Wednesday 26 October 2016

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள்!

தீபாவளி பண்டிகை (நம் சம்பிரதாய முறையில்)
நரகாசுர வதம் காரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. நரகசதுர்த்தசி ஸ்நானம் என்று போற்றப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் மிகவும் மகிமை வாய்ந்தது.

அன்றைய தினம், அனைத்து நீர் நிலைகளில், கங்கையும், நல்லெண்ணெயில் ஸ்ரீ லக்ஷ்மியும் வாசம் செய்கிறார்கள். 'தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா' என்பது ஐதீகம். ஆகவே, அன்று யாரைப் பார்த்தாலும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று விசாரிப்பது நமது சம்பிரதாயம்.

அன்றாடம் செய்யும் குளியலில், 'கங்கா, கங்கா' என்று உச்சரித்தபடி குளிக்க, கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும். அவ்வாறிருக்க, கங்கையே நம் வீடு தேடி வரும் நன்னாளில், சூரியோதயத்திற்கு முன் குளிக்க கங்கா ஸ்நானப் பலன் கட்டாயம் கிடைக்கும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தஸீம்
ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யமலோகம் ந பச்யதி (நிர்-147)
தீபாவளியன்று அதிகாலை சந்திரன் இருக்கும் போதே, தலையில் நல்லெண்ணை தேய்த்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் என்பதே ஏற்படாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.


தீபாவளிப்பண்டிகையின் முதல் நாள் செய்ய வேண்டியவை:
பூஜை அறையை மெழுகி, பூஜை சாமான்களை சுத்தப்படுத்தி, மாக்கோலமிட வேண்டும். வீட்டில் ஒட்டடை இல்லாமல் சுத்தப்படுத்துவது அவசியம்.

புதுத் துணிகளுக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். புடவைகளை அப்படியே வைக்காது, கொசுவி வைக்க வேண்டும். அட்டைப்பெட்டிகளைப் பிரிக்காது அப்படியே வைக்கக் கூடாது.

சில வீடுகளில், முதல் நாள் இரவு, பாயசம் முதலியவை வைத்து விருந்தாகச் சமைப்பது வழக்கம்.

கெய்சர்கள் இருந்தாலும், சம்பிரதாயத்தை அனுசரித்து, ஒரு அடுப்பில் கோலம் போட்டு, ஒரு எவர்சில்வர், அல்லது பித்தளைப் பானையில், சுற்றிலும் சுண்ணாம்பு தடவி, நடுநடுவே நான்கைந்து குங்குமப்பொட்டுகள் வைத்து, தண்ணீரை நிரப்பி அடுப்பில் வைக்கவும். தண்ணீரில் கங்கை தங்குவதால், இவ்வாறு கோலம் போட்டு அலங்காரம் செய்கிறோம்.

ஒரு பாத்திரத்தில், தேவையான நல்லெண்ணையை எடுத்து ஓமம், மிளகு, மஞ்சள் பொடி, வெற்றிலை இவைகளைப் போட்டு, பொங்கக் காய்ச்சி எடுத்து வைக்கவும். எண்ணை காய்ச்சுதலை இரவு எல்லா வேலைகளும் முடிந்த பிறகு செய்யலாம்.

ஒரு தாம்பாளத்தில், வெற்றிலை, பாக்கு, சீப்பு வாழைப்பழம், பூ, சந்தனம், குங்குமம், சீயக்காய் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வாசனை(ஸ்நான)பொடி, ஒரு கிண்ணத்தில்,காய்ச்சிய எண்ணை ஆகியவற்றை எடுத்து வைக்கவும். எண்ணைப் பாத்திரத்தைச் சுற்றிலும், சுண்ணாம்பு தடவி பொட்டுக்கள் வைக்கவும்.
இன்னொரு தாம்பாளம் அல்லது ஓலைக்கூடைகளில்(அக்கால வழக்கம்) புதுத் துணிகளை எடுத்து வைக்கவும். இனிப்புப் பண்டங்களையும், தீபாவளி மருந்து, பட்டாசு முதலியவற்றையும் எடுத்து வைக்கவும்.


