Monday 26 September 2016

4 - மங்கலங்கள் அருள்வாள் மதுரை மீனாட்சி - 2

51 சக்தி பீடங்கள் - 4

சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியதாகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை  தூக்கி ஆடிய கோலத்தில்தான் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி  ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது  விசேஷம். ஆலவாய், சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல், மதுரை ஆகியவை இத்தலத்திற்குரிய பல்வேறு பெயர்கள்.  திருபாற்கடலை கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி கூறியதால், அவன்  காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி  வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த  நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில்  ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது.

விருத்திராசூரனை கொன்ற இந்திரன், கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டான். மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம்,  இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்தக் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.  தெற்குக் கோபுரம் மிக உயரமானது - 160 அடி. இக்கோயிலினுள் உள்ள பொற்றாமரைக் குளம் ஓர் ஏக்கர் பரப்பு கொண்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள்  ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டு, தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. மீனாட்சி அம்மன் சந்நதியின் முன்னே எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது.

வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள  எட்டு  தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்ஞரூபிணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் அழகுற  காட்சியளிக்கின்றனர். இவர்களை வணங்குவோர் மனோ தைரியம் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. ஒருகாலத்தில் இது அன்னதான  மண்டபமாக இருந்தது. பின்னாளில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் அன்னதானம்  செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்றே இன்றும் பெயர்! மீனாட்சி நாயக்கர் மண்டபம்,  முதலி மண்டபம்,  ஊஞ்சல்  மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்.

மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் இறைவி மீனாட்சி அன்னையின் சந்நதியை தரிசிக்கலாம். கருவறையில் அன்னை இரண்டு  திருக்கரங்களுடன் ஒரு கையில் ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தி, நின்றபடி அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன?  பக்தன் தன் கோரிக்கையை அன்னையிடம் சொல்ல, அதை கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறதாம்;  இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறதாம்! சுவாமி, கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், சிவலிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார். அம்மன்  சந்நதி நுழைவாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. மேலும், நூற்றுக்கால் மண்டபம், புது மண்டபம் எனும் வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்  போன்றவையும் எழிலுற அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே சித்திரைத்  திருவிழா, முடிசூட்டு விழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் சித்ரா  பவுர்ணமி விழா, வைகாசி கோடை வசந்த விழா, ஆனி ஊஞ்சல் உற்சவம், ஆடி முளை கொட்டுத் திருவிழா, ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி கொலு, ஐப்பசி  கோலாட்ட உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி எண்ணெய் காப்பு விழா, தை மாத தெப்பம், மாசி மாத மண்டல உற்சவம், பங்குனி மாத உத்திரம், சாரதா  நவராத்திரி போன்ற விழாக்கள் விமரிசையானவை.




 

No comments:

Post a Comment