Monday 26 September 2016

8 - மங்கள வாழ்வருளும் மங்களாம்பிகை!


51 சக்தி பீடங்கள் - 8


கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற சிவாலயம். பன்னிரு ஆண்டுகளுக்கு  ஒருமுறை இத்தலத்தில் மகாமகம் சிறப்பாக நடைபெறுகிறது. பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுத கலசம் தங்கியதால் இத்தலம்  கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர். பிரளய  காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் உருவானது. அமுத குடத்தை  அலங்கரித்திருந்த பொருட்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருட்கள் காற்றினால் சிதறடிக்கப்பட்டு, தாம் விழுந்த  இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாகவும் விளங்குகின்றன.

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். உலகிற்கு  திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில்  இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி (வேடர்) என்ற  பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து  சுயம்பு வடிவானார். இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறாள். தம்மை அன்போடு வணங்குவார்க்குத்  திவ்ய மங்களத்தை அருளும் மாட்சிமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான விஷ்ணுசக்தி பீடம் எனும் மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர  பீடேஸ்வரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரிலும் இந்த அம்பிகை வணங்கப்படுகிறாள்.  திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில்  பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள்  மந்திரபீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக  அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள  சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது.

இந்த அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையானவளாக அருள் பாலிக்கின்றாள். சிவனும்  சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் ஈசனையும், அம்பிகையையும் சேர்த்தே வலம்வந்து வணங்க முடியும். இத்தலத்தில் கல்  நாதஸ்வரம் பெயர் பெற்றதும் அபூர்வமானதுமாக விளங்குகிறது. மனிதர்கள் தங்களது பாபங்களைப் புண்ணிய நதிகளில் தலைமூழ்கி விட்டுச் சென்றதால்  பாபத்தின் சுமை தாங்க முடியவில்லை என கங்கா, பிரம்மபுத்ரா, யமுனா, குபேர, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயூ, கன்யா ஆகிய நதிகள் மங்களாம்பிகையிடம்  முறையிட்டன. அவை மகாமகக் குளத்தில் கலந்தால், பாவங்கள் தொலையும் என மங்களாம்பிகை திருவாய் மலர்ந் தருளினாள். காசியில் புரியும் பாவம்,  ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்தில் புரியும் பாவம் காசி கங்கையிலும் தீரும்.

கும்பகோணத்தில் புரியும் பாவம் மகாமக குளத்தில் மூழ்கினாலே கழியும் என்கிறது புராணம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம்  மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மங்களாம்பிகை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலிலிருந்து  ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ போன்ற மலர்களை கூடைகளில் எடுத்துக்கொண்டு யானை  முன்னே செல்ல ஊர்வலமாக செல்வர். கோயில்பிராகாரத்தை வலம் வந்து, கொடிமரம் அருகே சென்று பூக்களை வைப்பர். அதன் பிறகு மங்களாம்பிகைக்கு சிறப்பு  புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும், தீபாராதனையும் நடைபெறும். மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகையை சரணடைவோம்.


 

 

No comments:

Post a Comment