Thursday 22 December 2016

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருக்கல்யாணம்!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
காஸ்யப முனிவரும் பிருகு முனிவரும் மற்றும் பலரும் தேவலோகத்தில் மிகப்பெரிய யாகத்தைச் செய்தார்கள். யாகத்தின் அவிர்பாகத்தை ஸ்ரீமன் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதற்காக பிருகு முனிவர், அவிர்பாகம் அடங்கிய கலசத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
 
காக்கும் தொழிலுக்குரியவன் செய்ய வேண்டிய காரியத்தை, மாபெரும் யாகத்தை, அந்த தெய்வத்தின் முதல் பக்தனாகிய தான் செய்த இறுமாப்பு, பிருகு முனிவரிடம் குடிகொண்டது. தன் சேவைக்கு மதிப்பு மிக அதிகம் என்று, தானே கணக்குப் போட்டுக் கொண்டார். தப்புக் கணக்கு!
 
நேராக ஸ்ரீவைகுண்டம் போனார். அங்கே நாராயணன் மோனத் துயிலில் ஆழ்ந்திருந்தார். அருகே மகாலட்சுமி, தன் தலைவனுக்கு பூஜை செய்துகொண்டிருந்தாள்.
 
பிருகு முனிவர் அவிர்பாக பாத்திரத்தை கையில் பிடித்தபடி காத்துக் கொண்டிருந்தார். நாராயணனோ துயில் நீங்கி எழவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? தான் வந்திருக்கும் காரியம் எவ்வளவு மகத்தானது என்று இந்த நாராயணனுக்கு ஏன் புரியவில்லை! கோபம் தலைக்கேறியது முனிவருக்கு. தன்னை நாராயணனுக்கும் மேலாகக் கருதிக்கொண்ட அவருக்கு, ஆணவமும் தலையில் கனத்தை சேர்த்தது. தன்னை கவனிக்காமல் ‘உறக்கத்தி’லேயே ஆழ்ந்திருக்கும் பரந்தாமனின் நெஞ்சைத் தன் காலால் உதைத்தார் பிருகு முனிவர்.
 
கண் மூடியிருந்தும் விழித்தே இருந்த நாராயணன் மெல்லக் கண் திறந்தார். கோபமாய் நின்றிருந்த முனிவரின் காலைத் தன் கரங்களால் பிடித்துக் கொண்டார். ‘‘என் மார்பில் ஏதோ ஒரு மலர் வந்து விழுந்ததுபோல உணர்ந்தேன். தங்களது மலர்ப்பாதம்தானா அது?’’ என்று பணிவாகக் கேட்டார். கூடவே, ‘‘அடடா… அவ்வாறு உதைத்த காலுக்கு வலிக்குமோ!’’ என்றும் நாராயணன் பதைபதைத்தார். தன் மார்பை உதைத்த அந்தக் காலைத் தன் மென்மலர்க் கரங்களால் பிடித்துவிட்டார்.
 
திடுக்கிட்டார் பிருகு முனிவர். தன்னுடைய தீச்செயலுக்கு இப்படி ஒரு ‘தண்டனை’யா? குற்ற உணர்வால் தகித்துக் கொண்டிருந்தார் முனிவர். ‘என்ன ஒரு அபவாதம் செய்துவிட்டேன்…’
ஆனால் அருகிலிருந்து மகாலட்சுமி சீறினாள். ‘‘உதைத்த காலுக்கு உபசாரம் செய்கிறீர்களே, இது தகுமா?’’ தன் நாயகனிடம் கேட்டாள். ‘‘உதைப்பட்டது உங்கள் பொன் மார்பு மட்டுமா? நான் உறையும் திரு இடமும் அதுதானே? தங்களுக்கு நான் பூஜை செய்து கொண்டிருந்த போது, கொஞ்சமும் நாகரிகமின்றி அடாது செயல் புரிந்த இந்த முனிவரிடம் ஏன் அன்பு பாராட்டுகிறீர்கள்? நான் வாழும் இருப்பிடம் இப்போது அசிங்கப்படுத்தப்பட்டு விட்டது. இனி அங்கு நான் வாழ முடியாது. நானும் பாவப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இதற்கு ஒரு விமோசனம் தேவை. எனக்கு மானிடர் உலகில் பிராயச்சித்தம் கிடைக்கும். நான் வருகிறேன்,’’ என்று படபடத்த மகாலட்சுமி, அந்த நொடியே விண்ணுலகம் துறந்தாள், மண்ணுலகம் வந்தாள்.
 
நாராயணன் மெல்லப் புன்னகைத்துக் கொண்டார். தன்னையும் மானுட வாழ்க்கைக்குத் தயார் பண்ணிக்கொண்டார்.
 
