Monday 23 May 2016

திருவருள் பெருக்கும் திருத்தணி!



Thiruthani


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில் வரும் ஜங்ஷன் அரக்கோணம். இங்கிருந்து வடக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தணி.


தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் சோளிங்கபுரம், கிழக்கில் திருவாலங்காடு, வடக்கில் திருக்காளத்தி மற்றும் திருப்பதி ஆகிய திருத்தலங்கள் சூழ நடுநாயகமாக அமைந்துள்ளது திருத்தணி.


Thiruthani


 மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்று கிறது கந்த புராணம்.



 ‘திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.


 ‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று ஸ்ரீமுருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார்.


 தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.


Thiruthani


 ஸ்ரீசுப்பிரமணியர் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள் நிமிடத்தில் நிறைவேறும் தலம் ஆதலால் க்ஷணிகாசலம், இங்கு நாள் தோறும் கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப் பொருளை உரைத்த தலம் ஆதலால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் ஆதலால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன் என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள் நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி, கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது திருத்தணிகை. உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச் சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.



 திருத்தணி முருகப் பெருமானை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.


சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவனார், வீர அட்டகாசமாகச் சிரித்ததால், வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். இவர் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவீரட்டா னேசுவர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வட கரையில் உள்ளது.
நந்தியாற்றின் தென்கரையில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் உள்ளது.


இங்குள்ள முருகப் பெருமானே சிவபெருமானுக்கு உபதேசித்ததாக ஐதீகம். இங்கிருந்த ஆறுமுக சுவாமி, தற்போது திருத்தணி மலை மீது உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருவதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியரை, ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் ஆதவன் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சியாகும். சூரியனின் கிரணங்கள் முதல் நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது அற்புதம். நந்தியாற்றின் கரையில் உள்ள வீரராகவஸ்வாமி திருக்கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்று.


 ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பங்குனி உத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் கூடிய நன்னாளில் இதில் நீராடி தணிகை முருகனை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.


 ஒரு முறை பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை விரும்பாத சிவனார், சிறையிலிருந்த பிரம்மனை மீட்டார். பிறகு, கர்வம் நீங்கிய பிரம்மன் சிவனாரது ஆலோசனைப்படி, இங்கு வந்து தவம் இயற்றி தணிகைவேலனை வழிபட்டு, அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய பிரம தீர்த்தம் மற்றும் பிரமேஸ்வரர் லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்.


 பிரம்மனின் மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் ஸ்ரீசரஸ்வதீஸ்வரர் லிங்கமும் இதற்குச் சான்று.


Thiruthani


 ஸ்ரீராமபிரான் இங்கு வந்து குமாரக் கடவுளை வணங்கி ஞானோபதேசம் பெற்றதாகக் கூறுவர். சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமர் சந்நிதானம், ஸ்ரீராமர் பூஜித்த சிவலிங்கம் மற்றும் அவர் உருவாக்கிய தீர்த்தமும் திருத்தணிகையில் உண்டு.



 நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி- பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசம் பெற்றார். இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, ‘சிவதத்துவ அமிர்தம்’ எனும் நதி ‘நந்தி ஆறு’ என்றும், நந்திதேவர் தவம் செய்த குகை ‘நந்தி குகை’ என்றும் வழங்கப்படுகின்றன.


 இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து சுனை ஒன்று (இந்திர நீலச்சுனை) ஏற்படுத்தி, அதன் கரையில் நீலோற்பலக் கொடியை வளர்த்தான். அதன் மலர்களால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் தணிகை வேலனை பூஜித்து சங்க- பதும நிதிகள், கற்பகத்தரு, சிந்தாமணி மற்றும் காமதேனு ஆகியவற்றைப் பெற்றான். இதனால் தணிகை முருகன், ‘இந்திர நீலச் சிலம்பினன்’ என்று பெயர் பெற்றார். இன்றும் இவரது அபிஷேகத்துக்கு இந்திர நீலச்சுனையின் தீர்த்தமே பயன்படுகிறது. இதில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி இல்லை.


‘திருத்தணியில் முருகப் பெருமானை தியானித்து தவம் இயற்றினால் முத்தமிழறிவும், ஞானமும் கிட்டும்!’ என்று சிவபெருமான் அருளியபடி அகத்தியர் இங்கு வந்து, தவம் இயற்றி முருகப் பெருமானின் அருள் பெற்றார்.


 பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ் கூறுகிறது. மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, தணிகை வேலனை வழி பட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


 தணிகை மலையின் தென்கிழக்குத் திசையில் சப்த ரிஷிகள், தணிகை முருகனை பூஜித்த இடம் உள்ளது. இங்கு அவர்கள் அமைத்த ஏழு சுனைகள் மற்றும் கன்னியர் கோயில் ஆகியன உள்ளன. அமைதியான இந்த இடம் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.


 துவாபர யுகத்தில், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை போகும் வழியில் தணிகைக்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் சென்றானாம்.



 திருப்புறம்பயம் திருத்தாண்டகத்தில், ‘கல்மலிந் தோங்கும் கழுநீர் குன்றம்’ என்று திருத்தணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர்.


 கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் வகுப்பு, போர்க்கள தல கை வகுப்பு, திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு, சித்து வகுப்பு, கந்தரந்தாதி, மயில் விருத்தம் மற்றும் திருப்புகழில் 65 பாடல்களால் திருத்தணி முருகப் பெருமானை போற்றிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.


 கந்தப்ப தேசிகர், பாம்பன் சுவாமிகள், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் ஆகியோரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.


 தொண்டை நாட்டில் மேற்பாடி எனும் ஊரின் அருகிலிருந்த வள்ளிமலையையும் அதைச் சார்ந்த வனப் பகுதிகளையும் நம்பிராசன் என்ற வேடுவ அரசன் ஆட்சி செய்து வந்தான். இந்தப் பகுதியில் உள்ள காட்டில் மான் ஒன்று குட்டி ஈன்றது. ஆனால், குட்டி மானாக இல்லாமல் பெண் குழந்தையாக இருந்தது. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றது மான்.


இந்த நிலையில் வேட்டையாட வந்த நம்பிராசன், காட்டில் தனியே அழுது கொண்டிருந்த பெண் குழந்தையைக் கண்டான். வள்ளிக் கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் கிடந்ததால் குழந்தைக்கு வள்ளி என்று பெயர் சூட்டி வளர்த்தான். அவள் வளர்ந்து பருவமெய்தியதும் குல வழக்கப்படி அவளை தினைப்புனம் காக்க அனுப்பினான். அங்கு வள்ளியைக் கண்ட நாரதர், ‘இவள், முருகனுக்கு ஏற்ற மங்கை!’ என்று கருதி, முருகப் பெருமானிடம் சென்று அவளது அழகை எடுத்துரைத்தார். பிறகு முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளி மணாளனாக திருத்தணியில் எழுந்தருளினார்.


 வேலூருக்கு அருகே திருவலம் என்ற ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வள்ளி மலை என்ற தலத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்ததாக ஐதீகம்.


 இங்குள்ள தீர்த்தங்களுள் முக்கியமானது குமார தீர்த்தம். சிவபெருமானிடமிருந்து ஞான சக்தியாகிய வேலாயுதத்தைப் பெற விரும்பிய முருகப் பெருமான், தணிகை மலையின் அடிவாரத்தில் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் கரையில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார்.


இந்தத் தீர்த்தத்தை குமார தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரவண பொய்கை ஆகிய பெயர்களாலும் அழைப்பர். இதன் கரையில் திருமடங்கள் பல அமைந்துள்ளதால், இதற்கு ‘மடம் கிராமம்’ என்றும் பெயர் உண்டு. வைகாசி மாதம் விசாகத் திருநாளில் இதில் நீராடி, முருகப் பெருமானையும், அவர் ஸ்தாபித்த ஸ்ரீகுமாரேஸ் வரரையும் வழிபட்டால், பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


 வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதம் 365 படிகளுடன் திகழ்கிறது திருத்தணி மலை. மலையின் மீது கார் மற்றும் பேருந்து செல்வதற்கேற்ற சாலை வசதியும் உண்டு. மலைக்கு மேல் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தேவ சிற்பியான தேவதச்சனால் கட்டப்பட்டது என்கின்றன புராணங்கள்.


