Sunday 17 July 2016

கருணை மழை பொழியும் காமாட்சி!

 

முக்தியை அளித்திடும் தெய்வத் திருத் தலங்கள் ஏழு. அவை, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பவையாகும்.

புண்ணிய பூமியான பாரத தேசத்தில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.  இதை ஒட்டியாணபீடம் என்பார்கள்.

ஸ்ரீகாமாட்சியுடன் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீவாராஹி, ஸ்ரீபைரவர், ஸ்ரீகணபதி என்று ஸ்ரீவித்யைக்கு உரிய தேவதைகள் எட்டுப்பேரும் அருளும் கோயில் இது. இழந்த ராஜ அதிகாரத்தையும் ஜெயத்தையும் வழங்குகிற அன்னை ஸ்ரீகாமாட்சி அம்பாள். இவளின் கடைக்கண் பார்வை பட்டு, புகழ்பெற்ற தலைவர்கள் ஏராளம்.

அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.
 
காம என்றால் அன்பு, கருணை. அக்ஷ என்றால் கண். எனவே, காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.




அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

காஞ்சிபுரத் திருத்தலத்துக்கு காஞ்சிபுரம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்பீரபுரம், தண்டகபுரம், காஞ்சினபுரம், கச்சி, சத்தியவிரதரேத்திரம் என்னும் பதினைந்து திருநாமங்கள் உண்டு. இத் திருத்தலத்தில் முற்காலத்தில் சண்பக மரங்கள் நிறைந்திருந்ததால், சண்பகாரண்யம் என்னும் திருப்பெயரும் உண்டு. காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

அன்னை காமாட்சியின் மூவகை வடிவங்கள்!

 
அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். ( பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள். ) அந்த மூவகை வடிவங்களாவன:
 
காமகோடி காமாட்சி - ( ஸ்தூல வடிவம் ) - (மூல விக்கிரக உருவில் )

அஞ்சன காமாட்சி ( அரூப லக்ஷ்மி ) - ( சூட்சும வடிவம் )
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் - ( காரண வடிவம் )
  
காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
 
 
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், நாம் தரிசனம் செய்யக்கூடிய சந்நிதிகள் இருபத்துநான்கு. அவையாவன:

  1. காயத்ரி மண்டபம்
  2. காமகோடி காமாட்சி ( கருவறையில் )
  3. காமகோடி பீடமாகிய ஸ்ரீ சக்கரம் ( கருவறையில் )
  4. தபஸ் காமாட்சி
  5. பிலாகாசம்
  6. அரூப லக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாட்சி
  7. வராஹி
  8. சந்தான ஸ்தம்பம்
  9. அர்த்த நாரீஸ்வரர்
  10. ரூப லக்ஷ்மியும், கள்ளர் பெருமாளும்
  11. அன்னபூரணி
  12. தர்ம சாஸ்தா
  13. ஆதி சங்கரர்
  14. துர்வாச முனிவர்
  15. உற்சவ காமாட்சி
  16. துண்டீர மகாராஜா
  17. (அஷ்ட புஜ ) மகா சரஸ்வதி
  18. தர்ம ஸ்தம்பம்
  19. காசி கால பைரவர்
  20. துர்க்கை
  21. காசி விஸ்வநாதர்
  22. பஞ்ச கங்கை
  23. பூத நிக்ரக பெருமாள்
  24. அகஸ்தியரும், ஹயகிரீவரும்

காயத்ரி மண்டபம்
காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் ( கல் தூண்களால் ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்தியில்தான், காமாட்சி அம்மன் மூல விக்கிரகமாக அழகுற அமர்ந்திருக்கிறாள்.
அன்னை காமாட்சி அம்பாள்



காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அன்னை காமாட்சி அம்பாள் தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அவளது திருக்கரங்களில், பாசம், அங்குசம், மலர் அம்பு ( புஷ்ப பாணம் ), கரும்பு வில் முதலிய ஆயுதங்களைத் தாங்கி இருக்கின்றாள். இங்கு, மூலமூர்த்தியாகிய அம்பிகையே ஸ்தூல வடிவத்தில், தன்னுடைய பக்தர்கள் தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே சகல வரங்களையும் தந்து அருள் புரிவதால், அன்னை காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
 
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். அந்த சிவாலயங்களில் , அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.
 
 
அம்பாளின் சந்நிதி காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது என்பார்கள். இங்கே 24 அட்சரங்களும் 24 தூண்களாக இருப்பதாக ஐதீகம். காயத்ரி மண்டபத்தில் இருந்த படி ஒரேயரு முறை காயத்ரீ ஜபத்தைச் சொன்னாலே போதும்... கோடி ஜபம் செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

 
வேறு எந்தத் தலத்து அம்பிகைக்கும் கிடைக்காத பெருமை, ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு உண்டு. அதாவது, இங்கேயுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சி அம்பாள் கோயிலை நோக்கியே அமைந்துள்ளதும், அந்த ஆலயங்களின் உத்ஸவ விழாக்களில், திருவீதியுலா வரும் தெய்வங்கள், காமாட்சி அம்பாள் கோயிலை வலம் வரும் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று.
 
அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. ( அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது ). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லக்ஷ்மிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோயில் வரலாறு கூறுகின்றது.
 
சந்தான ஸ்தம்பம்!
காமாட்சி அன்னையின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.


அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி
காயத்ரி மண்டபத்தில், தேவிக்கு வலது பக்கத்தில் தெற்குத் திசை நோக்கியவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது
 
 காசி விஸ்வநாதர் ஆலயம்
காமாட்சி அன்னை ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில், கிழக்குப் பக்கத்தில், கிழக்குத் திசையை நோக்கியவண்ணம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.
 
மகிஷாசுரமர்த்தனி தேவி
 
காமாட்சி அன்னையின் ஆலயத்தில் மூன்றாவது பிரகாரத்தில், கீழ்க் கோபுரத்தின் உட்புறம், தேவியை நோக்கியவண்ணம், மகிஷாசுரமர்த்தனி தேவி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றாள்.
 
அரூப லக்ஷ்மி தேவி!
 
மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லக்ஷ்மியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.
 
 
 
அழகே உருவான லக்ஷ்மி தேவி, காஞ்சிபுரத்தில் அரூப லக்ஷ்மியாக வடிவம் கொண்டது ஏன்?   
 


நமது புராணங்கள் கூறும் சுவையான கதை!

முன்னொரு காலத்தில், அமுதத்தை அடைவதற்காக, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறமாகவும், அசுரர்கள் மறு புறமாகவும் நின்று, பாம்பை இருபக்கமும் மாறி மாறி இழுத்து, பாற்கடலைக் கடைந்தார்கள். வலி தாங்க முடியாமல் வாசுகிப் பாம்பு விஷக் காற்றைக் கக்கியது. அந்த விஷக்காற்றின் தாக்கத்தால், மகாவிஷ்ணுவின் திரு மேனி ( உடல் ) கறுப்பாக மாறி விட்டது.
பாற்கடலை மேலும் கடைந்தபோது, அங்கே லக்ஷ்மி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அப்போது, லக்ஷ்மி, மகாவிஷ்ணுவின் கறுத்த மேனியைப் பார்த்துப் பரிகாசம் செய்தாள். அவர் தன்னைவிட அழகில் குறைந்தவரே என்று கேலி செய்தாள். ( லக்ஷ்மி தேவி அழகிய பொன் நிற மேனியை உடையவள். )


லக்ஷ்மியின் கர்வத்தை அடக்க விரும்பிய மகாவிஷ்ணு, " நீ கர்வம் கொண்டு என்னைப் பரிகாசம் செய்ததால், உன்னுடைய அழகு அரூபமாகப் போகக் கடவது " என்று சாபமிட்டார்.
மனம் வருந்தி அழுது, மன்னிப்புக் கோரிய லக்ஷ்மியிடம், " நீ காமகோட்டம் ( காஞ்சிபுரம் ) சென்று தவம் செய் " என்று கூறினார்.


அவ்வாறே, தாங்கமுடியாத மனவருத்தத்துடன், காமகோட்டம் வந்துசேர்ந்த லக்ஷ்மியை வாழ்த்தி வரவேற்ற அன்னை காமாட்சி, அவளுக்கு " அஞ்சன காமாட்சி " என்று பெயரிட்டு, தன இடது பக்கத்தில் அமர்ந்திருக்குமாறு இடம் கொடுத்தாள்.


மேலும், " என்னை வணங்க வரும் பக்தர்கள் பெறும் அர்ச்சனைக் குங்குமத்தை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கும்போது, அந்த அர்ச்சனைக் குங்குமத்தின் மகிமையெல்லாம் ஒன்றுசேர்ந்து, உன் உண்மையான வடிவத்தைப் பெறுவாயாக. மேலும், உன்னை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை வழங்குவாயாக " என்று கூறி அன்னை லக்ஷ்மி தேவிக்கு அருள் புரிந்தாள்.


அன்றுமுதல், மங்கள நாயகியாம் அன்னை காமாட்சியின் அருட் பார்வையாலும், குங்குமப் பிரசாத மகிமையாலும், இழந்த அழகையெல்லாம் மீண்டும் பெற்று, லக்ஷ்மி தேவி அழகுருக்கொண்டு விளங்கினாள்.
காமாட்சி அன்னையின் திருக்கோயிலில், அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாதப் பிரமோத்சவம் மிகவும் விசேடமானது. இவ்விழாவின் இறுதிநாள் உதயம் விசுவரூப சேவை மிகவும் முக்கியத்துவமும், விசேடமும் உடையது.


தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கி, இன்பத்தை நல்கும் மங்கள நாயகியாய், வேண்டுவார்க்கெல்லாம் வேண்டுவன நல்கும்  அன்னை காமாட்சியின் பேரெழிலை வர்ணித்துப் போற்ற வார்த்தைகள் போதாது. அந்த அன்னையின் திருவடித் தாமரைகளைத் தினமும் வணங்கி, அவளது பேரருளைப் பெற்று இனிய நல்வாழ்வைப் பெறுவோமாக.

ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்

1 . சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே,
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்,
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்,
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா,
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீச்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ,
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே .

2 . பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பின் ஒலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பினழகும் ,
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனால் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே

3 . மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயா சொரூபிநீ மகேஸ்வரியுமான நீ
மலையரை யன்மக ளான நீ,
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ,
தயாநிதி விசாலாட்சிநீ,
தரணியில் பெயர்பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை ஈன்ற வளும்நீ,
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்தவளும் நீ,
பிரணவ சொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண்ணா முலையுநீ,
ஆயிமகமாயிநீ ஆனந்தவல்லிநீ
அகிலாண்டவல்லிநீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே.

4 . பாரதனிலுள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்,
பக்தியாய் உன்பாதம் நித்தம் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா,
பிரியமா யுன்மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி,
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை ஏகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே.
 
 

No comments:

Post a Comment