Friday 19 August 2016

கணபதியே வருவாய்! அருள்வாய்!

விநாயகர்-21

விநாயகரை இருபத்தியொரு எண்ணிக் கையிலான பூஜைப் பொருட்களால் வழி படுதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.


மலர்கள் 21, இலைகள் 21, பழங்கள் 21, அறுகம்புல் 21, மோதகம் 21, அதிரசம் 21, அப்பம் 21.மனிதனுக்குள் இருக்கும் இந்திரியங்கள் 21.அவை: ஞானேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; மனம் 1. ஆக இந்திரியங்கள் 21. இந்த 21 இந்திரியங்களிலும் நிறைந்து அருள்பாலிக்கும் ஓங்கார உருவம் படைத்தவர் விநாயகர் என்று ஞான நூல்கள் கூறுகின் றன.


21 பொருட்களை சமர்ப்பித்து வழிபட நமக்கு 21 அம்சங்களை அள்ளிக்கொடுப்பார் விநாயகர்.
தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வு, அழகு, வீரலட்சுமியின் அருள், விஜயலட்சுமியின் கடாட்சம், எல்லாரும் விரும்பும் தன்மை, குடும்பத்தில் ஒற்றுமை, மக்கட்செல்வம், நல்லறிவு, பதவி, நற்புகழ், துன்பம் வராமை, தீயதை அகற்றுதல், செல்வாக்கு, சாந்த
குணம், பிறர் நம்மீது பொறாமைப்படாமல் இருத்தல் ஆகிய 21 சிறப்புகளை நமக்கு அள்ளித்தரும் மாபெரும் வள்ளல் விநாயகப் பெருமான்!


விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.


நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்து                     லம்போதராய
ஏக தந்தாய விக்ன நாசினே
சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:


விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.

விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?

பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம்) - திருவோணம்

விநாயகரின் ஐந்து கைகள் :

விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.
அங்குசம் தாங்கிய வலது மேல் கை - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம

வெல்லப் பிள்ளையார் :

விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் விளக்கு

விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.



 

No comments:

Post a Comment