 சுமார் 4000 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு அபராஜிதவர்ம பல்லவன், பராந்தகச் சோழன், மதுரை கண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்கிரம சோழன், வீரகம்பன உடையார், வீரபிரதாப சதாசிவதேவ ராயர், விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வேட் ஜமீன்தார்கள் ஆகியோரால் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கார்வேட் ஜமீன்தார்கள் பொன், வெள்ளியாலான அணி கலன்கள் மற்றும் வாகனங்களை இந்தக் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளனர்.


 திருத்தணி திருக்கோயில் சாளுக்கியர் காலக் கட்டட பாணியிலானது. தற்போது சுமார் 4 கோடி ரூபாய் செலவில், சுமார் 101 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கில் அமைய இருக்கும் இந்த ராஜ கோபுரம், சுமார் 25 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு நிர்மாணிக்கப்பட உள்ளது.


 திருக்கோயில் நான்கு பிராகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், தேரோடும் வீதியான நான்காம் பிராகாரத்தை அடையலாம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிராகாரத்துக்குச் செல்லும் நுழை வாயிலின் அருகே கற்பூர அகண்டம் உள்ளது. நான்காம் பிராகாரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள நவாப் வாத்திய மண்டபம் சிறப்பு பெற்றது. இங்கு தினசரி பூஜைகளின்போதும்,உற்சவ காலங்களிலும், இஸ்லாமிய வாத்தியக் காரர்கள், வாத்தியம் வாசிப்பது வழக்கம். இந்த மண்டபம் ‘காதர்’ என்ற இஸ்லாமிய அன்பர் ஒருவரால் கட்டப்பட்டது என்கிறார்கள்.


 நான்காம் பிராகாரத்தின் கிழக்கு வாசல் வழியாக சில படிகள் ஏறி, மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இங்கு கொடிமர விநாயகர், உமா மகேஸ்வரர், உச்சிப் பிள்ளையார் ஆகியோரது சந்நிதிகளும் ஐராவதம் எனும் யானை சிலையும் உள்ளன. இங்கு மயிலுக்குப் பதிலாக இந்த ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்வது சிறப்பு. இது மூலவர் சந்நிதியை நோக்கி அல் லாது கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறது.


Thiruthani


முருகப் பெருமானுக்குத் தன் மகள் தெய்வானையை மணம் செய்து வைத்த இந்திரன், அவளுக்குச் சீதனமாக அபூர்வ சக்தி வாய்ந்த ஐராவதம் யானையை வழங்கினான். இதனால் இந்திரனின் செல்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, அவன் தனது குறை தீர தணிகை வேலனை வழிபட்டான். முருகப் பெருமான் அவனிடம், ஐராவதத்தை திரும்ப அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதை ஏற்க மறுத்த இந்திரன், ‘ஐராவதம் எப்போதும் தேவலோகத்தை பார்த்தவாறு நின்றால் போதும்!’ என வேண்டினான். முருகப் பெருமானும் ஏற்றுக் கொண்டார். அதன்படியே இந்த ஐராவதம் கிழக்கு நோக்கி- தேவலோகத்தைப் பார்த்தபடி நிற்பதாக ஐதீகம்.



 இந்திரன் அளித்த மற்றொரு சீதனப் பொருள், பெரிய சந்தனக் கல். இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள இந்தக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப் பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை ‘ஸ்ரீபாதரேணு’ என்கிறார்கள். நெடுங்காலமாக சந்தனம் அரைக்கப்பட்டு வந்தாலும் இந்த சந்தனக் கல் சிறிதும் தேய்மானம் அடையாமல் உள்ளது!


 2-ஆம் பிராகாரத்தில் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீஆறுமுக சுவாமி, குமரேசுவர லிங்கம் (முருகனால் பூஜிக்கப்பெற்றது), உற்சவ மூர்த்திகள், ஸ்ரீஆபத்சகாய விநாயகர், வீரபத்திரர், அருணகிரிநாதர், நவவீரர்கள் மற்றும் ஸ்ரீசூரிய பகவான் ஆகியோரது சந்நிதிகளையும் தரிசிக்கலாம். இந்த பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், தூண் ஒன்றின் அருகில் உள்ள துவாரத்தின் வழியே மூலவர் கருவறை விமானத்தை தரிசிக்கலாம்.


