Friday 8 July 2016

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம்!



``கோயம்பேடு என்ற ஊரும் இல்லை.
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை.
வடக்குப் பார்த்த சுவாமியும் இல்லை.
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை''

என்பது பழமொழி.


கோயம்பேடு என்ற பெயரில் ஊரும் குறுங்காலீஸ்வரர் என்ற பெயரில் வடக்கு நோக்கியபடி பார்க்கும் மடக்கு போன்ற லிங்கமும் வேறு எங்குமே கிடையாது என்பது அதற்கு அர்த்தம்.

 

226 அடி நீளமும் 137அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான இந்த ஆலயத்தில் இதன் சிறப்புகளைப் பறைசாற்றும் 14 தமிழ்க் கல்வெட்டுகளும் உண்டு. மூன்றாம் குலோத்துங்க சோழன், விஜயநகர அரசரான வீர புக்கர் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட இந்தக் கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட பெருமையும் மிக்கது.




எல்லாவற்றிற்கும் மேலாக, சுவாமி, ஆவுடையாருக்கு மேலாக 4 அங்குல உயரத்தில் அகல் விளக்கினைக் கவிழ்த்து வைத்தது போல் சாய்வான நிலையில் வடக்குத் திசை நோக்கி அமைந்துள்ள பாண லிங்க தரிசனத்தை வேறெங்குமே நீங்கள் காணமுடியாது.


அதன் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ராமனுக்கும், இந்தக் கோயிலுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொண்டு விடலாமா?

உலகத்திலுள்ளோர் பழிச் சொல்லுக்குப் பயந்து தன் ஆசை மனைவியைத் தம்பி மூலம் கானகத்தில் விட்டுவிட்டு வரச் சொன்னார்  ஸ்ரீ ராமன்.

அப்போது சீதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார். 

சீதையின் அழுகுரல் கேட்டு எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார். 



லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். 



ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. 

(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார். 

அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார்.


பிரிந்த குடும்பம் ஒன்றிணைந்தது. சீதை அகமகிழ்ந்தாள். அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லவும், என்ன இருந்தாலும் லவனும், குசனும் தந்தையை எதிர்த்துப் போரிட்டது பாவம் அல்லவா? அந்தப் பாவத்தைப் போக்கவும் வால்மீகி முனிவரின் ஆலோசனைப்படி சிவபூஜை செய்ய முனைந்தனர் லவனும் குசனும்.



அவர்கள் சிறுவர்களாயிற்றே...! அதனால் சிவபெருமானும் அவர்கள் பூஜிக்க வசதியாக தன் உருவத்தைக் குறுக்கிக் கொண்டார். அதனால் குறுங்காலீஸ்வரர் ஆனார்.

பூஜிப்பவர்கள் யார்? ராமனின் பிள்ளைகளாயிற்றே! அதனால், திசை கூடப் பார்க்காமல் அவசர அவசரமாக சிவன் வடக்குத் திசையில் அமர்ந்து அவர்களுக்கு அருள் பாலித்தார். குசனும், லவனும் பூஜித்ததால் குசலவபுரீஸ்வரர் என்ற பெயரையும் பெற்றார்.



குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இத்தல சரபேசுவரரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த 16 கால் மண்டப தூண்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. 


நுழைவாயிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்பது போல உள்ளது.


ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து 4 கால் மண்டபத்தில் நந்தி உள்ளார். ஒரு தடவை இவர் சித்தம் கலங்கி தவித்தார்.

அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது.

இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.


நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம்.

இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன.

அவர்களை தரிசித்து விட்டு ஈஸ்வரன் வீற்றிருக்கும் சன்னதிக்கு செல்லலாம். ஈஸ்வரன் சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர்.


கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும்.

லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம்.



 விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம்.


 பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது.

இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். 


அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார்.

கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை, தலமரமான பலா ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.

 ஈசன் இங்கு வடக்கு திசை பார்த்திருப்பதால் இத்தலம் மோட்சம் தரும் தலமாக கருதப்படுகிறது. இது தவிர சித்தர்கள், சப்தரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இங்கு சூட்சம நிலையில் அருள் புரிகிறார்கள்.


காசிக்கு இணையான தலம் : இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இத்தலத்தில் குறுங்காலீஸ்வரர் காசி இருக்கும் வட திசையை பார்த்தப்படி உள்ளார். அதனால் இத்தலம் காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படுகிறது.


"கோயில் திறந்திருக்கும் நேரம்"  "7-12, 4-9"









No comments:

Post a Comment