Monday 1 August 2016

சொக்கநாதர் திருவிளையாடல்கள்!

 
 
கோவில் மாநகர் என்றாலே மீனாட்சி கொலுவீற்றிருக்கும் மதுரையம்பதியைத்தான் குறிக்கும். இது ஒரு தூங்கா நகரம். கின்னஸில் இடம்பிடித்த உலகப் புகழ்பெற்ற நகரம். ஆண்டவனே வந்து அருளாட்சி செய்த- உமையம்மையே அவதரித்து செங்கோல்பிடித்து ஆண்ட நகரம். ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம்தான்.

புகழ்பெற்ற மதுரை மல்லி, மீனாட்சி குங்குமம், தாழம்பூ குங்குமம் இங்குமட்டுமே கிடைக்கும். பிட்டு என்றாலே மதுரை நினைவுதான் வரும். பிட்டுக்கே ஒரு திருவிழா நடத்தும் தலமிது.இங்கு முதலில் கோவில் உருவானது; அதன்பின்தான் ஊர் உருவானது. கோவிலின் வெளிச்சுற்றிலிருந்து ஆரம்பிக்கும் ரத வீதிகள் ஒவ்வொன்றும் தமிழ் மாதங்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. மூன்று தமிழ்ச் சங்கம் அமைந்த பெருமை கொண்ட தலமிது. அந்தந்த மாத விசேஷம், அந்த மாதத்தின் பெயர் கொண்ட வீதியில்தான் நடைபெறும். ஆவணி மூலத்திருவிழா ஆவணி வீதியில்தான் நடைபெறுகிறது.



சொக்கநாதப் பெருமான் மீனாட்சியம்மையை மணந்து கொண்டு, அவள் ஆண்ட இத்தலத்தை அவரும் ஐந்து மாதங்கள் அரசாண்டார். மதுரையம்பதியை மீனாட்சியம்மை ஏழு மாதங்கள் அரசோச்சுவாள். சொக்கர் இத்தலத்தில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். அதில் மிகச் சிறப்பான பத்து திருவிளையாடல்களை சொக்கர் லீலையாக நடத்தி ஆவணிமூல விழாவாகக் கொண்டாடுவார்கள். இவ்விழா கொடியேற்றத்துடன் 12 நாட்கள் நடைபெறும்.



முதல் நாள்

கரிக்குருவிக்கு உபதேசப் படலம் நடைபெறும். வினைப்பயனால் ஒருவன் கரிக்குருவியாகப் பிறக்க நேரிட்டது. மற்ற பறவைகளின் தொல்லைக்கு அஞ்சி காட்டில் வாழ்ந்தது. அங்குவந்த ஒரு சிவபக்தர், "குருவியே, நீ இறைவனை வணங்கித் தவம்செய்' என்றார். அதன்படி குருவியும் செய்தது. மகிழ்ந்த இறைவன் குருவிக்கு காட்சிகொடுத்து மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்து முக்தியும் அளித்தார். அக்குருவியின் பெயர் வலியான்.
இரண்டாம் நாள்

நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெறும். ஒரு குளக்கரையில் பல முனிவர்கள் அமர்ந்து மதுரைப் புராணம், திருவிளையாடல் புராணத்தை பாராயணம் செய்தார்கள். அங்கு வசித்த நாரை இதைக்கேட்டுக் கேட்டு இறைவனை மனதார புகழ ஆரம்பித்தது. அதனால் சிவன் நாரைக்கு முக்தி தந்தார்.

மூன்றாம் நாள்

மாணிக்கம் விற்ற படலம். வீரபாண்டிய மன்னனின் மகனுக்கு மணிமகுடம் தரிக்க ஏற்ற மாணிக்கங்களைத் தரவேண்டி, இறைவன் சொக்கர் மாணிக்க வணிகராக வந்து மாணிக்கம் விற்ற லீலைதான் மூன்றாம் நாள் திருவிழாவில் நடைபெறும்.

