Monday 13 June 2016

அன்னை மீனாட்சி வரலாறு!

 
அன்னை மீனாட்சி வரலாறு!
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு
அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.





அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.


அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.


மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.


இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.


கால் மாறி ஆடியவனின் கருணை:





மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.


தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.


“”ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.


“”பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.


சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.


பெரிய மூர்த்தி:


பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும் இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.


சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.


“சதா’ என்றால் “எப்போதும்’ என பொருள். எங்கு திரும்பினாலும் சிவனின் முகம். எதைக்கேட்டாலும் “சிவசிவ’ என்னும் மந்திர ஒலி. இதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டது “சதாசிவம்’ சிலை. இந்த சிலையை ஏழுநிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தில் காணலாம். திருநீறு விநாயகரை வணங்கிவிட்டு, அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் நின்று இந்த கோபுரத்தை கவனித்தால் அருமையான சதாசிவ தரிசனம் கிடைக்கும்.


அம்பிகை அணிவித்த மாலை :


திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், “பிள்ளைத்தமிழ்’ பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.


அவருக்கு தன் கழுத்தில் அணிந்துஇருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியது, அம்பிகை மாலை அணிவித்தது ஆகிய நிகழ்ச்சிகளை அம்பாள் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் ஓவியமாக காணலாம்.


இருபதாம் நூற்றாண்டில் நடந்த கும்பாபிஷேகங்கள்
1.7.1923 (ருத்ரோத்காரி ஆண்டு, ஆனி 17, புதன்கிழமை)
28.8.1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை)
26.6.1974 (ஆனந்த ஆண்டு, ஆனி 12, புதன்கிழமை)
7.7.1995 (யுவ ஆண்டு, ஆனி 23, வெள்ளிக்கிழமை)


கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி :


அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!


மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர்.


நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.


ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.


அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.
மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.


ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம் ‘ என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.


எட்டுகாலம் எட்டு கோலம்:


தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.


திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.


இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.

கிளி ஏந்திய காரணம்



 ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.

சித்தருக்கு பூப்பந்தல் வழிபாடு



18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.


உபதேச தெட்சிணாமூர்த்தி முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் “உபதேச தெட்சிணாமூர்த்தி’யாக காட்சி தருகிறார். இவரை “வேததெட்சிணாமூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள்.


கொடிமரத்தில் சம்பந்தர்: சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார்.


சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.

முக்குறுணி விநாயகர்



 மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.


அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.


தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


இரட்டை விநாயகர்:


மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.


விபூதி விநாயகர்:


தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.


கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.


கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.


அஷ்டசக்தி மண்டபம்:


கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்கு நுழையும்போது முதலில் வரும் மண்டபமே அஷ்டசக்தி மண்டபமாகும். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் காட்சியளிக்கின்றனர்.


இவர்களை வணங்குவோர் தைரியமாக இருப்பர் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அன்னதான மண்டபமாக இருந்தது. பிற்காலத்தில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் தானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்ற பெயர் இப்போதும் இருக்கிறது.


மீனாட்சி நாயக்கர் மண்டபம்: அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இதன் நீளம் 160 அடி. ஆறு வரிசைகளாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி கட்டம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டியதால் இந்த பெயர் பெற்றது.


முதலி மண்டபம்: இந்த மண்டபத்தை கடந்தை முதலியார் கட்டினார். சிவபெருமான் பிட்சாடணராக இங்கு காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஊஞ்சல் மண்டபம்:


அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் இதை கட்டினார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளவாயான ராமப்ப அய்யர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


சங்கிலி மண்டபம்:


அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. இதில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சொக்கநாதர் கருவறைக்கு வடக்கே கரியமாணிக்க பெருமாள் கோயில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த கோயிலின் தூண்களாக இவை இருக்கக்கூடும் என ஒரு கருத்து நிலவுகிறது. நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டுள்ளதால் அவர்களும் இதை நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.


நூற்றுக்கால் மண்டபம்:


இந்த மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. நடராஜ பெருமான் இங்கு நடனம் ஆடுகிறார். தற்போது இந்த மண்டபம் தியான மண்டபமாக உள்ளது. சுவாமி சன்னதிக்கு வெளியே கொடிமரத்தின் அருகே அமைந்துள்ளது. 1526ல் சின்னப்ப நாயக்கர் இதை கட்டினார்.


புது மண்டபம்:


கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ள மண்டபத்தை “புது மண்டபம்’ என்பர். இதன் உண்மை பெயர் “வசந்த மண்டபம்’. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் தண்ணீரை நிரப்புவர். அப்போது மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.


அனேகமாக இந்த மண்டபம்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் “புது மண்டபம்’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபம் 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப் பட்டது. திருவிழா காலங்களில் இந்த மண்டபத்தில்தான் சுவாமி எழுந்தருளி இருக்கிறார்.


