Saturday 1 October 2016

15- பேரானந்தம் அருள்வாள் பிரம்மவித்யாம்பிகை!

சக்தி பீடங்கள் - 15சோழ வளநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்த தலங்களில் 11வது பாடல் பெற்ற தலம், திருவெண்காடு. தில்லையில் திருநடனம் புரிவதற்கு முன்பே ஈசன் திருவெண்காட்டில் ஆடியதால் ஆதி சிதம்பரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. ராமாயணத்தில் இத்தலம் பற்றி சுவேதாரண்ய க்ஷேத்ரத்தில் (திருவெண்காடு) யமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரண், தூஷனனை ராமர் சம்ஹாரம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. வட மொழியில் சுவேதாரண்யம் என்றால் வெண்மையான காடு என்று பொருள். அதாவது, திருநீற்றுக்காடு. பிரம்மனுக்கு இவ்வூர் மயானமானதால் பெரிய மயானம் என்ற பெயரும் நவகிரகங்களில் புதன் இத்தலத்தில் வீரியம் பெற்றிருப்பதால் புதன் ஸ்தலம் என்றும் சிறப்பு பெறுகிறது. இங்கே ஒரு தர்மம் செய்தால் கோடிப் பலன்கள் கிடைக்குமாம். அதனால் தரும கோடி என்றும் அழைக்கிறார்கள். அக்னி, சூரியன், சந்திர தீர்த்தங்களும், ஆல், கொன்றை, வில்வம் என மூன்று தலமரங்களும் அமையப் பெற்றிருக்கிறது.

சுவேதாரண்யர் கோயில் நடுவில் உள்ளது. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபங்களுடன் கூடிய பெரிய சந்நதி இது. மூலஸ்தானத்தில் திருவெண்காடர் மகாலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார். திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்ம வித்யாம்பிகை என்ற பெரிய நாயகி எழுந்தருளி இருக்கிறார். திருநாங்கூரில் உள்ள மதங்காசிரமத்தில் மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற திருப்பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து, அவரைத் தனது  நாதராக அடைந்தார் என்று பத்மபுராணம் கூறுகிறது. ‘இவ்வுலகைக் காப்பதையே தேவி தவமாகக் கொண்டுள்ளாள். அம்பிகையின் தாமரைப் பாதங்கள், அப்பாதங்களில் ரத்னக் கற்களை பரல்களாக உடைய சிலம்பு, அச்செம்மணிகளின் ஒளிக்கற்றைகள் நகங்களில் பரவுவதால் செஞ்சடைகள் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. தன் கருணை கால் நகங்களிலிருந்து பாயும் கங்கையின் பிரவாகத்தின் இடையே அமர்ந்து இவ்வுலகை காப்பதைத் தவமாகக் கொண்டு தேவி விளங்குகிறாள்.

அச்செஞ்சடை, பரமன் கங்காதரரைப் போல் என் கண்களுக்குத் தோற்றமளிக்கிறது. பரமேஸ்வரனையே எண்ணும் அம்பிகையை தரிசித்து, அவளில் சிவத்தைக் காண்கிறேன். சிவத்தில் அவளைக் காண்கிறேன்,’ எனும் ஜடாலா மாஞ்சீரஸ் எனத் துவங்கும் மூக பஞ்சசதீயின் பாதாரவிந்த சதக துதி வர்ணிக்கிறது. அம்பிகையின் புன்சிரிப்பின் பெருமையோடு ஒப்பிட்டால் வெண்மையான பால் அதற்கு ஈடாகாது. பால் அம்பிகையின் புன்சிரிப்பைப் போல் வெண்மையாக மட்டுமே உள்ளது. பால், பிறர் கறப்பதால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், தேவியின் புன்சிரிப்போ வணங்குவோர்க்கு வேண்டியவற்றை விட அதிகமாகவே சுரந்தளிக்கிறது. காமதேனுவைப் போல் அனைத்தையும் பக்தர்களுக்கு அளிக்கிறது. திருஞானசம்பந்தர், திருவெண்காட்டின் வடஎல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கும் தயங்கினார்.

பிறகு ‘அம்மா’ என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் அவரை ஏந்திக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். ஆளுடைய பிள்ளையை இடுப்பில் சுமந்த கோலத்தில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட இடம், ‘கூப்பிட்டான் குளம்’ என்று அழைக்கப்பட்டு, இன்று ‘கோட்டான் குளம்’ என்றகிவிட்டது. திருப்பெண்ணாகடத்தில் வாழ்ந்தவர் வேளாண்குல முதல்வர் அச்சுதகளப்பாளராவார். திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் இவருடைய குலகுரு. அச்சுத களப்பாளருக்குக் குழந்தை இல்லை. தன் குருவிடம் தன் குறையைக் கூறி விண்ணப்பித்தார். குலகுருவும் சம்பந்தப் பெருமான் அருளிய தமிழ்த் திருமாமறையில் பூ போட்டு ஒரு ஏட்டை எடுத்தார். அதில் ‘பேயடையா’ எனும் திருப்பாட்டு வந்தது.

