Wednesday 15 June 2016

திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவி!



திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. இதனை. திருஆனைக்கா, திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்றும் அழைப்பர்.

காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது.



இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது.



அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயிலிலும், மழையிலுமாகக் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாதபடி காத்தது. யானை காவிரி ஆற்றிலிருந்து துதிக்கையால் நீர் கொண்டுவந்து அபிஷேகித்து வழிபட்டது.



யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவற்றின் பக்தியை மெச்சிய சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.



சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து, பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாம். இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்கிறார்கள்.



திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம் - நீர்த்தலம் ஆகும். 

மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட் பிராகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக (அப்பு என்றால் நீர்) எழுந்தருளியுள்ளார். நாகப்பழ மரத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்றுபெயர். இந்த லிங்கம், தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருந்தாலும் கருவறையில் இந்நீர்க் கசிவு வற்றுவதில்லை!

எனவே ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய அன்னாபிஷேகத்தை இத்திருத்தலத்தில் வைகாசி பெளர்ணமியன்று செய்கின்றனர். ஜம்புலிங்கேஸ்வரரை, கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.

வீணையில்லா சரஸ்வதி, தேவியருடன் சந்திரன், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் சனிபகவான், அருணகிரியின் விருப்பத்திற்கிணங்க காமத்தை அசுரனாக்கி அவனை அடக்கிய முருகப்பெருமான் என பல அரிய சந்நதிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிராகாரங்களும் கொண்ட கோயில் இது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நதி நான்காம் பிராகாரத்தில் உள்ளது.
 


தனி சந்நதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியான இந்த நாயகி காட்சி தருகிறாள். இவளுடைய ஆட்சித்தலம், திருவானைக்கா. அகிலாண்டேஸ்வரி அணிந்திருக்கும் காதணிகள் (தாடகங்கள்) பெரிதானவை, பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். அம்பாள் முன்னொரு காலத்தில் மிகஉக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபட மிகவும் அச்சமுற்றதாகவும், அச்சமயம் இங்கு வந்த ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும் இந்த இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. பின்னாளில் முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை மேலும் தணித்தார்கள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.

அகிலாண்டேஸ்வரி, வாராஹி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறாள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியின் தரிசனத்தால் இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீவித்யா பூஜை வைதீக முறைப்படி செய்யப் படுகிறது.

ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ்வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று மாணவ, மாணவியர் அதிகம் பேர் வந்து, தம் கல்வி மேம்பட வேண்டி செல்வர். அதனால் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருமண வைபவம் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இத்தல பள்ளியறைக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரரே எழுந்தருள்கின்றனர்.

அந்தணர் ஒருவர் வாக்சித்தி பெற அகிலாண்டேஸ்வரியை உபாசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு திருவருள் புரிய தாம்பூலம் தரித்த நிலையில் ஒரு சாதாரண மானிடப் பெண்ணாக அந்த அந்தணரை அணுகிய அகிலாண்டேஸ்வரி ‘நான் இந்த தாம்பூல ரசத்தை தங்கள் வாயில் உமிழவா?’ எனக் கேட்டாள். அதனால் கோபமுற்ற அந்த அந்தணர் அவளை கடிந்து கொள்ள, அப்போது ஆலயத்தை கூட்டி பெருக்கும் வரதர் எனும் அடியவர், ‘ஆலயம் தூய்மையாய்  இருக்க வேண்டும். அதனால் என் வாயில் அந்த தாம்பூல ரசத்தை துப்புங்கள்,’ எனக்கூற தேவி அவன் வாயில் அந்த தாம்பூல ரசத்தை சேர்த்தாள். அந்த வரதரே பின்நாளில் கவி காளமேகமாய் புலமை பெற்றார்!

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.



உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.



மற்றொரு சந்நதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டு, சிவனருளால் அழகாபுரிக்கு அதிபதியானான் குபேரன். பல அரிய சிற்பங்களை இத்தலத்தில் கண்டு மகிழலாம்.

அவற்றில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சந்நதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிராகாரத் தூணில் இந்த சிற்பம் காணப்படுகின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவை அன்னை சந்நதிக்கு வெளியே உள்ள ஒரு தூணில் காணலாம். ஏகநாதர், மும்மூர்த்திகளும் சமமானவர்; மூவரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறார்.

 நான்கு கால் தூணில் உள்ள ஆரணங்குகள் எல்லோர் மனதையும் கவருகின்றனர். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரமிக்க வைக்கிறது. சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமன்றி, விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆற்றிய திருப்பணிகளை 154 கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இவ்வாலயம் காலை 7 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவியின் தாள்கள் பணிவோம்.

1 comment:

  1. ஜம்புகேஸ்வரை நேரில் தரிசனம் செய்தது போன்ற ஒரு நல்ல பதிவு.... நன்றி 🙏

    ReplyDelete