Saturday 1 October 2016

நவராத்திரி - பூக்களும், நைவேத்தியங்களும்!


ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம்.

*நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் "ராம்லீலா' என்ற பெயரிலும் வங்காளிகள் "காளிபூஜை', "துர்க்கா பூஜை' என்றும் கர்நாடகத்தில் "தசரா பூஜை' என்றும் கொண்டாடுகின்றனர்.
 
*தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாக கொண்டாடுகின்றனர்.
 
*நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்க்கா; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
 
*விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.
 
*நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். "துர்காஷ்டமி' என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.
 
*நவராத்திரியில் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள். குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள். 
 
*நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் விரதம் இருப்பது சிறப்பு. படுக்கை, தலையணை உபயோகிக்காமல் படுப்பதும் நல்லதே. பெண்கள் காலை, மாலை நீராடி அம்பாள் பூஜை செய்து லலிதா சகஸ்ர நாமம், துர்க்கா சப்தமி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற சுலோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். விஜயதசமி அன்று இரவு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்து ஓரிரு பொம்மைகளை எடுக்க வேண்டும். மறுநாள் கொலுவை எடுத்துவிடலாம். 
 
*விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவது சிறப்பான வழிபாடாகும். ஒருசமயம், பரமேஸ்வரி வன்னி மரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அதுசமயம் சீதாதேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமன் வன்னிமரத்தை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான். அஞ்ஞாத வாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் வைத்துச் சென்றதாக புராணங்கள் உரைக்கின்றன.

 *நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். எல்லாமுமாக இருப்பது சக்தியே என்பதைச் சுட்டிக்காட்டும் பரிணாம வளர்ச்சியை விளக்கி இவை அன்னையின் அருளாலேயே நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கொலுவின் தத்துவமாகும்.
 
*அமாவாசையன்று பூஜைப் பொருள்களை சேமித்து உபவாசம் இருந்து பிரதமையன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும்.

 *பகலில் செய்யும் பூஜை இறைவனுக்கும் இரவில் செய்யும் பூஜை இறைவிக்கும் உரியவை என்பது பொதுவான வழக்கமாகும். ஆனால் நவராத்திரி ஒன்பது நாள்களிலும் பகலிலும் இரவிலும் செய்யும் பூஜைகள் தேவிக்கே நடைபெறுகின்றன.
 
*ஒன்பது நாள்களிலும் தேவியை பூஜிக்க முடியாதவர்கள் அஷ்டமியன்றாவது அவசியம் ஜகன்மாதாவை பூஜிக்க வேண்டும்.
 
முதல்நாள்வடிவம்: மகேஸ்வரி
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.
 
இரண்டாவது நாள்வடிவம் : ராஜராஜேஸ்வரி
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.
 
மூன்றாவது நாள்வடிவம் : வாராகி
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.
 
நான்காம் நாள்வடிவம் : மகாலட்சுமி
திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
 
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.
 
ஐந்தாம் நாள்வடிவம் : மோகினி
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.
வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
 
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
 
ஆறாம் நாள்வடிவம் : சண்டிகாதேவி
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
 
ஏழாம் நாள்வடிவம் : சாம்பவி துர்க்கை
திதி : சப்தமி.கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.
 
எட்டாம் நாள்வடிவம் : நரசிம்ம தாரினி
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.
 
ஒன்பதாம் நாள்வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.
 
9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.
 
இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment