Thursday 5 May 2016

காசி விஸ்வநாதர் ஆலயம்!

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன.

ஜோதிர்லிங்கத் திருத்தலங் களில் முக்தி தரும் தலங்கள் ஏழு. அவற்றுள் முக்கியமான தலம் காசி விஸ்வநாதர் ஆலயம். வருணா, அசி ஆகிய இரு சிறு நதிகள் சங்கமிக்கும் இடம்தான் வாரணாசி. இந்த தலம் முக்தி அளிப்பவனின் (சிவன்) நிரந்தர வாசஸ்தலம். கங்கை நதி பாயும் காசியில் கோவில் கொண்டுள்ள விஸ்வ நாதரை வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்யும் பேறு பெற்றவர்கள் மனிதர்களில் உத்தமர் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

"ஆரூரில் பிறந்தால் முக்தி;
தில்லையை தரிசிக்க முக்தி;
அண்ணாமலையை நினைக்க முக்தி;
காசியில் மரித்தால் முக்தி'

என்பது சைவ மரபில் தொன்றுதொட்டு இருந்துவரும் ஐதீகம். காசியில் இறப்பவருக்கு மரணத்தறுவாயில் காசி விஸ்வநாதரே தாரக பிரம்மத்தை உபதேசித்து நற்கதி அடையச் செய்கிறார்.

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன், தேவர்களான இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் தவம் செய்த இடம் இது. அதேபோன்று தவசீலர்களான வியாசர், ஆதிசங்கரர் ஆகியோர் வசித்த இடமும் இதுதான்.

புனித கங்கை நதிக்கரையில் 64 முக்கிய படித்துறைகள் (காட்) உள்ளன. ஒவ்வொரு படித்துறைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

லிங்க வடிவில் இருக்கும் மூலவர்

காசி விஸ்வநாதர் கருவறையின் நடுவே இல்லாமல் சற்றே ஒரு மூலையில் உள்ளார். குனிந்த நிலையிலுள்ள மூல லிங்கத்தைச் சுற்றி வெள்ளியில் நான்குபுறமும் தொட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. "அபிஷேகப் பிரியரான' காசி விஸ்வநாதருக்கு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக நீர் (கங்கை நீர்), பால், தயிர், இளநீர் போன்றவற்றை தங்களின் கைப்பட அபிஷேகம் மற்றும் பூஜை செய்யலாம். தென்னாட்டில் இருப்பதுபோலன்றி, இந்த ஆலயத்தில் அனைவரும் லிங்கத்தைத் தொட்டு பூஜைசெய்து வணங்கலாம்.

இப்படி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டு வணங்கும்போது தெரிந்தோ தெரியாமலோ தவறிழைத்திருந்தால், மூலவரின் சாந்நித்யம் குறையாமல் இருப்பதற்காக தினமும் இரவு 7.00 மணியளவில் கருவறையைத் தூய்மை செய்துவிட்டு, ஸப்தரிஷி பூஜை மற்றும் ஆரத்தியைச் செய்கிறார்கள்.காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சற்று தொலைவில் காசி விசாலாட்சி ஆலயம் உள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு முன்பு ஸ்ரீஆதிசங்கரர் வருகை தந்தபோது, "அன்னபூர்ணா ஸ்துதி'யை இயற்றினார்.

காசியில் ஸ்ரீகாலபைரவர் ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீஆதி சங்கரர் இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது "காலபைரவாஷ்டகம்' எனும் காலபைரவர் துதியை இயற்றினார்.கங்கை நதிக்கரையில் தினமும் மாலை 7.00 மணியளவில் நடக்கும் "கங்கா ஹாரத்தி' எனும் கோலாகலமான கண்கவர் ஆரத்தி நிகழ்ச்சியைக் காண உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவு கூடுகிறார்கள்.

நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியா மலோ பாவங்களைச் செய்திருப்போம். அவற்றை எல்லாம் தீர்க்க புனித கங்கையில் நீராடி இதுவரை செய்த பாவங்களை அழித்துவிட்டு, இனி வாழும் நாட்களில் எந்தவித பாவங்களையும் செய்யாமலிருக்க காசி விஸ்வநாதர் அருள் புரியட்டும் என வேண்டிக்கொள்வோம்.

"
கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்த விபூஷித வாமபாகம்
நாராயண ப்ரியமநங்க மகாபஹாரம்
வாரணாஸீபுர பதிம் பஜ விஸ்வநாதம்."



 

 

 

 

No comments:

Post a Comment