Monday 13 June 2016

வையம் போற்றும் வைரமுடி சேவை!







கோயில் எனப்படும் திருவரங்கமும், திருமலை என்கிற திருப்பதியும், பெருமாள் கோயில் எனப் போற்றப்பெறும் காஞ்சிபுரமும், மேல்கோட்டை என அழைக்கப்பட்டு வரும் திருநாராயணபுரமும் வைணவச் சிறப்புடைய தலங்களாகும்.


இந்த வரிசையில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட முதல் மூன்று தலங்களுடன் திருநாராயணபுரமும் சேர்த்து அழைக்கப்படும். காரணம், வைணவ ஆச்சார்யர் பகவத் ராமானுஜர் விரும்பி சில காலங்கள் வாசம் செய்த தலம் மேல்கோட்டை. மேலும் இத்தல மூலவரும் உற்சவ மூர்த்தியும் அவர் திருக்கரங்களினாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பு உடையது.


இத்திருத்தலத்தில் பங்குனி மாதத்தில் (பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில்) நடைபெறும் உற்சவத்தில் வைரமுடி (கிரீடம்) அணிந்து மாலவன் உலா வரும் கண்கொள்ளா சேவை வையகத்தில் வைணவம் போற்றும் மாபெரும் விழாவாகும். விலைமதிப்பற்ற வஜ்ர மகுடத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவின் சிறப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


பகவத் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த காலத்தில் சோழ மன்னன் ஒருவனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை வந்தபோது சீடர்களின் விருப்பப்படி திருநாராயணபுரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டார். வழியில் துளசி செடிகள் அடர்ந்த புதரில் புற்றுக்குள் திருமாலின் சிலா விக்ரகத் திருமேனி ஒன்றைக் கண்டார். மேல்கோட்டையில் ஆலயம் ஒன்றை எழுப்பி அதனை பிரதிஷ்டை செய்தார். அதுதான் நாம் இன்று தரிசிக்கும் மூலவர், திருநாராயணன் என்ற நாமத்துடன் மேற்கே நின்ற திருக்கோலம்.


இத்தலத்தின் சிறப்பே செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் உற்சவமூர்த்தியால்தான். அந்த விக்ரகம் டெல்லி பாதுஷா மன்னர் பாதுகாப்பில் இருப்பதை அறிந்த ராமானுஜர் அங்கு சென்று மன்னரிடம் விரும்பி கேட்டு "வாராய் என் செல்லப்பிள்ளையே' என்று அன்புடன் கூவி அழைக்க அந்தப்புரத்தில் இருந்த விக்ரகம் அசைந்து அசைந்து வந்து அவரின் மடியில் அமர்ந்ததாம். இதுவே இத்தலத்தில் உற்சவ மூர்த்தியாய் அலங்கரிக்கின்றது (கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த கோவிந்தனின் இந்த செய்கை "யதிராஜ சம்பத்குமார வைபவம்' என்ற பெயரில் உற்சவமாக உடையவரின் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் இன்றைக்கும் கொண்டாடப் படுகின்றது). செல்லப்பிள்ளை, சம்பத்குமார், ராமப்பிரியர் என்று பெயர்கள் கொண்டு வாத்சல்யத்துடன் அழைக்கப்படும் இந்த விக்ரகத்தின் திருமேனி.


ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாவினால் கொடுக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டது. அதன்பின் கிருஷ்ண பரமாத்மாவினாலும், பலராமனாலும் ஆதரிக்கப்பட்டதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது. திருநாராயணபுரத்தில் தனிச்சந்நிதி கொண்டிருக்கும் தாயாரின் திருநாமம் யதுகிரி நாச்சியார் கருவறையில் மூலவர் பாதத்தின் கீழ் பூமிதேவி, வரநந்தினி நாச்சியார் சிலா திருமேனிகள் அலங்கரிக்கின்றன.


ஒரு காலத்தில் பிரகலாதன் மகன் விரோசனன் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பெருமானின் கீரீடத்தை அபகரிக்க, பகவானின் ஆணைப்படி கருடாழ்வார் அதை மீட்டு துவாரகையை ஆண்ட கிருஷ்ணனின் தலையில் அணிவிக்க அது பொருந்தவில்லை. அடுத்ததாக, திருநாராயணபுரத்தில் உள்ள ஸ்ரீராமப்பிரிய உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டதாம். என்ன ஆச்சரியம்! அந்த திருமேனியில் கனக்கச்சிதமாக பொருந்தியதாம். இந்த தகவலை கருட பகவான் பாற்கடல்நாதனிடம் சொல்ல அவரும் அந்த கிரீடம் பூலோகத்திலேயே இருக்க அனுக்கிரகித்தாராம். கருடனுக்கு வைநதேயன் என்ற பெயர் உண்டு. அதனால் அவரால் சாற்றப்பட்ட கிரீடம் வைநமுடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் வைரமுடி என்ற பெயர் கொண்டு திகழ்கின்றது. மைசூர் அரண்மனை கருவூலகத்தில் பாதுகாப்பாக உள்ளது.


இந்தப் புராண வரலாற்று அடிப்படையில் மேல்கோட்டையில் பிரதிவருடம் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது உற்சவ மூர்த்திக்கு இந்த வைரமுடி அணிவிக்கப்படுகிறது. அந்த அலங்காரத்துடன் பெருமாள் திருவீதி உலா கண்டருளும் அழகைக் காண கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளுவார்கள். இவ்வாண்டு மார்ச் 19-ஆம் தேதி (புஷ்யம் ஏகாதசி நன்னாள்) அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை வைரமுடி சேவையில் பெருமாளை கண்குளிரத் தரிசிக்கலாம்.


தணபத்ரி என்று அழைக்கப்படும் திருநாராயணபுரத்தலம் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் பெங்களுர் - மைசூர் இரயில் பாதையில் பாண்டவபுரம் இரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேல்கோட்டைக்கு செல்ல முடியாதவர்கள் அதே போன்ற வைரமுடி சேவை நடத்தப்படும் சென்னையில் மயிலை மாதவப்பெருமாள் ஆலயம், பாரிமுனை வரதாமுத்தியப்பன் தெருவில் உள்ள வரதராஜபெருமாள் ஆலயம், அயனாவரம் செல்லப்பிள்ளை ராயர் கோயில், பள்ளிக்கரணை ஜல்லடம்பேட்டையில் உள்ள முத்து திருநாராயணன் கோயில் போன்ற இடங்களில் தரிசிக்கும் பேற்றினைப் பெறலாம்.



No comments:

Post a Comment