ராவண அனுக்ரஹ மூர்த்தி, திரிபுராந்தகர், காளி, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, கல்யானைக்கு கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்கு பால்கொடுக்கச் செய்த லீலை, வியாக்ரபாதர், பதஞ்சலி, வாயற்காவலர்கள், தடாதகை பிராட்டி, சுந்தரேஸ்வரர், சந்திரன், சூரியன், ஏகபாதமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, குதிரை வீரர்கள், யாழிகள், மனைவியருடன் திருமலை நாயக்கர் மற்றும் ஒன்பது நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கம்பத்தடி மண்டபம்



 சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இந்த மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராஜர், சுகாசனர், காலசம்ஹாரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், கலியாணசுந்தரர், திரிபுராந்தகர், சங்கர நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், இடபாரூடர், ஏகபாதமூர்த்தி, சக்ரதரர், சலநீதரானுக்கிரர், தட்சிணாமூர்த்தி, கஜசம்ஹாரர், சண்டே சானுக்கிரர், சோமசுந்தரர், கிராதர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.


ஆயிரங்கால் மண்டபம்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய கோயில்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஆயிரங்கால் மண்டபம் பெற்ற சிறப்புடையது.


நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் இந்த மண்டபத்தை அமைத்தார். தொன்மையான பொருட்களின் களஞ்சியமாக இந்த கலைக்கூடம் இருக்கிறது. கண்ணப்பர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி உருவச்சிலைகள், இசைத்தூண்கள், அன்னத்தின்மீது அமர்ந்த ரதி ஆகிய சிலைகள் குறிப்பிடத்தக்கது.


புதுமண்டப சுருக்குப்பை ரகசியம் : “நீ தர்மத்தை காப்பாயானால் தர்மம் உன்னை காக்கும்’ என்பர். தொழில் மீது பக்தியுடையவன், தன் தொழில்தர்மத்தையும், பழமையையும் காப்பதில் அக்கறை உடையவனாக இருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில், புதுமண்டபத்திலுள்ள தையல் கலைஞர்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.


அவர்கள் கிராமத்துப் பெண்மணிகளின் “மணிபர்ஸான’ சுருக்குப்பை தைக்கும் போது, பையினுள் சில்லரை காசு வைத்த பிறகு தான் தைக்க ஆரம்பிப்பார்கள். தங்களிடம் அவசரத்துக்கு சில்லரை இல்லாவிட்டாலும், யாரிடமாவது வாங்கி வைத்த பிறகு தான் தைப்பார்கள். இப்படி ஒரு வித்தியாசமான தொழில் தர்மம்! இப்போதும், சில கடைகளில் மணிபர்ஸ் வாங்குபவர்களுக்கு காசுகளை உள்ளே வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.

பொற்றாமரைக்குளம்



 கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.


சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை “பாண்டியன் படித்துறை’ எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.


மாதப்பெயரில் வீதிகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார் களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து”ஆவணி மூல வீதி’ என அழைக் கப்படுகிறது. சிவனின் திரு விளையாடல்களில் “பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியை சுற்றி வருகிறார்.


ஒரு நாள் மட்டும் யானை பவனி:


மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,


“யானை யானை அழகர் யானை
ஆடுமாம் சொக்கர் கொம்பானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை”
என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது.


முதல் திருவிளையாடல்: மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

கடம்ப மரம்



 மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் என்னும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரைக் கண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சுவாமி சன்னதியில் உள்பிரகாரத்தில் துர்க்கை சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருக்கிறது.
இதனை பக்தர்கள் தொட்டு வழிபாடு செய்வதால் மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சுற்றிலும் கம்பிஅரண் போடப்பட்டுள்ளது. மேல கோபுரத்தில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் ஒரு கடம்பமரம் உள்ளது. நன்கு வளர்ந்து பருத்த மரமாக உள்ளது.


தாயுமானவர் :


கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் “தாயுமானவர்’ எனப்படுவார். சிவபெருமானுக்கு “தாயுமானவர்’ என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.


தூணில் சரபேஸ்வரர் :


இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்.


மாறும் ஆட்சிகள்: ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது.


திருமலை நாயக்க மன்னர், சைவ, வைணவ ஒற்றுமை கருதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மீனாட்சி அம்மனின் மாசி திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார். விவசாயிகளின் ஓய்வுகாலம் கருதி சித்திரைக்கு விழாவை மாற்றியிருக்க வேண்டும். விழா மாற்றப்பட்ட பிறகு மீனாட்சியம்மனுக்கு சித்திரையிலும், சொக்கநாதருக்கு ஆவணியிலும் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.


இதன் பிறகு அம்மன் சித்திரை முதல் 4 மாதமும், சுவாமி ஆவணி முதல் 8மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். மதுரையில் மீனாட்சிக்கே முக்கியத்துவம் என்றாலும், தன் கணவருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால் எட்டு மாதங்களாக மாறியது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ!


புதன் தலம்: நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக் கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.


ககோளம் – பூகோளம்




 மீனாட்சி கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் மிகவும் அதிசயப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு ஓடுகிறதா, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.


ககோளம் : சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது.
மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது.


அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.


பூகோளம் : இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பதுபோல மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது.


பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம்.
























No comments:

Post a Comment