Saturday 7 May 2016

திருப்பம் தரும் திருவேங்கடமலை!


வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்பட வரம் அருளும் தலம் திருப்பதி. இங்கு ஏழுமலையான் குடியிருக்கும் கோயில் மிகப் பழைமையானது என்கின்றன ஞானநூல்கள். தொல்காப்பியம் போன்ற நூல்கள், இந்தத் தலத்தைவேங்கடம்என்றும் பெருமாளை வேங்கடத்தான் என்றும் குறிபிடுகின்றன. திருப்பதி நாயகனை தரிசிக்க மலையேறும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீவழித்துணை விநாயகர். இவரை வழிபட்டு விட்டு மலையேறத் துவங்கினால், நம் துணைக்கு வந்து காத்தருள்வார் என்பது ஐதீகம்.

அதேபோன்று, மலை மேல் நடந்து செல்லும் பக்தர்கள் ஸ்ரீபாத மண்டபத்தைக் கடந்ததும் பாறை ஒன்றைப் பார்க்கலாம். ஆஞ்சநேயரின் உருவம் பதிந்துள்ள இந்த பாறைக்குதலையேறு குண்டுஎன்று பெயர். இந்த இடத்தில் நின்று வணங்கி பயணத் தைத் தொடர்ந்தால், திருமலையின் உச்சிக்கு சென்று சேரும்வரை உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் வராது என்பது நம்பிக்கை.

கீழ் திருப்பதியில் இருந்து 12 கி.மீ. தொலைவு பயணித்தால், ஸ்ரீநிவாசமங்காபுரத்தை அடையலாம். திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீநிவாசன், பத்மாவதியுடன் தங்கியிருந்த இடம் இது. இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள். திருப்பதி ஏழுமலையானை முழுத் திருப்தியுடன் நின்று, நிதானித்து வழிபட முடியாதவர்கள், இவரை வழிபடலாம்.

கீழ் திருப்பதியில் இருந்து 4 கி.மீ. தொலைவு பயணித்தால் அலமேலு மங்காபுரத்தை அடையலாம். இதற்குத் திருச்சானூர் என்றும் பெயர் உண்டு. இங்கே தாயாருக்கு தனிக் கோயில் உள்ளது. கோயிலை ஒட்டி பத்மஸரோவ தீர்த்தம் எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் மீது மகாலட்சுமி தோன்றி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
திருப்பதி திருமலையில் சீனிவாசன் இருக்கிறார். திருமலை அடிவாரமான கீழ்திருப்பதியில் இருந்து, 5 கி.மீ., தூரத்திலுள்ள திருச்சானூரில், பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறாள்.

கிருஷ்ணாவதாரத்தை முடித்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கி இருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருகின. மீண்டும் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தைக் காண வந்த நாரதர், "யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?’ என, முனிவர்களை கேட்டார்.

எந்த தெய்வம் சாந்த குணமுள்ளதோ அவருக்கு அதன் பலனை தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேட, பிருகுமுனிவரை அனுப்பி வைத்தனர். பிருகுவும் வைகுண்டம் சென்றார். திருமால், பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். பகவானின் திருவடி பக்தனுக்கு இன்பம், பக்தனின் திருவடி பகவானுக்கு இன்பம் என்பதை, உலகுக்கு உணர்த்தும் நோக்கத்தில், திருமால் கோபம் கொள்ளாமல், உதைத்த பாதத்தை தடவிக் கொடுத்தார்.

ஆனால், திருமாலின் மனைவி மகாலட்சுமிக்கு, முனிவரின் செயலைத் தாங்க முடியவில்லை. முனிவரை தண்டிக்கும்படி திருமாலிடம் கூறினாள். திருமால் மறுத்து விட்டார். கோபம் கொண்டு பூலோகம் வந்து விட்டாள் லட்சுமி. தெய்வங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடா என கேட்கக் கூடாது. லட்சுமி எங்கிருக்கிறாளோ, அங்கு செழிப்பு ஏற்படும். அதைக்கருதியே, திருமால் இப்படி ஒரு நாடகமாடினார். மாயவன் அல்லவா! திருமாலும், திருமகளை தேடி பூவுலகத்தை சுற்றி அலைந்து, வேங்கடமலையில் மானிட வடிவில் வந்து தங்கினார்.
 
கிருஷ்ணாவதார காலத்தில், யசோதையாக இருந்து, இப்போது வகுளாதேவியாகப் பிறந்த பெண், அவரை தன் மகனாக ஏற்றாள். இந்நிலையில், சந்திரகிரி என்ற பகுதியை, ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத் தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு, "பத்மம்’ என்று பெயர் உண்டு. எனவே, குழந்தைக்கு, "பத்மாவதி’ என்று பெயரிட்டான்.

ராமாவதாரத்தின் போது, வேதவதி என்னும் பக்தை, ராமன் தன் மணாளனாக வேண்டி கோரிக்கை வைத்தாள். ராமனும் அவளிடம், "இப்போது நான் ஏகபத்தினி விரதனாக இருப்பதால், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படி, வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். ஆகாசராஜனின் மகளாக வளர்ந்தாள். அவர்கள் காட்டில் ஓரிடத்தில் சந்தித்தனர். காதல் கொண்டனர். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப் பெருமாள், பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக, திருமலையில் எழுந்தருளினார்.

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன், பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரம் எனும் திருச்சானூரில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள், தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு, காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் உள்ளது.

புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கும், கார்த்திகை மாதம் பத்மாவதி தாயாருக்கும் பிரம்மோற்சவம் நடக்கும். இந்நாட்களில் பத்மாவதி தாயார் தினமும் பவனி வருவதைத் தரிசிக்கலாம்.
 

No comments:

Post a Comment