Saturday 16 July 2016

வைகாசி திருவோணம்!

தஞ்சாவூரில் உள்ள 24 பெருமாள் கோவில்களில் கருடசேவை நிகழ்ச்சி வைகாசி திருவோணத்தன்று நடக்கிறது. இதை தரிசித்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

தல வரலாறு:

தஞ்சை பகுதியில் சோலைகள் சூழந்த ஓரிடத்தில் தங்கிய பராசர மகரிஷி, விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். தேவலோகத்தில் பெற்ற அமிர்தத்தை, சோலை அருகில் இருந்த புஷ்கரணியில்(குளத்தில்) ஊற்றினார். அது விஷ்ணு அமிர்த புஷ்கரணி என பெயர் பெற்றது. இதனால் அப்பகுதியே செழிப்பு அடைந்தது. இந்த சமயத்தில் தண்டகாரண்யம் என்னும் வனத்தில் மழையின்றி பஞ்சம் நிலவியது.

அங்கிருந்து தஞ்சகாசுரன் என்பவன், பராசர மகரிஷி தங்கியிருந்த சோலையை வந்தடைந்தான். அசுர குணத்தால் பராசரரைத் துன்புறுத்தினான். பராசரர் தன்னைக் காக்கும்படி விஷ்ணுவைச் சரணடைந்தார். நரசிம்ம வடிவத்தில் தோன்றிய விஷ்ணு, தஞ்சகாசுரனைக் கொன்று பராசரரைக் காத்தருளினார். மரண தருவாயில் தஞ்சகாசுரன் தனது பெயரை அந்த இடத்துக்கு வைக்க வேண்டினான்.

எனவே அவ்வூர் தஞ்சாவூர் எனப் பெயர் பெற்றது. அந்த இடத்தில் விஷ்ணு, நீலமேகப்பெருமாளாக கோவில் கொண்டார்.

வைகாசி திருவோணம்:

பராசரரின் வேண்டுகோளை ஏற்று, ஒரு வைகாசி திருவோணத்தன்று விஷ்ணு லட்சுமி சமேதராக கருடவாகனத்தில் காட்சியளித்தார். அதன் அடிப்படையில் கருடசேவை விழா இங்கு கொண்டாடப்படுகிறது.  நான்கு நாள் விழா நடக்கிறது.  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம், கருடசேவை,  நவநீத சேவை,  விடையாற்று உற்ஸவம் ஆகியவை நடக்கிறது.

24 கருடசேவை:

கருடசேவையன்று காலை 6.00 மணிக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 24 பெருமாள் கோவில்களில் இருந்து உற்ஸவர்கள், வெண்ணாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருவர்.

தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள்,
நரசிம்மர்,
மணிகுன்றப்பெருமாள்,
ஸ்ரீவேளூர் வரதராஜர்,
வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேசர்,

கரந்தை யாதவ கண்ணன்,
கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மர்,
கொண்டிராஜபாளையம் கோதண்டராமர்,
கீழராஜவீதி வரதராஜர்,
தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசர்,

அய்யங்கடைத்தெரு பஜார் ராமசுவாமி,
எல்லையம்மன் கோவில் தெரு ஜனார்த்தனர்,
கோட்டை பிரசன்ன வெங்கடேசர்,
கோவிந்தராஜர்,
மேல அலங்கம் ரங்கநாதர்,

மேலராஜ வீதி விஜயராமர்,
மேலராஜவீதி நவநீதகிருஷ்ணர்,
சகாநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணர்,
மா.சாவடி நவநீதகிருஷ்ணர்
பிரசன்ன வெங்கடேசர்,

பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி,
சுக்காந்திடல் லட்சுமி நாராயணர்,
கரந்தை வாணியந்தெரு வெங்கடேசர்,
கொள்ளுப்பேட்டை தெரு வேணுகோபாலர்

ஆகிய கோவில்களில் இருந்து சுவாமிகள் கருடவாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

 

No comments:

Post a Comment