Sunday 7 August 2016

மயிலை முண்டகக்கண்ணியம்மன்!


பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் முண்டகக் கண்ணி அம்மன் ஆவார்.  தாமரை மலரை ஒத்த வடிவமும், தாமரை போன்ற கண்களையும் உடையவள் என்ற பொருளில் முண்டகக் கண்ணி என்றப் பெயரில் அன்னை அழைக்கப்படுகிறாள்.



ஆலய அமைப்பு

மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும்  உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.

கருவறை, தென்னங்கீற்றைக் கொண்டு வேயப்பட்ட கொட்டகையாக காட்சியளிக்கிறது. அதன் உள்ளே பிரமாண்ட பிரபையின் முன்பாக, முண்டகக் கண்ணி அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள். அன்னையின் திருவுருவம் மலர்வதற்கு முந்தைய தாமரை  மொட்டின் வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கற்திருமேனியான அன்னையின் முன்புறமும், பின்புறமும் புடைப்புச் சிற்பமாக சூலம் அமைக்கப்பட்டுள்ளது.

அன்னைக்கு கருவறை கட்டிடம் கட்ட பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு வழிகளில் தடை ஏற்பட்ட தாகவும், ‘தனக்கு  தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம்’ என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே, அன்னைக்கு தென்னங்கூரையே கருவறை விமானமாக இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது.


உலக மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இந்தக் கோலம் கொண்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. என்றாலும், மகாசக்தியாக தான் விளங்கினாலும், தான் விரும்புவது எளிமையையே என்பதை வலியுறுத்தும் தத்துவம் இதில் அடங்கியிருப்பதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள். தன்னை நாடிவரும் பக்தர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும்,  எளிமையாக வாழ்வதே சிறந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இக்கோலம் அமைந்துள்ளது.



அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம்  தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன.  பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்வதாக நம்பப்படுகிறது. 

அன்னையின் இடதுபுறம் உற்சவர் சன்னிதி உள்ளது. அதன் எதிரே பிரமாண்ட வேப்ப மரமும் இருக்கிறது. உற்சவர் அன்னை, சாந்தம் தவழும் முகத்துடன் காட்சிஅளிக்கிறார். அன்னையின் சிரசில் கரந்த மகுடம் உள்ளது. முன்னிரு கைகள் ஒன்றில் கத்தியும், மற்றொன்றில் அபய முத்திரையும், பின்னிரு கைகள் ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் ஏலமும் ஏந்தி, அமர்ந்த கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். அன்னை ஒளி வீசும் முகத்துடன் புன்னகை பூத்துக் காட்சி தருவதைக் காண, கண் கோடி வேண்டும்.   இந்த அன்னையே தங்க ரதத்திலும், வீதியுலாவிலும் வலம் வருபவள் ஆவாள்.

அன்னை முண்டகக் கண்ணி!

அன்னை சுயம்பு வடிவத்தில் தாமரை மொட்டாய் அமர்ந்திருக்க, அன்னைக்கு கவசமாக பெரிய பிரபை அமைப்பு காணப்படுகிறது. இது வெள்ளிக் கவசத்தால் போர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்துதலை நாகம் படம் விரித்து நிழல்தரும் கோலத்தில் அமைந்துள்ளது. இதன் இருபுறமும் துவார பாலகிகள் அமைந்துள்ளனர்.

அன்னைக்கு காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அன்னைக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் என பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதன்பின், அன்னையின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி,  அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர்.
 
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், முக்கிய திருவிழா நாட்களிலும் வெள்ளி மற்றும் தங்கத் திருமுகம், நாகாபரணம் மற்றும் கிரீடம் ஆகியவை அம்மனுக்கு சார்த்தி அலங்கரிக்கின்றனர்.

உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என சப்த கன்னியர் சிறு கல் வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர்.

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இந்நேரம் மாறுபடும்.

விழாக்கள்!






1,008 கூடையில் பூச்சொரிதல் விழா!





சித்திரைப் புத்தாண்டு பிறப்பு அன்று 108 விளக்கு பூஜை, சித்திரை பவுர்ணமியில் 1,008 பால்குடப் பெருவிழா, ஆடியில் பூரத் திருவிழா, 1,008 கூடையில் பூச்சொரிதல் விழா, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் தனுர் மாத பூஜை, தைத் திருநாள், இரண்டாம் நாள் திருவள்ளுவர் திருநாள் விழா, தை மாதக் கடைசி வெள்ளியில் 108 திருவிளக்கு பூஜை, பங்குனியில் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவிலின் அறுபத்து மூவர் திருவிழாவில் அம்மன் வீதியுலா,   இவை தவிர ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.







1,008 கூடையில் பூச்சொரிதல் விழா!

 


ஆடிப்பூரம், விஜயதசமி, தைக் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய ஐந்து நாட்களில் மட்டுமே  அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவது வழக்கம். தனியே தங்கரதம் கொண்ட இவ்வாலயத்தில் நாள்தோறும்  அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

திருவள்ளுவர்  திருக்கோவில்

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக் குறள் என்ற அரிய நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவதரித்த இடத்தை  அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்தின் இடதுபுறம் சுமார் 500 அடி தூரத்தில் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இந்த ஆலயம் முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்தின் துணைக்கோவிலாகவும் விளங்கு கிறது.
 



No comments:

Post a Comment