Wednesday 4 May 2016

அருள் பொழியும் ஆயிரம்!


அருள் பொழியும் ஆயிரம் தாமரை மலர் அர்ச்சனை:

தமிழில் எண்ணிக்கையற்ற எண்ணிக்கையைக் குறிக்க ஏழு, ஆயிரம், கோடி என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இச்சொற்கள் ஏழு, ஆயிரம், கோடி என்ற எண்களைக் குறிப்பதுடன், எண்ணிக்கை அற்ற நிலையையும் குறிக்கின்றன.

தெய்வங்களை அவற்றின் ஆயிரமாயிரம் பெயர்களைக் கூறி மலரிட்டு வழிபடுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும். தெய்வங்களுக்கு எண்ணற்ற பெயர்கள் இருக்கின்றன. என்றாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட ஆயிரம் பெயர்களைக் கூறி வழிபட ஏதுவாக அத்தெய்வங்களின் சிறப்புக்களையும், பெருமை களையும், வீரதீர பராக்கிரமங்களையும் குறிக்கும் பெயர்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.

அவற்றிற்கு ஆயிரப்பெயர் அர்ச்சனை என்பது பெயராகும். தேவாரத்துள் சிவபெருமானை ஆயிரப்பெயர் கூறி அர்ச்சிக்கும் வழக்கத்தைக் குறித்துள்ளனர்.

 அப்பர் சுவாமிகள், ‘பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமான்’ என்று தேவர்கள் ஆயிரம் பெயர்களைக் கூறிச் சிவபெருமானைப் போற்றுவதைக் குறித்துள்ளார். சிவமகாபுராணத்தில் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் ஆயிரம் பெயர்கள் சிவஸகஸ்ரநாமம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

சகல தேவர்களும் சிவபெருமானை ஆயிரம் பெயர்களால் அர்ச்சித்து பேறு பெற்றுள்ளனர். பிரம்மன், திருமால், உருத்திரன், இந்திரன் போன்றவர்கள் ஆயிரப்பெயர் கூறி அர்ச்சனை செய்ததுடன் ஆயிரம் தாமரை மலர்களைப் பெருமான் திருவடியில் இட்டும் அர்ச்சனை செய்துள்ளனர்.

திருமால் ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு மகாதேவரை அர்ச்சித்து வலிய சக்ராயுதத்தைப் பெற்றார் என்று சிவபுராணமும், திருவீழிமிழலைப் புராணமும் கூறுகின்றன.

திருவீழிமிழலையில் தினமும் ஆயிரம் மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வந்த வேளையில் ஒருநாள் ஒரு பூ குறைய சற்றும் தாமதியாமல் திருமால் தனது கண்ணைப் பெயர்த்து ஆயிரமாவது மலராக இட்டு சிவபெருமானை வழிபட்டுப் பேறுபெற்றார் என்று தல புராணமும், தேவாரப் பாடல்களும் குறிப்பிடுகின்றன.

பிரம்மதேவன் ஆயிரம் பொன்தாமரை மலர்களைக் கொண்டு மகாதேவரை அர்ச்சித்தான். கலைமகளான சரஸ்வதி தேவி ஆயிரம் வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்துப் பேறுபெற்றாள்.

இந்திரன் ஆயிரம் நீலத் தாமரைகளையும், பொன் தாமரைகளையும் கொண்டு அர்ச்சித்துச் சுகபோக வாழ்வைப் பெற்றான் என்று திருந்துதேவன்குடித் தலவரலாறு கூறுகின்றது. சிவபெருமானை மட்டுமன்றி திருமால், திருமகள், சரஸ்வதி, கணபதி, முருகன், சாத்தன் போன்றவர்களையும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு அர்ச்சிக் கும் வழக்கம் உள்ளது.

ஆயிரம் அறுகம்புற்களைக் கொண்டு விநாயகப் பெருமானை யும், ஆயிரம் கடம்ப மலர்களைக் கொண்டு முருகனை யும், ஆயிரம் வில்வ தலங்கள், தாமரை மலர் களைக் கொண்டு மகாலட்சுமியையும் வழிபடுபவர் சகல செல்வங்களையும் பெற்று இனிது வாழ்வர்.

ஆயிரம் பெயரால் அர்ச்சித்து ஆயிரமாயிரம் நன்மைகளை அடைவோம்.



 

No comments:

Post a Comment