நாராயணன் பூலோகத்திற்கு வந்தார். நாடெல்லாம் அலைந்து திரிந்து, தன் மகாலட்சுமியின் பூலோக முகவரியைத் தேடினார். மானுடராய் அலைந்த களைப்பில் அசதியுடன் மயங்கிச் சாய்ந்தார். ஆனால் ஆயர்குல அழகனுக்கு அசதியென்றால், ஆவினத்துக்கு ஆகுமோ? ஓடோடி வந்தது ஒரு பசு. மடி நிறைந்த பாலை நாராயணன் வாய்க்குள் புகட்டியது.
 
தான் வளர்க்கும் பசுவின் மடிப்பால் மாயமாகிப் போனதை அறிந்த இடையன், தன் பசு தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவே கருதினான். கோபம் கொண்டான். பிருகு முனிவரைப் போலல்லாத, இழப்பின் வெளிப்பாடாக உண்டான கோபம். பால் தர மறுக்கும் பசுவின் பிடிவாதத்தை தண்டிக்க வேண்டும். கைக்குக் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீசினான்.
 
பசு அதுபோன்ற அவனுடைய கோபத்தை ஏற்கெனவே சந்தித்திருக்குமோ? லாவகமாக ஒதுங்கிக் கொண்டது. வீசப்பட்ட ஆயுதம் கடமையிலிருந்து தவறாமல், வேகமாய் எறிந்த கைக்கு மதிப்பளிக்கும் வகையில், நேராகச் சென்று, பசுவைத் தவற விட்டாலும், அதன் பாலை அருந்திய நாராயணனைச் சென்று தாக்கியது. நாராயணனின் முகவாய்க்கட்டை அந்தத் தாக்குதலுக்கு பதிலாக குருதியை வெளிப்படுத்தியது.
 
காயத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்ட நாராயணன், அருகில் இருந்த ஓர் ஆசிரமத்துக்கு வந்தார். அது, வராக முனிவரும் அவர் மனைவி வகுளாதேவியும் குடியிருக்கும் குடில். நாராயணனைப் பார்த்த வகுளாதேவி, அவருடைய நிலை கண்டு பதறினாலும், இரு கரம் நீட்டி, யாசோதையாய் வரவேற்றாள்.
 
அவருடைய முகவாய்க் கட்டை காயத்துக்கு மருந்திட்டு, அவருக்குப் புசிக்க வெண்ணெய் கொடுத்து, ஆசிரமத்தில் தன் சீடர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். புது அவதாரத்தில் இருந்த இறைவனை அடையாளம் கண்டுகொண்ட முனி பத்தினி, தனக்குப் பிள்ளையாக அந்த இறைவனே வந்திருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தாள். கணவர் வராக முனிவரிடம், ‘நம்பிள்ளை’ என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தாள். ஸ்ரீநிவாசன் என்று நாராயணனை அழைத்தாள். நாராயணன் அந்த ஆசிரமத்திலேயே வராக முனிவர், வகுளாதேவி தம்பதியின் மகனாகவே வாழ்ந்து வந்தார்.
 
பூலோகத்தில் ஆகாசராஜன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்திருந்தாள் மகாலட்சுமி.
 
அவளுக்கு பத்மாவதி என்று பெயரிட்டு சீராட்டிப் பாராட்டி வளர்த்து, கன்னிப் பெண்ணாகப் பார்த்து பிரமித்து மகிழ்ந்தான் ஆகாசராஜன்.
தினசரி நீராடலுக்காகத் தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்குச் சென்றாள் இளவரசி பத்மாவதி. கும்மாளமிட்டு நீரில் அளைந்து, குதித்து மகிழ்ந்தாள். பசுமையாய், யௌவனப் பொலிவுடன்,
அரச போக பளபளப்பில் தங்கச் சிலையாய் மின்னிக் கொண்டிருந்தாள் பத்மாவதி.
 
குளித்து முடித்துக் கரையேறியதும், அவளிடமிருந்து புறப்பட்ட நறுமணம், பக்கத்திலிருந்த காட்டையும் அடைந்ததோ! பிளிறியபடி ஓடோடி வந்தன யானைகள். ஆற்றங்கரையில் தங்களைப் பார்த்து மிரண்டு, அரண்டு தடுமாறி நிற்கும் பூக்களைப் பார்த்து யானைகளுக்கு மேலும் உற்சாகம். பயந்து நிற்கும் அந்தப் பெண்களை மேலும் துன்புறுத்த காலை முன்வைத்தன.
 
