Wednesday 19 October 2016

இராம பட்டாபிஷேகக் காட்சி!

எது ஆனந்தம்? ஆனந்தம் தர்மத்தில் நிலைபெறுகிறது.
அந்தத் தர்மவடிவாகவே தோன்றிய அவதார புருஷன், 'இராமன்' என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்.               
 
 
தர்மத்தின் ஆனந்தம் அதனால் கிடைக்கும் பலனில் அல்ல, தர்மத்திலேயே, தர்மம் செய்வதிலேயே இருக்கிறது. இந்தத் தத்துவத்தின் ஆதர்ச புருஷன், ஸ்ரீராமன்.

இந்தத் தர்மத்தின் தலைவன் தேசத்தின் தலைவனாகிறான் என்றால் அந்தத் தேசம் கொள்ளும் இன்பத்திற்கும் ஆனந்தத்திற்கும் அளவேது!


காண்போர் கேட்போர் யாவருக்கும் சித்தம் தித்திக்கும் ஒரு காட்சி தான் இராம பட்டாபிஷேகக் காட்சி!

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


என்று அழகாக அக்காட்சியை வர்ணிக்கிறான் கம்பன்.

மன்னனுடைய சின்னங்களில் முக்கியமானது சிம்மாசனம், அரியணை. தர்மத்திற்கே அடையாளமாய் விளங்குவது சிம்மம். எனவேதான் தர்மமயமான ஆட்சி தரவேண்டி மன்னர்களுக்குச் சிம்மாசனம் அளிக்கிறார்கள்.


அன்று அரியணையில் அறமே அமர்ந்தபோது அதனைத் தாங்கியது - காவல் செய்தது யார்? தர்மமே அனைத்தையும் தாங்குகிறது, தர்மத்தைத் தாங்குகின்றது என்றும் ஒன்று உண்டா? ஆம், உண்டு. இறைமுதல் அனைவரையும் தாங்குவன பாதங்கள். இறைவன் பாதங்களோ கருணையே வடிவானவை. அந்தக் கருணையாலல்லவா அவை தன்னைப் பிடிக்கும் பக்தனுக்கு இறையருளைக் கூட்டி வைக்கின்றன? ஸதா இராஜாராமனுக்குப் பாதசேவனம் செய்து அந்தப் பாதவடிவே ஆகிவிட்ட "சிறிய திருவடி"யான அனுமன் தான் இங்கு அரியணை தாங்குவது. அந்தத் தர்மத்தையும் தாங்கும் பலமுடைய கருணையின் சிறப்பாலேயே கம்பன் முதலில் ஹனுமத் பிரபாவத்தைக் கூறுகிறான்.


தர்மத்தினை ஆளச் செய்வது எது? சாஸ்திரோக்தமான, வேதகர்மாக்களே தர்மத்தை மனதில் நிலைநிறுத்தும். அனந்தமான வைதீகத்தின் பிரதிநிதியாக வசிட்டன் இராமனுக்கு முடிசூட்டுகிறான்.


மனவுறுதி, நேர்மை, தியாகம் இவற்றின் சேர்க்கையே தவம். அந்தத் தவமே தர்மத்தின் மேல் கவிந்து அதனைத் தீமை அண்டாதபடி செய்கிறது. தர்மத்தின் ஒரு பகுதியான தபஸின் வடிவமே பரதன். அவன் இராமனுக்கு வெண்கொற்றக் குடை கவித்தது பொருத்தம் தானே!

தர்மத்தின் பிராணனே பக்தியும், ஞானமும். இடகலை, பிங்கலையான இந்தப் பிராணனைப் போன்றவர்களே இலக்குவனும் சத்ருக்கனும். அவர்கள் சத்திய வடிவினனுக்கு அழகாகச் சாமரம் இரட்டுகிறார்கள்.


இராமனின் இடப்பக்கத்தில் சீதை மகாராணியாக வீற்றிருக்கிறாள். பூமியை ஆளும் வேந்தனுக்குப் பூமிமகள் தேவியானது மிகவும் பொருத்தமே!


தர்மம் எந்த மனதை ஆளுகிறதோ, அந்த மனதைத் தேடிச் செல்வம், வெற்றி, குருவருள், திருவருள், ஞானம் எல்லாம் வருகின்றன. தர்மம் ஆளும் ஒவ்வொருவரும் தன்னை வென்று மன்னர்களாகிறார்கள். எனவே தான் கம்பன் சொல்கிறான், அன்று உலகில் உள்ள அனைவரும் தாங்களே மணிமுடி தரித்ததாக, தாங்களே மன்னர்களானதாக மகிழ்ந்தனர் என்று!

"இராம இராஜ்ஜியத்தில் அகால் ம்ருத்யு பயமில்லை, துஷ்ட மிருகங்களின் வாதையில்லை, வியாதியினால் துயரில்லை, திருடர்களால் பயமில்லை. மழை செழித்தது, வளம் கொழித்தது. மக்கள் அனைவரும் இராமனுடைய தர்மத்தையே ஆசரித்து, இராமன் இராமன் என்று அவன் மகிமையையே எப்போதும் போற்றினார்கள். ஜகத் முழுவதும் இராம மயமாயிற்று" என்று வான்மீகம் இராம இராஜ்ஜியத்தின் பெருமையைக் கூறுகிறது.


இன்றுவரை இராம இராஜ்யத்தின் பெருமை குன்றவில்லை, அந்த இராமனாம் மன்னனின் மகிமையும் குறையவில்லை! ஏனெனில் அன்று அரியணை ஏறியது அரி ஆயிற்றே! அறம் ஆயிற்றே! அழிவற்றதாய அறத்தின் அரசாட்சியின் மாட்சிமை சொல்லி முடியுமோ?

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல்.


தீமை அழிந்து தர்மம் உயரும்படியாய் இராம இராஜ்ஜியம் இப்பூமியில் தழைக்கச் செய்ததான இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்த திருநாள் என்று?


தீமையிருள் நீங்கித் தீபம் ஒளிரும் தீபாவளித் திருநாள் தான்!
இந்தத் தீபாவளித் திருநாளில் இராம இராஜ்ஜியம் இந்த மண்ணிலும் நம் மனங்களிலும் ஓங்க நாமும் இராம நாமங்கூறி தர்மத்தை வழிபடுவோமாக!
 
 

No comments:

Post a Comment