Monday 13 June 2016

மரகத வல்லிக்கு மணக்கோலம்!

மதுரை மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழாவையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் விளக்கும் வரலாறு படங்களுடன் :

மரகத வல்லிக்கு மணக்கோலம்!

மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

மீனாட்சி அம்மனுக்கு கல்யாணம் : மலையத்துவ பாண்டிய அரசின் புதல்வியான தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் சிறந்து விளங்கினாள். உலகில் எல்லா இடத்திலும் தன் வெற்றிக் கொடியை நாட்டி இறுதியில் திருகைலாயம் சென்றபோது அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து அவர் மீது காதல் வயப்பட்டு பின்னர் சிவனாரையே மணந்து கொள்கிறார்.

இந்த நிகழ்வு சித்திரைத்திருவிழாவில் நடக்கிறது.



திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்று,

பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள்.


அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர்.

அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.




சித்திரை திருவிழாவிற்கான காரணம்

முன்னொரு காலத்தில் அழகர்மலையில் வசித்து வந்த முனிவர் ஒருவர் அழகர் மலை தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துர்வாசக முனிவரைக் கவனிக்கவில்லை.

ஆனால் வேண்டுமென்றே தன்னை வரவேற்க தவறிய முனிவரை மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு துர்வாசகர் சாபம் அளித்தார். இதனைக் கேட்ட முனிவர் தனக்கு சாப விமோசனம் கோரினார்.

அதற்கு துர்வாசகர் வைகை ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். தவளையாக வைகை ஆற்றில் வசித்து அழகரை நினைத்து பிரார்த்தனை செய்தார்.

அழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தசஅவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வே முதலில் ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக சோழவந்தானில் கொண்டாடப்படுகிறது..

இறைவன் அன்னை மீனாட்சியை மதுரையில் மணம் புரிந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீனாட்சியின் சகோதரரான அழகர் மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.

அப்பகுதி கள்ளர்கள் (திருடர்கள்) நிறைந்த பகுதியாகையால் அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக திருடர்கள் மற்றும் காவலாளிகளிடமிருந்து தங்கைக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தபோது மீனாட்சி கல்யாணம் நடந்ததைக் கேள்வியுற்று கோபம் கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.

மீனாட்சியும் தன் கணவருடன் வைகை ஆற்றில் உள்ள தன் தமையனாரைச் சந்தித்து ஆசி பெற்று சீர் பொருள்களை (திருமண பரிசுப் பொருள்களை) பெற்றார் எனவும், பின்னர் வண்டியூர் அருகில் உள்ள வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தந்து பின் அழகர் கோவில் புறப்பட்டார் எனவும் இவ்விழாவிற்கான கதையாகக் கூறப்படுகிறது.

விழா கொண்டாடப்படும் முறை

இவ்விழாவிற்கான முதல் நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.


 
முதல் நாள்: கற்பக விருட்சம் மற்றும்  சிம்ம வாகனம்

சித்திரை திருவிழாவின் முதல் நாள், சொக்கர் கற்பக விருட்சத்திலும், அம்மன் : சிம்ம வாகனத்திலும் காட்சி தருவார்கள்.

இந்த காட்சியின் நோக்கம் இறைவன் உலகத்தின் ஆதாரமாய் இருப்பவன் என்பதைக் குறிக்கும் பொருட்டு...கற்பக விருட்சம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் என்ற பொதுவான கருத்துக்கு, உயிர் சேர்க்க, மக்கள் எந்த வரம் வேண்டி நின்றாலும் இங்கு கிடைக்கும் என்பதை குறிக்க ஐயனும், கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால் மனித உயிர்கள் ஆணவப் பேய்கொண்டு ஆடுவார் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்மவாகனத்திலும் வருவதாய் பொருள்,


இரண்டாம் நாள் : அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்

மீனாச்சியும், சொக்கரும், அன்ன மற்றும் பூத வாகனத்தில் எழுந்தருள்வர்..ஐம் பூதங்களையும், மனிதன் அடக்கி வாழ்வில் முக்தி பெறவேண்டும், என்பதற்காய் அய்யன் பூத வாகனத்திலும், நல்லது கெட்டதும் கலந்திருக்கும் இந்த உலகத்தில் நல்லதை மட்டும்   நாம் கருத்தில் வைக்க வேண்டும் என்பதற்காய் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி தருவார்கள்...





