Tuesday 14 June 2016

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணர்!



அப்ரமேயர் 
மிகவும் பிரசித்தி பெற்ற தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில் பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் பாதையில் சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ..பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் சென்னபட்டினம் தாண்டி சுமார் 4 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலையிலேயே நவநீத கிருஷ்ணன் கோவில் தோரண வாயில் காணலாம் . இது ஒரு பெருமாள் கோவில் . ராமப்ரேயா சுவாமி என்பது பெருமாள் பெயர் . தாயார் பெயர் அரவிந்தவல்லி .இந்த பகுதியில் இந்த பெருமாள் கோவில் அப்ரமேயச்வாமி கோவில் என்று தான் பிரபலமாக அறியபடுகிறது .இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு உள்ள தவழும் நவநீத கிருஷ்ணன் சன்னதி தான் . இங்கு வந்து தரிசனம்  செய்தால் புத்திர தோஷம் மற்றும் சயன தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை .


 பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மரத்தாலான மற்றும் வெள்ளியிலான தொட்டில்களை இங்கு காணிக்கையாக செலுத்துக்கிரார்கள் .இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளது .தகிஷ்ண அயோத்தியை ,சதுர் வேத மங்களபுரம் , ராஜேந்திர சிம்ஹ நகரி என்றாலும் பெயர்கள் இருந்திருக்கிறது . தவழும் கிருஷ்ணனுக்கு கன்னடத்தில் 'அம்பேகள்' கிருஷ்ணன் என்று சொல்கிறார்கள் .
 
ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத  அப்ரமேயர் 
 
இந்த ஆலயம் இரண்டு அடுக்கு ஆலயங்களாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்த உடன் எதிரில் தெரிவது அப்ரமேயர் ஆலயம் . அற்புதமான உருவ அமைப்பில் சாலிக்கிராம கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ள மூலவர் தனது கைகளில் சங்கு மற்றும் சக்கராத்தை ஏந்தியும் மீதி உள்ள இரண்டு கைகளை இரண்டு முத்திரைகளைக் காட்டியவாறும் நின்றுள்ள கோலத்தில் காட்சி தருகிறார். ஆனால் அவரைப் போன்ற வடிவமைப்பில் உள்ள உத்சவ மூர்த்தியிலோ அப்ரமேயர் தனது இரண்டு மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.அவர் கொடுக்கும் அருள் அளவில்லாதது என்பதையே அப்ரமேய என்ற வார்த்தையின் அர்த்தம்.

அரவிந்தவல்லித் தாயார் 
அந்த ஆலய சன்னதியை விட்டு வெளியில் வந்து இடது புறமாக பிராகாரத்தில் பின்புறம் சென்றால் சில படிக்கட்டியில் ஏறிச் சென்று அரவிந்தவல்லித் தாயாரை தரிசிக்க வேண்டும். இங்குள்ள தாயாரைப் பற்றியும்  உள்ள சிறு செய்தி என்ன என்றால், இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கத்தில் இருந்த விஷ்ணு தீர்த்தம் என்ற குளத்தில்தான் தாயார் தோன்றினாராம். தாயாரும் அப்ரமேயரான விஷ்ணுவின் பின்புற சன்னதியில் நின்றவாறு உள்ளார்.

நவநீத கிருஷ்ணர் 

அங்கிருந்தே அதே பிராகாரத்தில் சென்றால் எதிர் மூலைப் பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணரை தரிசிக்கலாம். இங்கு கிருஷ்ண தவழும் நிலைக்கான தோற்றத்தில், ஒரு குழந்தைப் போலக் காட்சி தருகிறார்.


குழந்தைப் பேறு அற்றவர்கள் இங்குள்ள சன்னதியில் அவருக்கு அர்ச்சனை செய்து குழந்தைப் பிறந்தால் தொட்டில் போடுவதாக வேண்டிக் கொண்டு செல்வார்கள். குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு இங்கு வந்து சிறு மரக்கட்டையிலான தொட்டிலைக் கட்டுகிறார்கள்.


இங்குள்ள கிருஷ்ணரின் அழகில் மயங்கி கீர்த்தனை இயற்றினாராம் புரந்தரதாசர். உண்மையில் அந்த கிருஷ்ணரைப் பார்த்தால் மிக அழகான குழந்தை வடிவில் காணப்படுகின்றார், அந்த வடிவம் நம் கண்களிலேயே  நிற்கின்றது.

அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் ராமபிரான் சீதை மற்றும் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன்  ராமபிரான் அமர்ந்து இருக்க லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி நிற்க ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். அப்ரமேயர் ஆலயத்துக்கு செல்பவர்கள் ராமர் சன்னதியையும் தரிசிக்காமல் வந்தால் அது நல்ல பலனைத் தராது, காரணம் விஷ்ணுவை தரிசித்து வணங்கிய ராமரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதினால் ராம அவதாரத்தில் இருக்கும் தன்னையும் வழிபட வேண்டும் என விஷ்ணு விரும்புவாராம்.

அந்த சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் வேணுகோபல ஸ்வாமி சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு, இடது கையில் புல்லாங்குழலை வைத்தவாறு காட்சி தருகிறார். அடுத்த சன்னதியில் சுதர்ஷன நரசிம்மரும் காட்சி தருகிறார்.

இந்த ஆலயம் உள்ள மாலூரைக் குறித்தும் ஒரு அற்புதமான கதை உள்ளது.
முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில்  தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொல்லாமல் கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்றுவிட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன். ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன் கைகால்கள் மீண்டும் முளைத்தனவாம். ஆகவே  தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல  மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த   ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது.

மிகப் பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டு உள்ள ஆலயத்தின் நுழை வாயிலின் வெளியில் சுமார் முப்பது அடி உயர துஜஸ்தம்பம் காணப்படுகின்றது.


இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் என்று சொல்ல படுகிறது .ராம பிரான் இங்கு தங்கி அப்ரமேய சுவாமிகளை தரிசனம் செய்துள்ளதாக சொல்லபடுகிறது . ராமன் வணங்கிய அப்ரமேய பெருமாள் என்பதால் கோவிலுக்கு ராமப்ரமேய சுவாமி கோவில் என்று பெயர் வந்தது . ராமன் வணங்கியதால் தான் மல்லூர் தக்ஷின அயோத்தி என்று அறியபடுகிறது .ராமானுஜர் இங்கு விஜயம் செய்துள்ளார். புரந்தரதாசரரின் மிகவும் பிரபலமான 'ஜகதோத்தாரா' மல்லூர்  நவநீத கிருஷ்ணனை குறித்து பாடிய கீர்த்தனை .இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு ஒரு பெரிய மணல் பரப்பில் தான் இந்த கோவிலின் அடித்தளம் உள்ளதாக சொல்லபடுகிறது. கெட்டியான அடித்தளத்தில் இந்த கோவில் எழுப்பப்படவில்லை என்று சொல்லபடுகிறது .


இந்த கோவிலில் பெருமாள், தாயார், கிருஷ்ணன் சன்ன்னதிகள் தவிர வைகுந்தநாத சுவாமி, ஆழ்வார்கள், ராமானுஜர், கூரத்தாழ்வார், வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள முனிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளது.

காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் ,மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும் .

ஆலய விலாசம்:APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu :   09448077348


































No comments:

Post a Comment