Monday 8 August 2016

மயிலையில் அருளும் கற்பகவல்லி!

கபாலீஸ்வவரர் உடனுறை கற்பகவல்லி திருக்கோயில்!புன்னை என்றால் உடனே நினைவில் நிழலாடுவது மயிலை தான். அந்த அளவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக விளங்குவது மயிலை என்றழைக்கப்படும் மயிலாப்பூர். "கயிலையே மயிலை, மயிலையே கயிலை' என்று இந்தத் தலத்தைப் போற்றுகின்றன புராணங்கள். மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் ஆர்ப்பு ஊர் - மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

மேலும் உமையவள் மயிலாக வந்து இங்கு ஈசனை வழிபட்டதால் "மயிலை' என்றும், சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் "வேதபுரி' என்றும், சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் "சுக்ரபுரி' என்றும், ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், "கபாலீஸ்வரர்' எனும் திருப்பெயருடன் சிவனார் போற்றப்பட, இவ்வூர் கபாலீச்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 இத்தலம் பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 ஆவது தேவாரத்தலம் ஆகும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். சர்வரோக நிவாரண ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்குள்ள இறைவன் - இறைவியை மனமுருக பிரார்த்தித்தால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

 உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமையையும், பிரணவத்தின் மகிமையையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அம்மைக்கு அவ்விளக்கத்தினை கூறுகிறார். அப்போது அங்கு அழகிய மயிலொன்று தோகை விரித்தாடியது. தேவி, சுவாமியைக் கவனியாமல் தமது கவனத்தை அழகிய மயிலின் மீது செலுத்த, அதனால் கோபமுற்ற சிவபெருமான், மயிலின் மீது கொண்ட மையலால், நீ பூவுலகில் மயில் உருப்பெற்றிடுவாய் என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்யும்படி கூறினார். அதன்படி இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து அம்பிகை வழிபட்டார்.

அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் ஒரு தைப்பூசத்தன்று, காட்சியளித்து சாப விமோசனம் தந்தருளி, அவளுக்கு "கற்பகாம்பாள்' என பெயர் சூட்டினார்.

 திருமயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்ற வணிகர் மிகுந்த சிவபக்தர். இவரின் மகள் பூம்பாவை, ஒரு நாள் பூப்பறிக்கச் சென்றபோது பூநாகம் ஒன்று தீண்டியதால் இறந்துவிட, பூம்பாவையின் உடலை தகனம் செய்தபின், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்தார் சிவநேசர். இந்த நிலையில், திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வருவதையறிந்த சிவநேசர், அவரிடம் சென்று வணங்கி, தன் மகளுக்கு நிகழ்ந்ததைத் தெரிவித்தார். சிவபக்தருக்கு ஏற்பட்ட துயரத்தைக் கேட்ட அவர், திருமயிலை வந்து, ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கி, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை இறைவனின் முன் வைத்து, "மட்டிட்ட புன்னையங் கானல்...' என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மாண்ட பூம்பாவை உயிர் பெற்று, அச்சமயத்தில் உள்ள வயதுக்கேற்ற தோற்றத்துடன் எழுந்து வந்தாள். அவளுக்கு உயிர் கொடுத்த திருஞானசம்பந்தரிடம் தன் மகளை மணக்க வேண்டினார். ஆனால், தாம் உயிர் கொடுத்ததால் தன் மகளாகவே அவளை நினைப்பதாகச் சொல்லி ஆசீர்வதித்து சென்றார்.

 இத்தலத்திற்கு சிறப்பு சேர்ப்பது, பங்குனிப் பெருவிழா, அறுபத்து மூவர் திருவிழா முக்கியமானவை. பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். எட்டாம் நாளன்று காலையில், பூம்பாவையை ஞானசம்பந்தப் பெருமான் உயிர்ப்பித்ததைக் குறிக்கும் வகையில் பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெறும். கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த பின்னர், மண் குடுவையில் உள்ள வெல்லம் பிரசாதமாகத் தரப்படும். அஸ்தியில் இருந்து பூம்பாவையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை ஐதீகமாகக் கொண்டு இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

 அந்நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர, அவருடன் 63 நாயன்மார்களும் பவனி வரும் அழகைக் காண இரு கண்கள் போதாது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உதவியாக ஆங்காங்கு மயிலாப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் தண்ணீர்ப்பந்தலும் மோர் பந்தலும் அன்னதானமும் சிறப்புற நடைபெறும்.

மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.

 அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபநாசன் சிவன் இத் திருக்காட்சியைப் பாடி பரவியுள்ளார். மேலும் இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பெüர்ணமியன்று மூன்று நாள்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார்.

 ஏழு நிலைளும் ஒன்பது கலசங்களும் கொண்ட இத்திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தை சுற்றி புராணகால சிற்பங்களும் அமைந்துள்ளன. வாயிலில் நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரின் ஆனந்த தரிசனம். அவருக்கு இடதுபக்க சந்நிதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையாளும் அருள்பாலிக்கின்றனர். வலமாக வரும்போது சிங்காரவேரை தரிசிக்கலாம்.

சிங்கார வேலர் மயில் வாகனத்துடன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தனிக் கொடிமரத்துடன் விளங்குகிறார். இந்த முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கான தனி சந்நிதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. அருகிலேயே தண்டாயுதபாணி, வாயிலார் நாயனார் சந்நிதிகளும் அமைந்துள்ளன. பதினாறுகால் (அலங்கார) மண்டபமும், நான்கு கால் (சுவாமி எழுந்தருளும்) மண்டபமும் உள்ளன.

கோயிலின் மேற்கு பிரகாரத்தில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். கற்பகவல்லி, தன் பொற்பாதங்களை பீடத்தில் வைத்து நின்ற கோலத்தில் அருள்காட்சி தருகிறார். தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை அருளுகிறாள்.  கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

நோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8 ஆம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள்.

 கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். இங்கு வந்து ஈசனைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும் எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான், துர்க்காபரமேஸ்வரி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், வீரபத்திரர், 63 மூவர், தட்சிணாமூர்த்தி, மற்றும் உத்சவ மூர்த்திகளும் காட்சி தருகின்றனர். மேற்கு வாசலின் அருகே திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். இந்த வாசலுக்கு எதிரில் கபாலீஸ்வரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

கோயிலின் வட கிழக்கு பிரகாரத்தின் தெற்கு பக்கம் தல விருட்சமான புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளன. திருமயிலை தொடர்பான இலக்கியங்கள் முப்பதுக்கும் மேற்பட்டவையாகும். உலா, கலம்பகம், அந்தாதி, இரட்டை மணி மாலை, குறுங்கழி நெடில், மல்லிகைப் பா, முதலிய பல்வேறு வகை இலக்கியங்கள் திருமயிலைக்கு உள்ளன.

திருமயிலைத் தலபுராணம் எனும் நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது.


 

No comments:

Post a Comment