அப்போது அவற்றின் கண்கள் கூசுமளவுக்கு அங்கே ஓர் ஒளிப்பிழம்பு தோன்றியது. மனித ரூபத்தில் வந்த அந்தப் பேரொளி, வேறு யாருமல்ல, நாராயணனாகிய ஸ்ரீநிவாசன்தான். அந்தப் பேரொளியைக் கண்ட மாத்திரத்திலேயே யானைகள் அனைத்தும் வந்த வேகத்திலேயே திரும்பி ஓட்டமெடுத்தன. நாயகிக்கு உரிமை கொண்டாடுபவன் வந்துவிட்டான் என்று சரியாகக் கருதி விட்டனவோ?

விரட்டப்படாமலேயே ஓடிச் சென்ற யானைகளைப் பார்த்து நிம்மதியும் சந்தோஷமும் அடைந்து கைதட்டிக் குதித்த பத்மாவதி, தன்னை நெருங்கி நின்ற ஸ்ரீநிவாசன் மீது மோதிக் கொண்டாள். மோதியவள், காந்த ஈர்ப்பாக அவரை அணைத்துக் கொண்டாள்.
அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் உறைந்துபோயிருந்த தோழிகள் சுதாரித்துக் கொண்டு தம் தலைவியிடம் ஓடோடி வந்தார்கள். ஸ்ரீநிவாசனுடன் சண்டை போட்டார்கள். ‘‘விடு, விடு அவளை விடு. எங்கள் தோழியை விடு…’’ என்று பதறினார்கள்.
 
தன் மீது மோதி அணைத்து நின்ற பத்மாவதியைத் தானும் அணைத்துக் கொண்ட ஸ்ரீநிவாசன், அவளுடைய காதருகே குனிந்து, ‘வேதவதி’ என்று மெல்ல அழைத்தார். உடனே பத்மாவதிக்கு தன் பூர்வ ஜன்ம நினைவுகள் ஊர்வலமாய் மணம் முகிழ்த்து அணிவகுத்தன…
 
வேதவதி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணக்க விரும்புகிறாள். அக்னி தேவனை சாட்சியாக வைத்துக்கொண்டு தன் விருப்பத்தை அவன் மூலமாகவே ராமச்சந்திரனுக்குத் தெரியப்படுத்துகிறாள், வேதவதி. ‘சீதையைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டேன்’ என்று முற்றிலும் மறுத்துவிடுகிறான் ராமன். ‘வேதவதியும் சீதையின் அம்சம்தான்’ என்று அவனை சமாதானப்படுத்துகிறார் அக்னி. ஆனாலும் அதை ஏற்கவில்லை ராமன். ‘‘அப்படியானால் சரி, அந்த அம்சம் விரும்பினால் எனக்காக ஒரு யுகம் காத்திருக்கட்டும். இந்த யுகத்தில் நான் சீதைக்கு மட்டுமே உரியவன்’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுகிறான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
 
அப்போதைய ஏக்கம், ராமன் சொன்னதுபோலவே இந்த யுகத்தில் நிறைவேறப் போகிறதோ? கடந்த யுகத்துக் காதலனோ இந்த வீரன் என்றெண்ணி மயங்கி, மனம் சிலிர்க்க நின்றிருந்தாள்
பத்மாவதி. ஆனால் அவளோடுகூட இருந்தவர்களே துரோகம் இழைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆமாம், தோழிப் பெண்கள் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டனர்.
 
விவரத்தைத் தெரிந்து கொண்டார்கள் வராக முனிவரும் வகுளாதேவியும். ‘தம் மகனு’க்குத் திருமணம் செய்து பார்ப்பதில் அவர்களுக்கு உள்ளபடியே சந்தோஷம்தான். தகுதி வாய்ந்த பெண் கிடைத்திருக்கும்போது, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியதுதானே முறை?
 
ஆனால் முனிவர் பராமரிப்பில் வாழ்ந்தவன் என்பதால், பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் யோசிப்பானோ? அரண்மனைக் கிளி ஆசிரமக்கூட்டில் வாழ சம்மதிப்பானா?
 
உண்மைதான், ஆகாசராஜன் அவ்வளவு எளிதில் சம்மதிக்க வில்லைதான். இருப்பினும் ஒரு சமரசத்திற்கு அவன் தயார். அதாவது ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளை சீதனமாகத் தன் மகளுக்கு ஸ்ரீநிவாசன் தந்தால், தன் மகளை அவனுக்கு மணமுடித்து வைப்பானாம்! தன் மகள் ஒரு பட்ட மகிஷியாகத்தான் இருக்க வேண்டுமேயல்லாது, முனி பத்தினியாக இருப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.
 