நான்காம் நாள்

தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை. சண்பகப் பாண்டியன், தன் மனைவியின் கூந்தலிலுள்ள மணம் இயற்கையானதா செயற்கையானதா என்ற ஐயம் தீர்ப்பவருக்கு பொற்கிழி அளிப்பதாக பறையறிவித்தான். அதை தன் பக்தனான ஏழைப்புலவன் தருமிக்கு வாங்கித்தர எண்ணிய இறைவன், தானே அதன் பதிலை எழுதி புலவரிடம் கொடுத்து அதை மன்னருக்கு படித்துக் காட்டி பொற்கிழி பெறவைத்தார். இருப்பினும் நக்கீரன் அதை ஏற்கவில்லை. அதனால் கோபமடைந்த சொக்கர் நெற்றிக்கண் திறந்தார். அதைக்கண்ட நக்கீரன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தைரியமாக வாதிட்ட படலம் நடைபெறும்.

ஐந்தாம் நாள்

உலவாக்கோட்டை அருளும் திருவிளையாடல். அடியார்க்கு நல்லான்- தருமசீலை தம்பதிகள் வறுமையிலும் மகேஸ்வர பூஜையை விடாது நடத்திவந்தனர். இதுகண்டு மகிழ்வுற்ற இறைவன் அவர்களுக்கு உதவ, எடுக்க எடுக்கக் குறையாத உணவுப் பொருட்களைத் தரும் உலவாக் கோட்டையை அளித்தார்.
ஆறாம் நாள்

அங்கம் வெட்டிய லீலை. வாள் பயிற்சி பயின்ற சித்தன், தன் குருவுக்கே போட்டியாக வித்யாகூடம் ஏற்படுத்தி குருவின் மனைவிக்கு துரோகம் இழைத்தான். தன் கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் சித்தன் தரும் துன்பம் தாளாத குருவின் மனைவி சொக்கரிடம் முறையிட்டாள். சொக்கர் குருவின் உருவில் தோன்றி சித்தனுடன் வாள்போரிட்டு, தவறுசெய்த அவன் அங்கங்களை வெட்டி குருவின் மனைவிக்கு நிம்மதியளித்த லீலை நடைபெறும்.

ஏழாம் நாள்

வளையல் விற்கும் லீலை. தாருகாவனத்து முனிவர்கள் ஆணவத்தால் இறைவனை இகழ்ந்தனர். அதனால் இறைவன் பிட்சாடனர் வேடத்தில் தாருகாவனம் செல்ல, முனி பத்தினிகள் அவர் அழகில் மயங்கினர். அதனால் ஆத்திரமடைந்த முனிவர்கள் தங்கள் மனைவிகளை மதுரையில் பிறக்குமாறு சாபமிட்டனர். இப்படி மதுரையில் இருந்த முனிவர்களின் மனைவிகளுக்கு சாப விமோசனம் தர வளையல் வியாபாரியாக வந்து, அப்பெண் களின் கரம் பற்றி வளையல் அணிவித்து விமோசனமளித்த லீலை நடக்கும்.7-ஆம் நாள் காலை வளையல் விற்ற படலம்; இரவு பட்டாபிஷேகம் நடைபெறும்.

எட்டாம் நாள்

நரி பரியான கதை. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணிபுரிந்த திருவாதவூரரிடம் (மாணிக்கவாசகர்) மன்னன் குதிரை வாங்க பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான். வழியில் திருப்பெருந்துறை தலத்தில், குதிரை வாங்க எடுத்துவந்த பணத்தால் சிவனுக்கு கோவில் கட்டிவிட்டார். இது கேட்டறிந்த மன்னன் கோபம்கொண்டு வாதவூரரை சிறையில் அடைத்தான்.தன் பக்தனை விடுவிக்க இறைவனே குதிரை வியாபாரியாக வந்து நரிகளை பரிகளாக்கி மன்னரிடம் தந்து வாதவூரரை விடுவித்தார்.அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறிவிட்டன. இதுகண்டு சீற்றமடைந்த மன்னன் வாதவூரரை வைகை மணலில் நிற்கவைத்து தண்டித்தார். அதனால் இறைவன் வைகையில் வெள்ளத்தை உருவாக்கினார். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகும்நிலை.