 இரண்டாம் பிராகாரத்தில் இருந்து, ‘பஞ்சாட்சரப் படிகள்’ எனப்படும் ஐந்து படிகளில் ஏறி முதல் பிராகாரத்தை அடையலாம். இங்கு ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீபைரவர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள ருத்திராட்ச மண்டபத்தில் (சுமார் ஒரு லட்சம் ருத்திராட்சங்களால் ஆனது) உற்சவர் அருள் பாலிக்கிறார்.


 முதல் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் ஸ்ரீபாலமுருகன் சந்நிதி உள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று இவருக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது.


Thiruthani

முதல் பிராகாரத்தில் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி ஸ்தான மண்டபமும் அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. இந்த பிராகாரத்தின் தென் புறம் வள்ளியம்மை தன் இடக் கரத்தில் தாமரை மலரோடும், வட புறம் தெய்வானை தன் வலக்கரத்தில் நீலோற்பல மலரோடும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.



 மூலவரான ஸ்ரீதணிகைநாதரது சந்நிதி சற்று பின்னேயும், வள்ளி-தெய்வானை தேவியரது சந்நிதிகள் முன்புறம் சற்றுத் தள்ளியும் அமைந்துள்ளன. தமிழின் ஆயுத எழுத்து (ஃ) போன்ற இந்த அமைப்பு, தணிகைக் கோயிலின் தனிச் சிறப்பு.


கோயிலின் கர்ப்பக் கிரகத்தில் தணிகை பிரானான முருகப் பெருமான் கடம்பமாலை அணிந்து, தன் வலக் கரத்தில் வேலாயுதம் தாங்கி, இடக் கரத்தை ஊரு அஸ்தமாக தொடையில் வைத்து நின்ற திருக்கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார். சூரபதுமனை அழிக்க தன் அன்னையிடம் சக்திவேல் பெற்ற முருகப் பெருமான், பக்தர்களுக்கு ஞானம் அருளும் பொருட்டு தன் தந்தையிடம் இருந்து ஞானவேல் பெற்று அருள் புரிவதால், இவரை ஞானசக்திதரர் என்பர்.


 திருமாலிடம் இருந்து தான் கைப்பற்றிய சக்ராயுதத்தை முருகன் மீது ஏவினான் தாரகாசுரன். அதைத் தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் முருகன். பிறகு, அந்த சக்ராயுதத்தை திருமாலிடமே ஒப்படைத்தாராம். இன்றும் தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த தழும்பைக் காணலாம். இவரின் பாதத்தின் கீழே ஆறெழுத்து மந்திரம் பொறித்த யந்திரம் உள்ளது
.
 இங்கு, பள்ளியறை பூஜையின்போது ஒரு நாள் வள்ளிதேவியுடனும், மறு நாள் தெய்வயானையுடனும் பள்ளியறைக்கு எழுந்தருள்கிறார் முருகப் பெருமான். எந்த முருகன் தலத்திலும் இல்லாத சிறப்பு இது.
 கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.


 திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.


 முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் ஆதலால், திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கந்த சஷ்டி ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


 நவ கன்னிகைகள் தினமும் இங்கு வந்து தணிகை முருகனை பூஜித்துச் செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. கோயிலின் தென்புறம் நவ கன்னிகை கோயில் உள்ளது. இங்கு தேவி உமாமகேஸ்வரி ‘புற்று’ வடிவில் குடி கொண்டுள்ளாள். இதன் அருகே எப்போதும் நீர் வற்றாத ஏழு சுனைகள் உள்ளன. இங்கு வந்து தீர்த்தமாடி, திருத்தணி மலையேறி தணிகை முருகனை வழிபட்டுச் செல்வதாகக் கூறுகிறார்கள்.


 இந்தத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன.


 பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் பிரதோஷ நேரத்தில் (மாலை 4:30 முதல் 6.00 மணி வரை) இந்தக் கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்து முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால் குறை தீர்ந்து நலம் பெறுவர் என்பது பக்தர்களது நம்பிக்கை.


 முடி காணிக்கை, எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் ஆகியன இந்தத் தலத்தின் முக்கியமான பிரார்த்தனைகளாகும்.
 திருத்தணியில் பக்தர்கள் எடுக்கும் காவடி, வித்தியாசமானது. நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.