இதனால் உடனே அச்சுத களப்பாளரும் அவரது துணைவியாரும் இத்தலம் வந்து முக்குளங்களிலும் நீராடினர். பின் நோன்பும் இருந்தனர். அதன் பயனாக பிரம்மவித்யாம்பிகையின் திருவருளால் அவர்களுக்கு மழலைச்செல்வம் கிட்டியது. அக்குழந்தைக்கு மெய்கண்டதேவநாயனார் என்று பெயரிட்டனர். அவரே பின்னாளில் சிவஞான போதம் எனும் முழு முதல் நூலை இயற்றினார். ஆடல்வல்லான் என்ற அழகிய பெயருள்ள நடராஜருக்குத் தினமும் ஸ்படிக லிங்கத்தில் நான்கு முறை அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடல் வல்லானின் சொரூபமே நடனக்கலைக்கு இலக்கணமாகத் திகழுகிறது... ‘‘காலில் 14 புவனங்களைக் குறிக்கும் 14 சதங்கைகள் கொண்ட காப்பு. பிரணவம் முதல் நமஹ வரையில் உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் கோத்த அரைநாண் முடிந்த 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத்துண்டுகள் கட்டிய ஆரம்.

பதினாறு கலைகளைக் குறிப்பிடும் பதினாறு சடைகளும் 15 தொங்க, ஒரு சடை கட்டப்பட்டிருக்கிறது. திருவடியைக் காட்டும் திருக்கரத்திலிருந்து விழும் நீர் திருவடியில் நேரடியாக விழுவது போன்ற அமைப்பு உள்ளது’’ உள்ள ஆடல் வல்லானைக் கண்டு உமையவள் மயங்கியதில் அதிசயம் ஏதுமில்லையே! அகோர மூர்த்தி, கரிய உருவமும், எட்டுக் கரங்களும், ஏழு ஆயுதங்களும் கொண்டு எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கம்பீரமாக காட்சி தருகிறார். மருத்துவராசுரனை அழிக்க சிவபெருமான் அருளிய திருக்கோலம் இது. மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரமைதிதி, பூரநட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அகோர மூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோர மூர்த்தி மருத்துவாராசுரனை கொன்ற திருவிழா நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் அகோர மூர்த்தி பூஜை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் விசேஷமான பூஜை நடக்கும். அம்பாள் கோயில் மண்டபத்தின் இடப்பகுதியில் புதபகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை என சகல கலைகளிலும் மேன்மை அளிப்பவர் புதன். விடியற்காலையில் உரிய முறையில் சாந்தி செய்து, கந்தபுராணம், புதகவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தால் புதன் அருளைப் பெறலாம். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய பெயருடன் மூன்று தீர்த்தங்கள் மூன்றும் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி தேவிகளுக்கு உரியதாம். உமையவள் ஆசைப்பட்டபடி நடராஜர் இங்கே ஆடினாராம். அப்போது அவருடைய ஆனந்தக் கண்ணீராகச் சிந்திய மூன்று துளிகள் மூன்று திருக்குளங்களாக மாறியதாகச் சொல்லுகிறார்கள். இங்கே நீராடினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவெண்காடு உள்ளது.

அக்ஷர பீடங்கள் சுசீ பீடம்

பீடத்தின் பெயர் சுசீ பீடம். தேவியின் மேல் பல்வரிசை விழுந்த இடம். பீடசக்தியின் பெயர் நாராயணி. அக்ஷர சக்தியின் நாமம் ஐஷ்வர்யாத்மிகாதேவி எனும் சுஷ்கரேவதி. (ஐம்). இந்த அம்பிகை மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் அருள்கிறாள். தன் திருக்கரங்களில் சக்கரம், திரிசூலம், வரமுத்திரை, சங்கு, கதை, அபயமுத்திரையுடன் காட்சியளிக்கிறாள் என இத்தேவியின் த்யான ஸ்லோகம் கூறுகிறது. இத்தலத்தை ஸம்ஹரர் எனும் பைரவர் பாதுகாக்கிறார்.

 
 

No comments:

Post a Comment