Sunday 12 June 2016

ராதாஷ்டமி!



தமிழகத்தில் 108 திவ்ய தேசங்கள் என வைணவ ஆலயங்கள் உள்ளன. கண்ணனை பிரதானமாகக் கொண்ட மன்னார்குடி ராஜகோபாலன், மதுரை மதனகோபாலன், தஞ்சை வேணுகோபாலன், மயிலை மாதவப் பெருமாள் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இங்கெல்லாம் கண்ணனுடன் ருக்மிணி, சத்யபாமாதான் இருப்பர். ராதையைக் காணவியலாது. ஆனால் வடநாட்டில் கண்ணனுடன் ராதையைத்தான் காணமுடியும். ருக்மிணி, சத்யபாமாவைக் காண்பதரிது.


கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார். அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில், வ்ருஷபானு- கீர்த்திதா தம்பதிக்கு, பர்ஸானா என்னு மிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித் தாள்.


(கோவர்தன் அருகே பர்ஸானா உள்ளது. கோவி லும் உள்ளது. ராதாஷ்டமி, ஹோலி போன்ற நாட்களில் சிறப்பாக விழா நடக்கும்).

கண்ணன் ஸ்யாம (கருப்பு) நிறமுடையவன். ராதா சந்தன (பொன்) நிறத்தினள்.




"க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா
க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா'


என்று ராதா உபநிடதம் கூறுகிறது. "கண்ணன் வணங் கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா' என்று பொருள்.

"ராதிகா கண்ணனின் ஆத்மா. கண்ணன் ராதிகாவை தனது ஆத்ம அனுபூதியில் அமிழ்த்தியுள்ளார்.  எனவே கண்ணனுக்கு ஆத்மராமன் என்று பெயர்' என ஸ்காந்த புராணத்தில் உள்ளது. கண்ணன் சர்க்கரையென்றால் ராதை இனிப்பு. கண்ணன் தீபமென்றால் ராதை ஒளி. கண்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி. கண்ணன் மலரென்றால் ராதை மணம்.


அன்னை பராசக்தியின் உன்னத லீலைகளைக் கூறும் தேவி பாகவதம் ராதையைப் பற்றி பலவாறாக விவரிக்கிறது. துதிகளும் உள்ளன. கண்ணனுடன் சேர்ந்து கோபியர்கள் ஆடிய போது, அவர்களில் பிரதானமாக  விளங்கியவள் ராஸேஸ்வரி என்னும் ராதை என்றும்; பஞ்ச பிராக்கிருதிகளான துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, ராதா, சாவித்ரி ஆகியோரில் ராதையையும் வைத்துக் கூறுகிறது.

"கணேச ஜனனி துர்கா ராதா
லக்ஷ்மி சரஸ்வதி ஸாவித்ரி ச
ஸ்ருஷ்டி விதௌ ப்ரக்ருதி
பஞ்சதா ஸ்ம்ருதா.'


கண்ணனைவிட ராதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு துதியும் உள்ளது.

"க்ருஷ்ண அர்ச்சாயாம் ந அதிகாரோ
யதா ராதாம் அர்ச்சாயாம் வினா
வைஷ்ணவா: ஸகலா: தஸ்மாத்
கர்த்தவ்யம் ராதிகார்ச்சனம்.'

ராதையைப் பூஜிக்காமல் கண்ணனைப் பூஜிக்கத் தகுதியில்லை என்கிறது  மேற்கண்ட துதி. எனவே ராதையையும் பூஜிக்கவேண்டும்.

"ராத்னோதி சகலான் காமான்
தஸ்மாத் ராதா இதி கீர்த்திதா.'

பக்தர்கள் அனைவரின் வேண்டுதல் களையும் பூர்த்தி செய்பவள்; ஆகவே அவள் பெயர் ராதா என்கிறது சுலோகம்.

சிவனுக்கு கைலாயம்; விஷ்ணுவுக்கு வைகுண்டம்; முருகனுக்கு கந்தலோகம். அதுபோல கண்ணனுக்கு கோலோகம். இதுபற்றி ராதா தாபினீ உபநிடதம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

கோலோகத்தில் கிருஷ்ணர் ஒருவரே. லீலைக்காக ராதா- கிருஷ்ணர் என ஈருடல் ஆனார். கண்ணனிடமிருந்து உதித்தவர்கள் கோபர்கள் (இடையர்கள்). ராதாவிடமிருந்து தோன்றியவர்கள் கோபிகைகள்.

"ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.'


கலிசந்தரண உபநிடதம் கூறும் இந்த துதி அனைவரும் அறிந்ததுதான். சைதன்ய மடங்களில்- இஸ்கான் கோவில்களில் இடையறாது ஒலிக்கும் நாம மந்திரம். இதன் பொருள் என்ன?

ஹரே:
ஹரதி ஸ்ரீகிருஷ்ண மன: ஆஹ்லாத ரூபிணி
அதோ ஹரே இதி ஔனவ ராதா ப்ரகீர்த்திதா.'


கண்ணனின் மனதை வென்றவள்- ஆட்கொண்டவள் ராதை. ஆக, "ஹரே' என்றால் ராதை.

க்ருஷ்ண:

"ஆனந்தைக ஸுகஸ்வாமி ஸ்யாம கமல லோசனம்
கோகுலானந்தனோ நந்த: க்ருஷ்ண இதி ஆபித்யதே.'

ஆனந்த சொரூபன்; கோகுலத்துக்கு ஆனந்தத்தை யளிப்பவன்; தாமரைக் கண்ணன்; நீலவண்ணமுடையவன் கிருஷ்ணன்.

ராம: (அயோத்தி ராமரல்ல):

"ராகார ஸ்ரீராதா மகாரோ மதுஸுதன:
த்வயே விக்ரஹ ஸம்யோகாத் ராம நாம பவேத்திய.'


"ரா' என்றால் ராதை; "ம' என்றால் மதுசூதனன்- மாதவன். எனவே "ராம' என்றால் ராதா மாதவ ஐக்கியம்.

கோபிகைகள் கண்ணன்மீது கொண்ட காதலை, மாதுர்ய பக்தி- பிரேம பக்தி என்று தனது பக்தி சூத்திரத் தில் குறிப்பிடுகிறார் நாரதர். அந்த ஆனந்த பரவச அனுபவத்தை உணரத்தான் முடியும்.


சம்மோஹ தந்த்ரத்தில், சிவ- பார்வதி உரையாடலாக கோபால சகஸ்ரநாமம் வரும். அதில் ராதையின் நாமங்கள் இடம்பெற் றுள்ளன. பிருகந் நாரதீய புராணத்தில், சனத்குமாரர்- நாரதர் உரையாடலாக ராதா கிருஷ்ண சகஸ்ரநாமம் உள்ளது. இதில் முதல் 500 பெயர்கள் கிருஷ்ணனுக்கு; அடுத்த 500 பெயர்கள் ராதைக்கு. இவை தவிர, நாரத பாஞ்சராத்ரத்தில் சிவ- பார்வதி உரையாட லாக ராதிகா சகஸ்ரநாமம் உள்ளது.

ராதாஷ்டமி புண்ணிய நாளில் ராதா- கிருஷ்ணரை நினைத்து பக்தி வெள்ளத்தில் அமிழ்வோம்.









No comments:

Post a Comment