 திருத்தணி- பள்ளிப்பட்டு சாலையில் உள்ள தலம் நெடியமலை (நீண்டமலை). சுமார் 600 படிகள் ஏறிச் சென்றால் மலைக்கு மேல் உள்ள ஸ்ரீசெங்கல்வராய சுவாமி (முருகன்) ஆலயத்தை அடையலாம். முருகப் பெருமான் திருத்தணிக்குச் செல்லும்போது இங்கு சிறிது காலம் தங்கியிருந்தாராம். அதனால் நெடிய மலை ஸ்ரீசெங்கல்வராய சுவாமியை தரிசித்து வழிபட்ட பிறகே திருத்தணி முருகனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Thiruthani


 திருப்பதிக்குச் சென்று மாலவனை வணங்கும் பக்தர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவோ அல்லது திரும்பும்போதோ திருத்தணி வந்து மால்மருகனையும் வணங்கிச் செல்வது வழக்கம்.

திருத்தணிக் கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன: காலை 5 மணி- விஸ்வரூப தரிசனம், காலை 8 மணி- காலைச் சந்தி அபிஷேக பூஜை, காலை 10 மணி- உச்சிகால அபிஷேக பூஜை, மாலை 5 மணி- சாயரட்சை அபிஷேக பூஜை, இரவு 8 மணி- அர்த்தஜாம பூஜை, இரவு 9 மணி- பள்ளியறை பூஜை.


 திருத்தணி படித்திருவிழா பிரசித்திப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், புது வருடப் பிறப்பின்போது பழங்கள் மற்றும் மாலை மரியாதைகளுடன் சென்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த துரைமார்களை சந்திக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதற்கு மாற்றாக, தேச பக்தியுடன் தெய்வ பக்தியையும் வளர்க்கும் விதம் புத்தாண்டு தினத்தில் திருத்தணி முருகனை வணங்கும் விதம் ஏற்படுத்தப்பட்டதே திருத்தணி படித் திருவிழா.


வள்ளிமலை சுவாமிகளால் 31.12.1917 மற்றும் 1.1.1918 ஆகிய நாட்களில் திருத்தணி படித் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர், ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளால் ‘திருப்புகழ் மணி’ என்று பட்டம் சூட்டப்பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகள் ஆகியோரால் இந்த விழா பிரபலமானது.


 1921-ஆம் ஆண்டு தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை மற்றும் பல அடியார்களுடன் திருத்தணி சென்று, ‘திருத்தணித் திருப்புகழ்த் திருவிழா’வை திருப்புகழ் சச்சிதானந்த மகான் தொடங்கி வைத்தார்
 திருப்புகழ் முத்துஸ்வாமி ஐயர் மற்றும் அவர் மகன் திருப்புகழ் டாக்டர் மணி ஐயர் ஆகியோர், ‘அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்’ என்ற அமைப்பின் மூலம் திருத்தணி படி விழாவை ஏற்பாடு செய்தனர். அது இன்றளவும் தொடர்கிறது.


 வருடம்தோறும் டிசம்பர் 31-ஆம் தேதி திருத்தணி ஆலயத்தில் தீபம் ஏற்றியதும், அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் திருப்புகழ் பாடி நிவேத்தியம் செய்து தீபம் ஏற்றுவார்கள் பக்தர்கள். இவ்வாறு 365 படிக்கட்டுகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
 தமிழ் புத்தாண்டு தினத்தில் திருப்படி உற்சவத்துடன் 1008 பால்குட விழாவையும் (1980-ஆம் ஆண்டு) ஏற்படுத்தியவர் மயிலை மாமுனிவர் குருஜி சுந்தராம சுவாமிகள். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.
 ஆனி மாதம் 29-ஆம் தேதி ‘வர்தந்தி’ எனப்படும் ஓர் உற்சவம் திருத்தணியில் நடைபெறும். அன்று முருகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இரவில், முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் தரிசனம் தருவார். மேலும் இந்தத் தலத்தில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, திருக்கார்த்திகை மற்றும் மாசி மாத கிருத்திகை நாட்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.
 வள்ளலார் வழிவந்த கர்ணீகர் சமூகத்தவரால் ஏற்படுத்தப்பட்ட தைப்பூச கமிட்டி சார்பில் தைப்பூசத்தன்று காலையில் திருத்தணி முருகனுக்கு சந்தனக் காப்பு, வள்ளி- தெய்வானை தேவியருக்கு மஞ்சள் காப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வைபவங்கள் நடைபெறும்.


