Tuesday 9 August 2016

வாழ்க்கை இனிக்க வரலக்ஷ்மி விரதம்!




திருமாலின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாக உள்ளார். தன லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, மகா லட்சுமி என 8 வகையான லட்சுமியாக காட்சி தந்து அருளாசி புரிகிறார். லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம் ‘வரலட்சுமி விரதம்’. செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்களை லட்சுமி தேவி அள்ளிக் கொடுப்பதால், இதை வரம் தரும் விரதம் எனவும் அழைக்கின்றனர்.



திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரது கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும். லட்சுமி, மகா விஷ்ணுவை மணந்தார். ஸ்ரீமன் நாராயணன் பூமியில் அதர்மங்களை அழித்து, தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது அவரோடு பல வடிவங்கள் எடுத்தார்.  பல வடிவில் வந்து பூலோகத்தில் நித்ய சுமங்கலியாக காட்சி தரும் ஸ்ரீதேவி, பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம் கொண்டவர். பொறுமையே வடிவானவர். செல்வத்துக்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி, நமக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார்.



பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவவும், செல்வங்கள் பெருகவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழவும், சுமங்கலி பெண்கள் அனுஷ்டிப்பதே வரலட்சுமி நோன்பாகும்.



வரலட்சுமி விரதம், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இந்த விரதம் ஆடி மாதத்திலும் வரும்.



நோன்பு தோன்றிய கதை

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகா லட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர்   களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்க தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்க தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.



விரதத்தின் மகிமை!

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். காலம் கடந்தது. ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.



அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாம பாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.

விரதம் இருப்பது எப்படி?

வரலட்சுமி விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். படத்திற்கு மலர் களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகிய வற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.



 

No comments:

Post a Comment