Sunday 12 June 2016

சீர் மிகு வாழ்வருளும் சிராவண மாத விரதங்கள்!






 தூர்வா கணபதி விரதம்

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லை நிறைய பரப்பி, புல்லின்மீது ஸ்ரீகணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில், "கணபதயே நம: உமாபுத்ராய நம: அகநாசநாய நம: ஏகதந்தாய நம: இபவக்த்ராய நம: மூஷிகவாஹனாய நம: வினாயகாய நம: ஈசபுத்ராய நம: ஸர்வஸித்திப்ரதாயகாய நம: குமாரகுரவே நம:' என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//




இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.


சீதளா சப்தமி விரதம்


சிராவண மாத சுக்ல பக்ஷ சப்தமிக்கு சீதளா சப்தமி என்று பெயர். அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

அசுரர்களின் தொல்லையால் கடும் வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும் (வைசூரி) கடும் ஜுரத்துடனும் உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள். தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் சுடரொளி ஒன்று தோன்றி அம்மனாக உருப்பெற்றது. அந்த அம்மனே சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

சீதளா சப்தமியன்று சீதளா தேவியை பூஜை செய்து, மாம்பழமும் வெள்ளரிக்காயும் தயிர் சாதமும் நிவேதனம் செய்து அதை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம். அதாவது அன்று காலை நித்யகர்மாவை முடித்துவிட்டு, "மம புத்ரபௌத்ராதி அபிவிருத்தி த்வாரா சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் ச்ராவண சுக்ல ஸப்தமி புண்யகாலே ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதன தானமஹம் கரிஷ்யே' என்ற சங்கல்பம் சொல்லி, ஒரு வெள்ளரி இலையில்  தயிர்சாதம் வைத்துக்கொண்டு, ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காயுடன் சேர்த்து, "ஸ பரிவார சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதனம் சீதளா ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே' என்று சொல்லி தெய்வ சந்நிதியில் வைத்து, பின்னர் அதை ஏழைக்குத் தந்து சாப்பிடச் செய்யவேண்டும். இதனால் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தாலேற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி முதலான நோய்கள் விலகும். மேலும் ஒருபோதும் இதுபோன்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்கும் தோன்றாது என்கிறது ஸ்காந்த புராணம்.






அசூன்ய சயன விரதம்

சிராவண மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு,

"லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்'



(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோ அப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின்  வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பாத்ம புராணம்.











No comments:

Post a Comment