ஒன்பதாம் நாள்

பிட்டுக்கு மண்சுமந்த படலம். மன்னன் வீட்டுக்கு ஒருவர் வந்து கரை அடைக்க உத்தரவிட்டான். அதன்படி வீட்டுக்கு ஒருவர் வந்து கரையடைத்தனர். வந்தி என்ற மூதாட்டி பிட்டு செய்து விற்றுவந்தாள். முதல் பிட்டை இறைவனுக்குப் படைத்த பின்பே வியாபாரம் செய்வாள். அவள் தன் சார்பாக அனுப்பிவைக்க கூலிக்கு ஆள் தேடினாள். கிடைக்கவில்லை. மனவருத்தத்துடன் இருந்த அவளிடம் கூலியாளாக வந்த இறைவன், அவளுக்காக தான் கரையடைப்பதாகவும் கூலியாக உதிர்ந்த பிட்டைத் தருமாறும் கேட்டு வாங்கி உண்டுவிட்டு ஆற்றங்கரை சென்றார்.அங்கே வேலை செய்யாமல் ஆடிப் பாடியபடியே நேரம் கடத்தினார். எல்லாரும் தங்கள் பங்கு கரையை அடைத்துவிட்டனர். அடைபடாமல் இருந்தது வந்தியின் பங்குதான். இது கேட்ட மன்னன் அங்குவந்து தன்கை பிரம்பால் கூலியாளை அடித்தான். அடுத்த நொடி அந்த அடி உலகில் உள்ளோர் அனைவர் முதுகிலும் விழுந்தது. அப்போது இறைவன் மன்னனுக்கு காட்சி கொடுத்து வாதவூரரின் மாண்பைத் தெரியவைத்து மறைந்தார். இதுவே இவ்விழாவின் மிக முக்கியமான பெருவிழாவாகும். அதனால் மதுரை மக்கள் இவ்விழாவை பிட்டுத் திருவிழா என்றே போற்றுகின்றனர்.

பத்தாம் நாள்

விறகு விற்கும் படலம். ஹேமநாத பாகவதர் ஊர் ஊராகச் சென்று அங்குள்ள புலவர்களை சோதித்து வெற்றி பெற்று வருபவர். அவர் மதுரைக்கும் வந்தார். அவைப் புலவர் மனவருத்தமடைந்து சொக்கரிடம் முறையிட்டார். சொக்கர் புலவருக்கு உதவ விறகு விற்பவராக வந்து இரவு ஹேமநாத பாகவதர் தங்கியிருந்த மாளிகைத் திண்ணையில் அமர்ந்து பாடினார். அப்பாட்டைக் கேட்ட பாகவதர் "அப்பா, நீ யாரிடம் பாட்டு கற்றாய்?' என வினவினார்.அதற்கு விறகுவெட்டி, "நான் இந்நாட்டு அவைப்புலவரிடம் ஒரே ஒருநாள் பாட்டு பயின்றேன். நீ சரியில்லை போ என விரட்டிவிட்டார். ஏதோ எனக்குத் தெரிந்ததை உளறுகிறேன்; அவ்வளவுதான்' என்றான். அதுகேட்ட பாகவதர், "ஒருநாள் பயின்ற இவனே இப்படியொரு தேவகானம் பாடும்போது அதைக் கற்றுத்தந்தவர் எவ்வளவு பெரிய மேதை! அவரைப் போய் சோதிக்க வந்தோமே' என அங்கிருந்து சென்றுவிட்டார்.

11-ஆம் நாள்

சட்டத்தேரில் நான்கு ரதவீதியிலும் இறைவன் பவனி நடக்கும்.

12-ஆம் நாள்

தீர்த்தவாரி நடைபெற்று விழா இனிதே நிறைவடையும்.


 

No comments:

Post a Comment