மூன்றாம் நாள் : இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு


சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் மீனாட்சியும், சொக்கரும், இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனுவாகனத்தில் எழுந்தருள்வர்...



நான்காம் நாள்  : தங்கப் பல்லக்கில் பவனி

மீனாச்சியும் சொக்கரும் தங்கப் பல்லக்கில் உலா வருவார்கள்..இந்தப் பவனியின் நோக்கம், இந்தப் பலக்கில் சாமியின் திருவுருவங்களை திரைச்சீலை மறைத்திருக்கும்... நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இறைவன் அன்றி யாவரும் அறியோர்.நல்லதும்,கெட்டதும்  கலந்திருக்கும்  உலகத்தில்,  நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும்  என்பதை  உணரத்தவே இந்த பவனி...



ஐந்தாம் நாள்    : குதிரை வாகனம் 

அம்மனும், சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் உலாவருவார்கள்..அறம், பொருள், இன்பம், வீடு பேறு, என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும் தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்.. 








சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் தங்களின் வீரத்தை நிலைநாட்டுவதற்காக, எல்லா தேசங்களுக்கும் படையெடுத்துச்
செல்வது வழக்கம். பாண்டிய நாட்டின் இளவரசியான மீனாட்சியும் திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார்.பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர்களின் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வென்று வெற்றி வாகை சூடினாள்.

அதன் பிறகு சிவனின் இருப்பிடமான கைலாயம் நோக்கிச் சென்றாள். நந்தீஸ்வரர் தலைமையில் சிவகணங்கள் போரிட்டுத் தோற்றனர். சிவ பெருமானே போர் புரிய நேரில் வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரின் அழகைக் கண்ட மீனாட்சி நாணத்தால் முகம் சிவந்தாள். 'இவரே உன் மணாளர்' என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது.இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கி, மனதில் தைரியம் உண்டாகும்.

 

சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.

'ஊர் கூடித்தேர் இழுத்தது போல' என்னும் சொல்வார்கள். சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். நாடாளும் மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். 

தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக வாழ்வு உண்டாகும்.


திருக்கல்யாணம் இரவு பூப்பல்லக்கில் இறைவன் இறைவி ஊர்வலம் நடைபெறுகிறது. இத்துடன் மீனாட்சி கல்யாணம் முடிவடைகிறது. தேரோட்டத்தன்று இரவு அழகர் கோவிலிருந்து அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மதுரையை நோக்கி வருகிறார்.


ஒளிரும் வைகை ஆறு

மதுரையின் மூன்றுமாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் ஏராளமானோர் பங்கேற்று வரவேற்கின்றனர்.

மறுநாள் அதிகாலையில் அதாவது சித்திரை பவுர்ணமி அன்று மீனாட்சி கல்யாணம் நிறைவு பெற்றதைக் கேள்வியுற்று சீர்வரிசைப் பொருட்களுடன் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இங்கு அழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளுகிறார். அழகர் அணிந்திருக்கும் பட்டாடையின் நிறத்தைக் கொண்டு எதிர்வரும் ஆண்டின் வளமானது கணிக்கப்படுகிறது.


ஆற்றில் இறங்கும் அழகர்


மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அழகரைக் கண்டு வாழ்த்து பெறுவதற்காக வைகையை அடைகின்றனர். இங்கு தன் தங்கை மீனாட்சிக்கு சீர் பொருட்களை பரிசளித்து வாழ்த்துக்களை அழகர் தருவதாக கூறப்படுகிறது.

பின் அங்கிருந்து ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. இந்நிகழ்வின் போது அழகரை தெற்கு மாசி வீதியில் வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்பார்.

பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.

மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வாரிபுரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார்.

அன்று இரவு இங்கு அழகரை பூப்பல்லக்கில் வைத்து உற்சவம் நடத்துகின்றனர். மறுநாள் காலை அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.


பாரம்பரியம், கலாச்சாரம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் சித்திரைத் திருவிழாவிற்கு நாமும் ஒரு முறை சென்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அழகரை தரிசித்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோம்.



No comments:

Post a Comment