Friday 22 July 2016

ராஜ யோக சிம்ம தட்சிணாமூர்த்தி!


வியாக்ரபுரீஸ்வரர் திருப்புலிவனம் ஆகும். இந்த திருத்தலம் 1900 வருடம் பழமை வாய்ந்தது.

தென் இந்தியாவில் அதிகமான கோவில்கள் உள்ள இடம் தஞ்சை மாவட்டம்.அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில்தான் அதிகமான கோவில்கள் இருக்கிறது. இந்த கோவில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.


இறைவன் வியாக்ரபுரீஸ்வரர்!
இங்கு சிவபெருமான் வியாக்ரபுரீஸ்வரர் எனும் திருநாமத்தோடு சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கின்றார். அன்னையின் பெயர், அமிர்த குஜலாம்பாள். லிங்கத்தின் மீது புலியின் பாத அடையாளமும் லிங்கத்தின் மீது ஜடாமுடியும் இருப்பதும் உத்ராயணம் – தட்சிணாயணம் ஆகிய இரண்டு புண்ணிய நேரத்திலும் சூரியனின் நிழல் சாயாமல் நேராகவே சுவரில் படிவது ஒரு தெய்வீக அதிசயம் ஆகும்.
இத்தகைய அமைப்பு  தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவசைலம் போன்ற சில தலங்களில் மட்டுமே காண இயலும்.
இறைவி அமிர்த குஜலாம்பாள்!


ராஜ யோக சிம்ம தட்சிணாமூர்த்தி!

மேலும் இங்குள்ள ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி என்ற பெயரில், அழகோடு, ஒருகாலை அம்மனின் வாகனமான, சிம்மத்தின் மீதும்  மற்றொரு காலை, முயலகன் மீதும் வைத்து தன்னை வணங்குவோருக்கு சகல சம்பத்துக்களையும் வழங்குகின்றார்.

அது மட்டும் அல்லாது, கணவன் மனைவி கருத்து ஒற்றுமை வளரும் என்பதும் பிரிவினை வரை செல்லும் தம்பதியரைக் கூட இந்த தல தட்சிணாமூர்த்தி இன்ப தம்பதியராக மாற்றுகிறார்.

சுரங்கத்துள் பொன் ஆபரணங்கள்
இத்தல கருவறை தரை மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. சிவன் சன்னதியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இது பற்றிய ஒரு சுவாஸ்யமான தகவல் உள்ளது. இது அந்த காலத்து மன்னர்களால் காஞ்சீபுரத்தையும் உத்திரமேரூர் என்ற இடத்தையும் இணைப்பதாக உள்ளதாம். மேலும் இந்த சுரங்கத்துக்குள் ஒரு அறை பாறையால் அடைக்கப்பட்டு இருக்கின்றதாம்.

இதனுள் ஏராளமான விலை உயர்ந்த பொன் பொருளும் இருப்பதாக கூறுகின்றனர். இதனை தொல்பொருள் ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்து தெரிவிக்கமுடியும். சிவன் சன்னதியின் பின்புறம் பெருமாள் சன்னதி உள்ளது. திருமால் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். நரசிம்மர் சிற்பமும் இருக்கின்றது.

இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் உரிய பரிகாரக்கோவில் ஆகும். மனமுருக இங்கு வேண்டினால்  நிச்சயமாக  பதவி உயர்வு, விவாக நிச்சயம், பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், அரசியலில் சிறப்பான பதவி உயர்வு, வீடு, வாகனம் கிட்டும் என்பது ஐதீகம். வில்வ அர்ச்சனை,வஸ்திர வழிபாடு செய்தால் ராஜயோகம் உண்டு.

இந்த தலத்தின் தல வரலாறு என்னவெனில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியக்ரபாதர் என்ற முனிவரும் இருந்து வந்தனர். இவர்கள் தினமும் சிவபெருமானுக்கு மலர் மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால் பல நேரங்களில் நல்ல புதிய மலர்கள் கிடப்பது இல்லை. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தில் உச்சியில்தான் நல்ல மலர்கள் இருக்கும். அதைப்பறிக்க இயலாததால்மனவருத்தத்துடன் இருந்தார்.

அவர் முன்பு சிவபெருமான் தோன்றி, அவரின் கவலைக்கு காரணம் கேட்க  தங்களுக்கு அர்ச்சனை செய்ய நல்ல மலர்களைக் கொய்ய தன்னால் மரத்தின் உச்சிப்பகுதிக்கு செல்ல இயலவில்லை என்றார். சிவபெருமான் அவருக்கு மலர்களைப் பறிக்க வசதியாக கால்களில் புலிநகம் கொடுத்து மரம் மீது ஏற அருள் புரிந்தார். அவரின் பக்தியின் பேரில் அவருடைய பெயரிலேயே இங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

கோவில் பக்தர்களின் வசதிக்காக தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். இந்த திருத்தலம் கஞ்சீபுரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு.

உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
– -சேக்கிழார்.

முக்கிய விழாக்களாக மாத சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி திருவாதிரை, மற்றும் தமிழ்- ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தீபாவளி ஆகிய்வை கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம்- – 603 406, காஞ்சிபுரம் மாவட்டம்..

தொலை பேசி எண்: 0 44-2727 2336

 

No comments:

Post a Comment