Monday 26 September 2016

9 - பக்தர்கள் நலம் காக்கும் பர்வதவர்த்தினி!


சக்தி பீடங்கள் - 9ராமேஸ்வரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அனுமன் திரும்பிவரத் தாமதமானதால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த லிங்கத்தை ராமபிரான் பூஜித்தார். அந்த சிவலிங்கமே  ராமநாதர். பிறகு, அனுமன் கொண்டுவந்தலிங்கத்தை மூலலிங்கத்தின் வடக்கே எழுந்தருள்வித்தார். இந்த லிங்கம், விசுவலிங்கம் எனப்படுகிறது. முதலில் இவருக்குத்தான் இத்தல பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களின் பாவங்களை பாதாளத்தில் தள்ளிவிட்டு அவர்களைக் காப்பாற்றுவதால் இங்குள்ள பைரவர் பாதாள பைரவராக கோடி தீர்த்தம் அருகில் அருள்கிறார். ராமநாதர் சந்நதியில் வைணவ ஆலயங்களைப் போல தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. ஆலயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவதுபோன்ற சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. அவற்றைத் தரிசிக்க கட்டணம் செலுத்த வேண்டும். இத்தலத்தில் திருமகளை மணந்த திருமால் சேதுமாதவராக தனிச் சந்நதியில் அருள்கிறார்.

சுந்தரபாண்டியன் எனும் மன்னனின் பக்தியை மெச்சி திருமகளை அவருக்கு மகளாகப் பிறக்கச் செய்து பின் திருமால் மணந்து கொண்டதாக ஐதீகம்.  இக்கோயில் நந்தியம்பெருமான் பன்னிரெண்டு அடி நீளமும் ஒன்பதடி உயரமும் கொண்டவராய் சுதை வடிவில் அருள்கிறார். இங்கு அருளாட்சி புரியும் அம்மன், பர்வதவர்த்தினி. இந்த அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். இறைவி ‘மலைவளர் காதலி’ என்ற பெயரிலும் வணங்கப்படுகிறார். இத்திருப்பெயரை ஞானசம்பந்தர், 'ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா' என எடுத்து ஆண்டிருக்கிறார். மாசிமாத பிரம்மோற்சவமும், ஆடிமாத அம்மன் உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த சமயத்தில் அம்மன் தபசும். திருக்கல்யாண உற்சவமும்  நடைபெறுகின்றன.

அம்மன் சந்நதி பிராகாரத்தில் ராமபிரானால் தனக்கு தரப்பட்ட ரங்கநாதர் திருவுருவை ஸ்ரீரங்கத்தில் வைத்த ஏக்கம் தீர, இலங்கை செல்லும் வழியில் இத்தலம் வந்த வீபீஷணன் அமைத்த ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதபெருமாள் கையில் தண்டத்தோடு காட்சி தருகிறார். அம்பாள் சந்நதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்வது வழிபாட்டு மரபு. ஆலய முதல் பிராகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சந்நதி அமைந்துள்ளது. பின்னர் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார்.

யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்நதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக எரியும் நெய் விளக்கில் நெய் ஊற்றி வழிபட அவை நீங்குகின்றன. இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சந்நதிகள் அமைந்துள்ளன. கருவறையில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் காலை 5-6 மணியில் பாலாபிஷகம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிராகாரத்தை, 1740-1770 ஆண்டுகளில் கட்டி முடித்தார்.

1212 தூண்களுடன் கூடிய இந்த பிராகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டது. தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிராகாரங்களைக் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிராகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடி; வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிராகாரங்கள் தனித்தனியே 640 அடி. கிழக்கு, தெற்கு உட்பிராகாரங்கள் 224 அடி; வடக்கு, தெற்கு உட்பிராகாரங்கள் 352 அடி. மொத்த பிராகாரங்களின் நீளம் 3850 அடி. வெளிப்பிராகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள்: 1. மகாலட்சுமி தீர்த்தம் 2. சாவித்திரி தீர்த்தம் 3. காயத்திரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் 5. சங்கு தீர்த்தம் 6. சக்கர தீர்த்தம் 7. சேது மாதவர் தீர்த்தம் 8. நள தீர்த்தம் 9. நீல தீர்த்தம் 10. கவய தீர்த்தம் 11.    கவாட்ச தீர்த்தம் 12. கெந்தமாதன தீர்த்தம் 13. பிரமஹத்தி விமோசன தீர்த்தம் 14. கங்கா தீர்த்தம் 15. யமுனா தீர்த்தம் 16. கயா தீர்த்தம் 17. சர்வ தீர்த்தம் 18. சிவ தீர்த்தம் 19. சாத்யாமமிர்த தீர்த்தம் 20. சூரிய தீர்த்தம் 21.சந்திர தீர்த்தம் 22. கோடி தீர்த்தம். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற ராமநாதசுவாமி கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் வழிபட்டார் என்பது நம்பிக்கை. இவற்றில் 14 தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள்ளேயே உள்ளன. அவற்றில் கற்புக்கரசியான சீதாதேவியை சோதித்த பாவம் நீங்க அக்னிதேவன் நீராடிய அக்னி தீர்த்தக் கட்டம் புகழ்பெற்றது. தல விருட்சமாக வில்வமரம் விளங்குகிறது.

ஆந்திர அட்சர சக்தி பீடம் (எம்)

பீடத்தின் பெயர் சர்வாஸா. தேவியின் இடது கன்னம் விழுந்த பீடம். பீட சக்தியின் நாமம் விஸ்வேஸி. அட்சரசக்தியின் நாமம் ரேவதி. இந்த சக்தி பீடத்தை தண்டபாணி எனும் பைரவர் பாதுகாப்பதாக ஐதீகம். கோதாவரி நதிக்கரையின் ஓரம் ராஜ மஹேந்திரம் எனும் இடத்தில் மேற்கு கோவூர் அருகில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சக்திபீடநாயகியான விஸ்வேஸியை ராகினி என்றும், சிவனை அமாயி என்றும் அழைக்கிறார்கள். வத்ஸநாபரென்ற திருப்பெயரும் இத்தல ஈசனுக்கு உண்டு. கோதாவரி நதி பாயும் நாட்டின் வளத்திற்கும், பசுமைக்கும் குறைவேது? குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமஹேந்திரத்தில் ராஜமுந்திரி எனும் இடத்தில்  கோதாவரியில் புஷ்கரம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த புண்ணிய காலத்தில் கோதாவரியில் நீராடி குருபகவானுக்கு ப்ரீதி செய்து பித்ருக்களுக்குப் புனித காரியங்களைச் செய்வது மிகவும் நலனளிக்கும்.

மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. 

 

No comments:

Post a Comment