி உள்ளது. குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் உள்ளது. இருந்தாலும் கந்தபுராணத்தில் வரும் "மூவிரு முகங்கள் போற்றி" எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார். இச்சந்தியில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.

ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற தலம் இதுவாகும். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.


108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சீபரத்தில் மட்டுமே 15 திவயதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது. 

கச்சி மயானம் என்கிற ஒரு தேவார வைப்புத் தலமும் இக்கோவிலின் உள்ளே சுவாமி சந்நிதி கொடி மரத்தின் முன்னுள்ளது.

மேலும் பல சந்நிதிகளும், சிற்பங்களும், மண்டபங்களும் உள்ள இந்த ஆலயத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. நேரில் சென்று ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு தொழுது தரிசிக்க வேண்டும்.


சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார்.

அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண்அடி யேன்பெற்ற வாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இக்கதிகத்திலுள்ள 10 பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.


ஆலய முகவரி:
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
பெரிய காஞ்சீபுரம்
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631502

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

 

No comments:

Post a Comment