Friday 19 August 2016

ஐவர்பாடி பிரத்யங்கிரா தேவி!


ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவபெருமான் சரபேஸ்வரராக உரு வெடுத்தார். சரபம் பாதி பறவை உருவத்தையும் பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை. கூரிய நகங்களையும் பற்களையும் கொண்டது. சரபரும் நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட  நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.



நரசிம்மருக்கும் சர பருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு கடும் எதிரியாகும். மிகுந்த கோபத் தில் இருந்த சரபருக்கு அவர் நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள்.

 சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும் சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர். இருவரும் சரபருக்கு  இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியேதான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா  என்று அழைக்கப்படுகிறாள். நரசிம்மர் சாந்தமானார்.

தான் சிவபெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் துதித்தார். இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின்  அஷ்டோத்திர நாமாக்கள். இந்த அம்பிகையின் மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள். இத்தேவியின் நாமமே அந்த இரு ரிஷிகளின் பெயர்களிலும் உள்ளன.



தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவ பெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்யங்கிராதான். குரோதத்திலிருந்து உதித்தவளாதலால் இவளுக்கு குரோத சம்பவாயா என ஒரு திருநாமமும் உண்டு. சிவ  த்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கூட தன்னை வெல்ல முடியாது என்பதை  உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.

தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின்  அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார்.  இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர். 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர்.

அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி. இவள் பத்ரகாளியின் அம்சம். பிரத்யங்கிரா தேவிக்கான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில், ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் மற்றும் திவ்ய தேச தலமான  ஒப்பிலியப்பன் திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. ஆலய அமைவிடத்தின் பெயர் ஐவர்பாடி.

பஞ்ச பாண்டவர்கள் இத்தலம் வந்து தேவியை பூஜித்து அருள் பெற்றதால் இப்பெயர். பின்னர்  இதுவே மருவி அய்யாவாடி என்றானது.



தேவி சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும் சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும் நீல நிற ஆடை  உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் பாலிக்கின்றாள். 

அகோர ரூபம் என்றாலும் தேவி இங்கு சர்வமங்களங்க ளையும் அருளும் குணம் கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம் ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த பயங்கள் தீர துணையிருப்பவள். கேட்டவர்க்கு கேட்டதை அருளும்  இவள் பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள்.

பஞ்ச பாண்டவர் இந்த தேவியை பூஜித்ததன் சாட்சியாக இத்தலத்தில் உள்ள தல விருட்சம் ஐந்து விதமான இலைகளை கொண்டுள்ளது.

 பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா  பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே  தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும்  இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

‘‘ ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலாஜிஹ்வே கராள
                          தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட்’’

என்ற இவளது மூல மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து, இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே  தீரும்.




No comments:

Post a Comment