அலங்கார பூஷிதையாக இருக்க வேண்டியவள், அணிகலன் இல்லா அழகுப் பதுமையாக இருப்பதிலும் அவனுக்கு விருப்பமில்லை. அரண்மனை சுகபோகங்களை  அனுபவித்தவள், ஆரண்யச் சூழலில் வாழ்வதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஒரு சராசரி தந்தையாகவே இருந்தான் ஆகாசராஜன், தன் மகள் ஒரு தெய்வக் குழந்தை என்பதை உணராமல்!
 
முனிசிரேஷ்டர்களான ஸ்ரீநிவாசனின் பெற்றோரால் ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளைக் கொடுக்க இயலாது என்று கருதியே அந்த நிபந்தனையை விதித்தான் ஆகாசராஜன். ஒரு கோடி பொற்காசுகள்! யார் தருவார்? கடனாகவே பெறுவதென்றாலும் இவ்வளவு பெரிய தொகையை யாரிடமிருந்து பெறுவது?
ஏன் இல்லை? குபேரன் இருக்கிறானே! அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா? கேட்டார்கள்.
 
குபேரன் கடன் ஒப்பந்த பத்திரத்தைத் தயாரித்தான்: ‘சேஷாசலத்தில் வசிக்கின்ற ஸ்ரீநிவாசனாகிய நான், குபேரனுக்கு எழுதிக் கொடுக்கும் பத்திரம். என் திருமணத்தின் பொருட்டு தங்களிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளைத் தங்களிடமோ அல்லது தாங்கள் நியமிக்கும் அதிகாரபூர்வமான நபரிடமோ பகுதி பகுதியாக செலுத்திவிட நான் சம்மதிக்கிறேன். அதற்கிடையில் என் அன்பர்களிடமிருந்து வரும் நன்கொடைகள், பக்தர்களிடமிருந்து வரும் காணிக்கைகள் ஆகியவற்றை வட்டியாகத் தர சம்மதிக்கிறேன்&ஸ்ரீநிவாசன்’.
 
ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. ஆனாலும் பத்மாவதிக்கு சரியான கோபம். ‘எனக்குப் பிடித்திருக்கிறது, அவருக்கும் பிடித்திருக்கிறது. எங்கள் திருமணத்தை நடத்த தந்தைக்கு ஏன் பொற்காசுகளை சீதனமாக அவர் தர வேண்டும்?’ இவ்வாறு நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்திய தன் தந்தையார் ஆகாசராஜன், தன் தவறை உணர வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீநிவாசனை விட்டுப் பிரிந்து கீழே திருப்பதியில் கோயில் கொண்டாள் அவள். தான் பெற்ற கடனை முழுமையாக தன் கணவர் அடைத்த பிறகே மலைக்கு வந்து அவருடன் இணைந்திருப்பது என்று முடிவெடுத்தாள்.
 
ஆகாசராஜன் பரிதவித்துப் போனான். ‘சீரும் சிறப்புமாக வாழ வேண்டிய தன் மகள் இப்படி கடன்காரனுக்கு மனைவியாகி விட்டாளே’ என்று வருந்தினான். ஆனால், ‘பக்தர்களின் கடன்களையெல்லாம் தீர்க்கும் பத்மாவதி அவள்தான்’ என்பது அவனுக்கு அப்போது புரியவில்லை.
 
ஸ்ரீநிவாசன்-பத்மாவதி திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் பிருகு முனிவர். பத்மாவதியாகிய மகாலட்சுமியிடமும் ஸ்ரீநிவாசனிடமும் அவர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
 
தான் மலை மீதும் தன் மனைவி மலையடிவாரத்திலும் கோயில் கொண்டிருப்பதைப்பற்றி ஸ்ரீநிவாசன் என்ன சொன்னார்? ‘‘இதுவும் நன்மைக்கே’’ என்று புன்னகை பூத்தார் அவர். ‘‘பூவுலகில் மனிதர்கள் தங்கள் பாவத்துக்கு பிராயச்சித்தமாக அல்லது தாம் பெற்ற நற்பேறு களுக்கு நன்றிக் கடனாக எனக்குக் காணிக்கைகள் செலுத்துவார்கள்.
 
இந்தக் காணிக்கை, நான் குபேரனுக்கு வட்டி செலுத்தப் பயன்படும். நான் குபேரனிடம் கடன் வாங்கியதும், எனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்ததும் உலக மக்களின் பாவ விமோசனத்துக் காகத்தான். பூவுலகம் நன்மையுறத்தான்…’’
 
அப்படித்தானே திருமலையின் ஸ்ரீநிவாசனுக்கு காணிக்கைகள் குவிந்து கொண்டிருக்கின்றன!




No comments:

Post a Comment