மதியம் அன்னதானம். மாலை வேளையில் மதுக்கவச ஸ்தாபனம், மூலவர் அபிஷேகம் மற்றும் புத்தாடை சார்த்துதலும் இரவில் குதிரை வாகனம் மற்றும் தங்கத் தேரில் உற்சவரது பவனியும் நடைபெறும். திருக்கோயில் யானை முன்னே வர தைப்பூச முழு நிலவில் முருகப் பெருமான் உலா வரும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசக் கமிட்டித் தலைவர் கே. பரசுராம பிள்ளை தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
 மாசி மாதம் முருகப் பெருமான்- வள்ளிதேவி திருக்கல்யாணமும், சித்திரை மாதம் முருகப் பெருமான்- தெய்வானை திருக்கல்யாணமும் பிரம்மோற்சவ விழாக்களாக வெகு விமரிசையுடன் நடைபெறுகின்றன.


 மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.


 ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதியன்று திருத்தணியில் ராமலிங்க அடிகளாருக்கு விழா நடைபெறுகிறது.


எண்ணற்ற அருளாளர்கள் தணிகை வேலனை வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள். ஒரு முறை அடியார்கள் சிலருடன் திருப்புகழ் பாடியபடி தணிகை மலையை வலம் வந்து கொண்டிருந்தார் அருணகிரிநாதர். அப்போது, அவரை சிலர் கேலி செய்தனர். மனம் வருந்திய அருணகிரிநாதர் தணிகை முருகனை மன தில் தியானித்து, ‘சினத்தவர் முடிக்கும்...’ எனத் துவங்கும் திருப்புகழ் பாடலின் நான்கு அடிகளைப் பாடினார். மறு கணம் அவரைக் கேலி செய்தவர்கள் சாம்பலாயினர்.


அதன் பிறகு, அருணகிரிநாதர் அந்தப் பாடலின் அடுத்த நான்கு அடிகளைப் பாட... முருகப் பெருமான் அருளால் மாண்டவர்கள் மீண்டும் எழுந்தனர். மனம் திருந்தி முருகப் பெருமானின் அடியார்களாயினர்.
 ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் முருகனின் தீவிர பக்தர். நாடெங்கும் திருப்புகழ் மகிமையை பரப்பியவர்.
ஒரு முறை அடியார்கள் புடைசூழ சுவாமிகள், ‘வேல் மயிலோனுக்கு அரோஹரா!’ என்ற கோஷத்துடன் தணிகை மலையை வலம் வந்து கொண்டிருந்தார். சுவாமிகள் ‘அரோஹரா’ கோஷம் எழுப்ப... அவரை பின்பற்றி அடியார்களும் கோஷமிட்டபடி வலம் வந்தனர். அப்போது பசியால் தவித்த அடியார் ஒருவர், ‘இட்லி, காபிக்கு அரோஹரா’ என்று கோஷமிட்டாராம்!


சற்று நேரத்தில் வயோதிகர் ஒருவர் எதிர்ப்பட்டு, சுவாமிகளுக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் தான் கொண்டு வந்திருந்த இட்லி- காபியை வழங்கினாராம். எவரும் எதிர்பாராவிதம் வயோதிகராக வந்து தங்களது பசியாற்றியது சாட்சாத் தணிகை முருகனே என்றுணர்ந்து மெய்சிலிர்த்தார் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள்.


 அது 1917-ஆம் ஆண்டு ஜூன் மாதம். ஒரு நாள் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் அடியார்களுடன் சேர்ந்து திருப்புகழ் பாடல்களை மெய்ம்மறந்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது, ‘திருப்புகழோதுங் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்பதற்கு பதிலாக ‘தெருத் திண்ணைதோறும் திருப்புகழ் ஓதுந் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்று சுவாமிகள் பாட அடியார்கள் திகைத்தனர். எனினும் அவர்களும் அப்படியே பாடினர். பஜனை முடிந்ததும் அடியார்கள் அவரிடம் ‘‘ஏன் இப்படி?’’ என்று கேட்டனர்.


சுவாமிகள், ‘‘ஏன் அப்படி பாடினேன் என்று எனக்கே தெரியவில்லை’’ என்று பதிலளித்தார்.
மறு நாள் இரவு 8 மணியளவில் திருத்தணி சீர்கர்ணீக மடத்தின் திண்ணையில் அமர்ந்து திருப்புகழ் பாராயணத்தைத் தொடங்கினார் சுவாமிகள். இது நள்ளிரவு வரை தொடர்ந்தது. திடீரென வானில் பேரொளி ஒன்று எழும்பியது. அதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.