தீபாவளியன்று:
சம்பிரதாயப்படி, மிக அதிகாலை, இரண்டரை மணிக்கு, வீட்டின் தலைவி எழுந்து, வெந்நீர் அடுப்பை ஏற்றிவிட்டு, வாசல் தெளித்து, பெரிய கோலம் இட்டு, பூஜையறையில் ஐந்து முகக் குத்துவிளக்கை ஏற்றி விட்டு, வீட்டிலுள்ளோரை எழுப்ப வேண்டும்.

ஆசனப்பலகை அல்லது பாயைப் போட்டு, கிழக்கு முகமாக வீட்டிலுள்ளோரை உட்கார வைக்க வேண்டும். எடுத்து வைத்துள்ள சாமான்களை வீட்டுக்குப் பெரியவர், இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு, எல்லோருக்கும் வாழைப்பழம் சாப்பிடக் கொடுப்பார்.

வெற்றிலை போடும் வழக்கம் உள்ளவர்கள், முதலில் வெற்றிலை போடுவார்கள். அன்றைய தினம் அதிகமான பலகாரங்கள் சாப்பிட வேண்டியிருப்பதால், ஜீரணமாகும் பொருட்டு, தீபாவளி மருந்தை சில வீடுகளில் முதலில் சாப்பிடுவார்கள்.

பிறகு, ஒரு பட்டாசை எடுத்து, வாசலில் வெடித்து விட்டு வரவேண்டும்.

முதலில் குழந்தைகளை உட்கார வைத்து, வீட்டில் முதிய பெண்மணி, 'கௌரி கல்யாணம்' அல்லது வேறு ஏதாவது மங்கலமான பாடல்களைப் பாடி, மூன்று சொட்டு நல்லெண்ணையை முதலில் தலையில் வைக்க வேண்டும்.

நீண்ட ஆயுளைப் பெற வேண்டி, 'அஸ்வத்தாம, பலி, வியாச, க்ருப, ஹனும, விபீஷண பரசுராம*' என்று ஏழு சிரஞ்சீவிகள் பெயரைச் சொல்லி, ஆண் குழந்தைகளின் வலக்கையில் ஏழு பொட்டு எண்ணை வைத்து, பின் தலையில் எண்ணை வைக்கலாம்.

பெண் குழந்தைகளுக்கு,

'அகல்யா, திரௌபதி, சீதா தாரா மண்டோதரி ததா,
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசனம்'

என்று உச்சரித்து எண்ணை வைக்கலாம்.
சுமங்கலிகள் இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்யும் போது சொல்ல சௌமாங்கல்யம் பெருகும். ஸ்லோகம் சொல்லும் போது, நெற்றி வகிட்டில், ஐந்து எண்ணைப் பொட்டுக்கள் வைத்து, பின் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.


பிறகு குளித்துவிட்டு, முதலில் ஏதாவதொரு பழைய ஆடையை அணிந்து கொண்டு, வீட்டுப் பெரியவர்களிடம் ஆசி பெற்று, புது உடையை அவர்கள் கையால் எடுத்துக் கொடுக்க வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.
சில வீடுகளில், குளித்த பின், முதலில் தீபாவளி மருந்து சாப்பிட்டு, அதன் பின் டிபன் சாப்பிடுவார்கள். டிபன் சாப்பிட்டு முடித்த பின்னரே புதுத் துணி அணியும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து செய்து கொள்ளவும்.

காலை நான்கு, நான்கரைக்குள் ஸ்நானம் செய்ய வேண்டும் அந்த நேரத்திலேயே கங்கை நம் இல்லம் தோறும் வருகிறாள். சூரிய உதயத்திற்கு முன் அதாவது, ஆறு மணிக்குள் டிபன் சாப்பிட வேண்டும் என்பது சம்பிரதாயம். பொதுவாக, இட்லி. பட்சணங்கள் முதலியவையே காலை டிபன்.

மதியம், பாயசம், தயிர்ப்பச்சடி, பொரியல், கூட்டு, மோர்க்குழம்பு வடை முதலியவை செய்து சமைப்பார்கள். அமாவாசையன்று தீபாவளி வந்தால், அன்று தர்ப்பண தினம் என்பதால், மோர்க்குழம்பு வைப்பார்கள்.

இல்லையெனில் சாம்பார் வைக்கலாம். அமாவாசையன்று தீபாவளி வந்தால், தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள், மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு தர்ப்பணம் செய்து, இரவு ஏதாவது டிபன் சாப்பிட வேண்டும்.

 
 

 

No comments:

Post a Comment