Thiruthani


சிறிது நேரத்தில் கையில் விசிறியுடன் அங்கு வந்த வேதியர் ஒருவர், திண்ணையின் மீது ஏறி சுவாமிகளின் அருகில் அமர்ந்தார். எல்லோரது கவனமும் திருப்புகழ் பாடலில் லயித்திருந்தனர். திடீரென திண்ணையில் இருந்து இறங்கிய வேதியர், அருகில் உள்ள திருக்குளத்தின் படிக்கட்டு பகுதிக்குச் சென்று களிப்புடன் நடனமாடினார். பின்னர் மாயமாக மறைந்து போனார்.



அப்போதுதான் ‘வந்தவர் வேதியரல்ல; உலகு போற்றும் தணிகைநாதனே!’ என்று சுவாமிகள் உட்பட அனைவரும் உணர்ந்தனர். ‘தனது வருகையை முன் கூட்டியே உணர்த்தவே ஸ்ரீசுப்பிரமண்ய ஸ்வாமி தெருத் திண்ணை தோறும் திருப்புகழோதுந் திருத்தணி மேவும் பெருமாளே என்று வள்ளிமலை சுவாமிகளை பாட வைத்தார் போலும்!’ என்று மெய்சிலிர்த்தனர் அடியார்கள்.


 இந்துக்களும், முஸ்லிம்களும் சமய பேதமின்றி வணங்கி வழிபடும் தெய்வமான தணிகை முருகன், ஒரு முஸ்லிம் பெரியவராக வள்ளிமலை சுவாமிகளுக்கு காட்சி தந்ததாராம்!


 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் முத்துஸ்வாமி தீட்சிதரும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்றவர்.


ஒரு முறை தன் குருநாதரது ஆணைப்படி திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் முத்துஸ்வாமி தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம்.


அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்சிதர். மறு கணமே ‘ஸ்ரீநாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்சிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள்’ ஆகும்.


 திருவருட்பிரகாச வள்ளலார் தன் இளமை பருவத்தில் தியானத்தில் இருந்தபோது அவருக்கு திருத்தணி முருகன் கண்ணாடியில் காட்சி தந்தருளினார். இதை, திருவருட்பா- ஐந்தாம் திருமுறை- பிரார்த்தனை மாலை (சிர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்... தணிகாசலம் என் கண்ணுற்றதே...) பாடல் மூலம் அறியலாம்.


 கச்சியப்ப சிவாச்சார்யாரின் சீடர் கந்தப்ப தேசிகர். ஒரு முறை இவர் குன்ம நோயால் துன்புற்றார். அப்போது, கச்சியப்ப சிவாசார்யார், ‘திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி’ தணிகையாற்றுப்படை எழுதி, அதை திருத்தணி முருகன் சந்நிதியில் பாட... குன்ம நோய் நீங்கி குணம் அடைந்தார் கந்தப்ப தேசிகர்.


தாண்டவசிவா என்பவர் முருகப் பெருமானின் தீவிர பக்தர். கௌபீனம் மட்டுமே அணிந்திருப்பார். இவர் திருத்தலங்கள் பலவற்றை தரிசித்து விட்டு திருத்தணிக்கு வந்தார். அவருக்கு முன்னே அடியார்கள் சிலர், தங்கள் கைகளில் அருட்பா நூலை ஏந்தி அதில் உள்ள பாடல்களைப் பாடியபடி சென்றனர். இதைக் கண்ட தாண்டவசிவா, ‘என்னிடம் ஓர் அருட்பா புத்தகம் இல்லையே’ என்று வருந்தினார். அதே எண்ணத்துடன் ஓரிடத்தில் படுத்தவர் உறங்கிப் போனார். அவர் கண் விழித்தபோது அருகில் ஓர் அருட்பா புத்தகமும் கமண்டலமும் இருந்தன. ‘என்னே முருகன் திருவருள்!’ என்று வியந்தவர், தணிகை நாதனை கைகூப்பித் தொழுதார்.


திருத்தணி முருகனை வழிபட்டு திருவருள் பெறுவோம்.











No comments:

Post a Comment